Published : 06 May 2020 09:10 PM
Last Updated : 06 May 2020 09:10 PM

கரோனா சூழ்ந்து கொண்டது என்றாலும், வாழ்க்கை அதைவிடப் பெரியது - கரோனா ஊரடங்கு அனுபவம் பகிரும் எச்.ராமகிருஷ்ணன்

கரோனா சூழ்ந்து கொண்டது என்றாலும், வாழ்க்கை அதைவிடப் பெரியது என்பதை மறக்கலாமா என்று கரோனா ஊரடங்கு குறித்து எச்.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வருகிறார்கள். கடந்த 40 நாட்களாகவே பொதுமக்கள் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள்.

வீட்டிற்குள்ளேயே இருப்பதால் கிடைக்கும் அனுபவம் தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். தற்போது வீட்டிற்குள்ளேயே இருக்கும் அனுபவம் குறித்து சென்னை தூர்தர்ஷனின் செய்தி மேனாள் இயக்குநர் எச். ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:

"என்னையே அடையாளம் தெரியவில்லை. நாற்பது நாட்களாக, ஊரைப் போலவே நானும் முடங்கித்தான் கிடக்கிறேன். ஆனால், என்னைப் பற்றி இதுவரை எனக்குத் தெரிந்திராத நிறைய விஷயங்கள் இப்போது தெரியவருகின்றன. நிலைமையின் யதார்த்தத்தை ஒப்புக்கொள்வது என்பது ஒன்று. அதை விட, என்னையே பெருமளவுக்கு இது வெளிப்படுத்தியிருக்கிறது. நான் இப்படிப்பட்டவன் என்பதை இதுவரை அறிந்திலேன். ஒரு தம்படிக்குப் பிரயோஜனம் இல்லாதவன் என்ற எனது எண்ணம் சற்றே (ஆம், சற்றே) மாறியிருக்கிறது.

கல்லூரியில் படிக்கும் வரை, நான் விரும்பி, வீட்டில் இருந்ததே இல்லை. நண்பர்களுடன் சுற்றித் திரிந்துகொண்டே இருப்பேன். பிறகு வேலையில் சேர்ந்து, திருமணம் வரையில் விடுதியில் தங்கியிருந்தபோதும் இப்படியே. காஸினோ, மினெர்வா, மிட்லேண்ட் போன்ற அந்தக் காலத்துத் திரை அரங்குகளுக்கோ, மெரினாவுக்கோ அல்லது ஸ்வாகத் ஹோட்டலுக்கோ செல்வோம். விடுதி அறையில் இரவில் மட்டுமே இருப்போம்.

திருமணத்துப் பிறகு, எனது அலுவல் நிமித்தமாக, கிட்டத்தட்ட எப்போதுமே சுற்றிக்கொண்டிருக்க வேண்டி இருந்தது. பத்துப் பதினைந்து ஆண்டுகள், வீடு வந்து சேரவே இரவு பத்து மணி ஆகி விடும். அது அந்தக் காலம். இந்த முழு ஊரடங்கு வந்தபிறகு, நான் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லவில்லை. முக்கால்வாசி நேரம் என் அறையிலேயே இருக்கிறேன். நான் 'முதிர்ச்சி' அடைந்திருப்பதாக மனைவி கூறுகிறார். முதிர்ச்சியின் பொருள் இப்போது தான் எனக்குப் புரிகிறது.

தொலைக்காட்சிச் செய்திகளிலும், மிகவும் மெலிந்துபோயிருக்கும் செய்திப் பத்திரிகைகளிலும் கரோனா செய்திகள் மட்டுமே. முதல் நாலு, ஐந்து நாட்களில் கரோனாவைப் பற்றி நிறையப் படித்து, ஒரு சிறிய ஆராய்ச்சியே செய்து முடித்தேன். அதன் பின் அலுப்புத் தட்டிவிட்டது. அங்கிங்கெனாதபடி எங்குமே கரோனாவைப் பற்றியே பேச்சு என்றால், எப்படித் தான் இருக்கும்? கரோனா நம்மைச் சூழ்ந்துகொண்டுவிட்டது என்பது உண்மை எனினும், வாழ்க்கை என்பது அதைவிடப் பெரியது என்பதை மறந்துவிடலாமா?

நான் எங்கும் செல்லவில்லை என்பது ஒருபுறமிருக்க, யாருமே வீட்டுக்கு வருவதும் இல்லை. ஊரடங்குக்கு முன் வரை, காலையில் பால்காரர், செய்திப் பத்திரிகைக்காரர், தபால்காரர், இஸ்திரிக்காரர், கூரியர்காரர், அலுவலகம் சார்ந்தவர்கள், நண்பர்கள், வீட்டு வேலை செய்யும் அம்மா, காரோட்டி, மனைவியைச் சந்திக்க வருவோர்...இப்படி, அழைப்பு மணி ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும். இப்போதோ, அழைப்பு மணி மௌன விரதம் பூண்டிருக்கிறது.

உற்றார் உறவினர்களிடம் எப்போதாவது கைப்பேசியில் பேசலாம். எப்போதுமே பேசிக்கொண்டு இருக்க முடியுமா? அதையும் குறைத்துக் கொண்டேன். பரணிலிருந்து பெட்டிகளைக் கீழே இறக்கி அவற்றில் இருக்கும் பழைய கடிதங்கள், காகிதங்கள், புகைப்படங்கள், ஆல்பங்கள் போன்றவற்றைப் பல நாள் புரட்டிக்கொண்டிருந்தேன். அவை என்னை மீண்டும் அந்தக் காலத்துக்குக் கொண்டு சென்றன. அதற்குமேல் அதில் நாட்டம் செல்லவில்லை.

வாயிற்படி சென்று சாலையைப் பார்த்தால், வெறிச்சோடி கிடக்கிறது. நான் முதன் முதலில் ஊரிலிருந்து 1954-ஆம் ஆண்டு, அதாவது என்னுடைய 13-வது வயதில் சென்னை வந்தபோது, எப்போதாவது ஒரு 'ப்லெஷர்' கார் (தனியார் கார்களை அப்படித் தான் சொல்வார்கள்) ஓடிக்கொண்டிருக்கும். இப்போது அதுவும் இல்லை!

இதில் ஒரு சுவையான விஷயம் என்னவென்றால், நான் மிகுந்த மனநிறைவுடன் இருக்கிறேன். அது இல்லையே, இது இல்லையே என்ற எண்ணம் அறவே இல்லை. ஆக, என்னுள் இதுவரை எனக்குத் தெரியாமலே ஒரு துறவியும் இருந்திருந்தாரோ? எப்போதும் நண்பர்கள் புடை சூழ, எப்போதுமே எல்லோரும் என்னைக் கவனித்தபடியே இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் பறந்தோடி விட்டது. தனிமையே இப்போது சொர்க்கமாகிவிட்டது.

இன்னொரு முக்கியமான விஷயம். நான் இரு வாரங்களுக்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள முடி திருத்தும் நிலையம் செல்வது வழக்கம். ஒன்றரை மாதமாக அது இல்லாமல் போய்விட்டது. அதே போல நான் யாரையும் போய்ப் பார்க்காததாலும், யாரும் என்னைப் பார்க்க வராததாலும் ஏன் முகச் சவரம் செய்ய வேண்டும் என்று இருந்துவிட்டேன். இப்போது கண்ணாடி முன் சென்று பார்த்தால், எனக்கு என்னையே அடையாளம் தெரியவில்லை. முடி திருத்தும் நண்பர் என்னை எவ்வளவு அழகுபடுத்தியிருக்கிறார் என்பதை இப்போது உணர்கிறேன். அடுத்த தடவை நான் அவரிடம் செல்லும்போது, அவருக்குக் கத்தரிக்கோல் போதுமா என்பதை அறியேன்

இவ்வாறு எச்.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x