

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பலசரக்கு மொத்த வியாபாரக் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையை நடத்துபவர்கள், கேரள அரசின் பொது விநியோகத்துறை சார்பில் மக்களுக்கு எண்ணெய் உள்ளிட்ட முக்கியமான உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்யுமளவுக்கு செல்வாக்குப் பெற்றவர்கள்.
இந்தக் கடையில் வியாபாரத்தின்போது தனிமனித இடைவெளியைப் பின்பற்றவில்லை என்று கூறி, கடந்த வாரம் திடீரென போலீஸார் அதற்கு சீல் வைத்தார்கள். பொதுவாக, வருவாய்த் துறையைப் பொறுத்த வரையில், ஆர்டிஓதான் சீல் வைக்கும் அதிகாரம் பெற்றவர். குறைந்தபட்சம் ஒரு விஏஓ, தலையாரி முன்னிலையில்தான் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். ஆனால், போலீஸாரே முன்னின்று இதைச் செய்தது வியாபாரிகள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில், இன்று திடீரென அந்தக் கடையின் சீல் அகற்றப்பட்டது. சீல் அகற்றிய கையோடு கடையில் இருந்த சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பண்டல்களை போலீஸார் அள்ளிச் சென்றார்கள்.
இதுகுறித்து ஆண்டிபட்டி வியாபாரிகள் சங்கத்தினர் கூறியபோது, “கரோனாவைக் காரணம் காட்டி சில இடங்களில் போலீஸார் கடைகளில் வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறார்கள். அந்தக் கடைக்காரர் பெரும் செல்வந்தர் என்பதால், போலீஸாரின் தேவைகளைப் பூர்த்திசெய்து கடையைத் திறந்துவிட்டார். மற்ற வியாபாரிகள் எல்லாம் போலீஸாரிடம் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறோம். புகார் செய்யவும் பயமாக இருக்கிறது” என்றார்கள்.
ஒரு பக்கம் உயிரைக் கொடுத்து மக்கள் பணியாற்றும் போலீஸார், இன்னொரு புறம் இப்படியானவர்கள். என்ன செய்யப்போகிறது தேனி மாவட்ட காவல்துறை?