

சைவமும் வைணவமும் போற்றும் தென்னாட்டுக் கோயில்களில் சித்திரை மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களின்போதுதான் தலைமுறை தாண்டி மனங்களின் சங்கமம் நடந்து கொண்டிருந்தது. கரோனா தொற்றுப் பரவலால் உலகம் முழுவதும் மத ஆலயங்கள் மூடப்பட்டு கடவுளர்கள் பக்தர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். மண்ணின் மணத்தையும் பண்பாட்டின் செழுமையையும் போற்றிப் பாதுகாப்பதுதான் திருவிழாக்களின் அடிப்படை. ஆலயத்தில் இருக்கும் இறைவன், தேவாலயத்தில் இருக்கும் தேவன், தர்காக்களில் நிறைந்திருக்கும் இறை, இந்த ஆண்டு காண மறந்திருக்கும் விழாக்களைப் பற்றிய ஒரு சிறு தொகுப்பு.
மயிலை அறுபத்து மூவர் விழா
தென்னாடுடைய சிவனே போற்றி என்பார்கள். அத்தகைய சிவனின் அருட்கொடை கருணையைத் தனதாக்கிக் கொண்ட 63 நாயன்மார்களைப் போற்றும் விழா, பங்குனி மாதத்தில் சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த அறுபத்து மூவர் விழா. பாடல் பெற்ற இத்தலத்தில்தான் திருஞானசம்பந்தர், இறந்த அங்கம்பூம்பாவையை சாவின் பிணி நீக்கி மீட்டெடுத்தார் என்பார்கள் அருளாளர்கள். 63 நாயன்மார்களுக்கு கபாலீஸ்வரர் காட்சியளிக்கும் இந்த விழா பங்குனிப் பெருவிழாவாகக் கொண்டாடப்படும்.
மதுரை சித்திரைத் திருவிழா
தென் தமிழகத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவாக சைவம், வைணவம் இரு பெரும் சமயத்தினராலும் கருதப்படும் திருவிழா மதுரை மீனாட்சி திருமணமும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறை 5-ம் நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்தத் திருவிழா 12 நாட்களுக்கு களைகட்டும். பெரும் சமயங்களுக்கு ஊடாக கருப்பண்ணசாமி போன்ற சிறு தெய்வங்களுக்கும் இந்தத் திருவிழாக்களில் முக்கியத்துவம் இருக்கும்.
திருவையாறு ஐயாறப்பர் திருவிழா
சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு அடுத்துவரும் விசாக நட்சத்திரத்தன்று திருவையாறு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகி உடனுறை கோயிலின் திருவிழா மிகவும் விசேசம். கடவுளர் தம்பதி சுற்றியிருக்கும் ஊர்களான திருப்பழனம், திருநெய்தானம், திருப்பூந்துருத்தி, திருவேதிக்குடி உள்ளிட்ட ஏழு ஊர்களில் இருக்கும் பாடல் பெற்ற தலங்களுக்கு தரிசனம் அளிக்க கிளம்பிவிடுவார்கள். அந்தந்த ஊரின் தலத்திலுள்ள இறைவன் இவர்களை வரவேற்க பக்தர்களிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடும். தஞ்சை மாவட்டத்தின் புகழ் பெற்ற ஏழூர்த் திருவிழா என்றும் இதை அழைப்பர். இந்தத் திருவிழாவின்போது ஒவ்வொரு ஊரிலும் புகழ் பெற்ற மேதைகளின் இசையை நம் காதுகளுக்குக் கடத்துவதால் காற்று கர்வப்பட்டுக் கொள்ளும்!
நாகூர், வேளாங்கண்ணி திருவிழாக்கள்
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய வைபவமும் நாகூர் ஆண்டவரின் சன்னிதியில் நடக்கும் சந்தனக்கூடு பெருவிழா வைபவமும் பல லட்சம் பக்தர்களுக்கு அருள் கொடையை இறைவன் வாரி வழங்கும் விழாக்கள்.