Last Updated : 06 May, 2020 01:03 PM

 

Published : 06 May 2020 01:03 PM
Last Updated : 06 May 2020 01:03 PM

அயோத்திதாசர் 175: அத்தியாயம் 2- வரலாற்றில் நிற்கும் பத்திரிகையாளர்!

தமிழன் இதழ்

இந்தியாவின் முதல் பத்திரிகை 'பெங்கால் கெஜட்' 1780-ல், ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவரால் தொடங்கப்பட்டது. 5 ஆண்டுகள் கழித்து சென்னையில் ரிச்சர்ட் ஜான்ஸ்டோன் 'மெட்ராஸ் கூரியர்' என்ற‌ பத்திரிகையைத் தொடங்கினார். இதைப் பார்க்கையில் இந்திய பத்திரிகைத் துறைக்கு இரண்டரை நூற்றாண்டு கால வரலாறு இருக்கிறது. தொடக்கத்தில் ஐரோப்பிய‌ர், மிஷனரிகள் கட்டுப்பாட்டில் இருந்த பத்திரிகைத் துறை, அச்சுப் பண்பாட்டின் பரவலால் படித்த உயர் சாதியினர், நகரத்தில் வசித்த இதர வகுப்பினருக்கும் பரவிய‌து.

1869 -ல் இருந்து 1943 வரை 'சூரியோதயம்' முதல் 'உதயசூரியன்' வரை தமிழகத்துப் பட்டியலினத்து அறிவுஜீவிகள் மட்டும் 42 இதழ்களை நடத்தியுள்ளதாக ஆய்வாளர் ஜெ.பாலசுப்பிரமணியம் பட்டியலிடுகிறார். அந்த வகையில் இந்திய இதழியல் வரலாற்றிலும், தமிழக சமூக‌ அரசியல் வரலாற்றிலும் அயோத்திதாசரின் ‘தமிழன்’ இதழுக்கு முக்கியமான இடம் இருக்கிறது. இந்திய அரசியல் தளத்துக்கு 'சமூக நீதி' கருத்தியலையும், தமிழக அரசியல் தளத்துக்கு 'திராவிடம்', 'தமிழன்' என்ற அடையாளத்தையும் இந்த இதழே தந்தது. ஏறக்குறைய அழிந்து போயிருந்த‌ பவுத்த பண்பாட்டுக்குப் புத்துயிரும் அதுவே கொடுத்தது. அவரது பத்திரிகையாளர் வாழ்க்கைக்கான ஆதாரங்கள் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் அயோத்திதாசர் வரலாற்றில் காணாமல் போயிருப்பார்.

இந்திய அளவில், ஒடுக்கப்பட்டோரிடம் இருந்து எழுந்த, முதல் காத்திரமான உரிமைக் குரல் 'தமிழன்' உடைய‌து. அது, அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் அயோத்திதாசருடையது. இன்று அவருக்கு கிடைத்திருக்கும் 'நவீன இந்தியாவின் மாபெரும் சிந்தனையாளர்', பவுத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்' தென்னிந்திய சமூகப் புரட்சியின் தந்தை' உள்ளிட்ட கவுரவங்கள் யாவும் தமிழன் இதழ் எழுத்துகள் மூலம் கிடைத்தவையே. ஓலைச் சுவடி சேகரித்தல், ஏடு வாசித்தல், கணிக்கும் கலை, சித்த மருத்துவம் அறிந்த குடும்பத்தில் பிறந்தவர் அயோத்திதாசர்.

அதன் மூலமாக ஓலைச் சுவடிகள் எழுதுதலில் தொடங்கி பத்திரிகையில் எழுதுவது வரை வளர்ந்திருக்கிறார். அவரது பத்திரிகையாளர் முகம் 'திராவிட பாண்டியன்' (1986) இதழ் மூலமாகவே அறிமுகமாகிறது. அந்த இதழின் ஆசிரியர் அருட்தந்தை ஜான் ரத்தினமாக இருந்தாலும், அயோத்திதாசரின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கிறது. இருவரும் இணைந்து தொடங்கிய 'திராவிடர் கழகம்' என்ற அமைப்பின் கொள்கை இதழாக வெளிவந்த 'திராவிட பாண்டியன்' முழுமையாக கிடைக்கவில்லை. இதனால் அவரது எழுத்துக்களை முழுமையாக அறிய முடியவில்லை.

இந்நிலையில் அயோத்திதாசர் 1907ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற வார இதழைத் தொடங்கினார். சென்னை ராயப்பேட்டையில் இருந்து டேப்லாய்டு அளவில் 4 பக்கங்களில் புதன் தோறும் வெளியான அவ்விதழ், அன்றைக்குக் காலணாவுக்கு விற்கப்பட்டது.

‘ஒடுக்கப்பட்டோரை ஒரு பைசாவுக்குப் பெறாதவர் என இளக்காரமாகப் பேசுவோர், ஒரு பைசாத் தமிழனை முழுமையாக அறிந்தால், ஒரு கோடி பொன் என்று பேசுவார்’ எனத் தன் இதழுக்கு மதிப்புமிகு பெயர்க் காரணம் கொடுத்தார் அயோத்திதாசர். மேலும், 'உயர் நிலையையும், இடைநிலையையும், கடைநிலையையும் பாகுபடுத்தி அறிய முடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றை கற்பிப்பதற்காகச் சில தத்துவவாதிகளும், இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாரும், இலக்கிய வாதிகளும் ஒன்றுகூடி இந்த இதழைத் தொடங்கியதாக அவர் அறிவித்தார்.‌‌

தொடக்கத்தில் சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிமூலம் பிள்ளையின் புத்திஸ்ட் பிரஸ்சில் அச்சான 'ஒரு பைசாத் தமிழன்', ஓராண்டுக்குப் பின் ‘தமிழன்’ என பெயர் மாற்றம் பெற்றது. கோலார் தங்கவயல் மாரிகுப்பம் வாசகர்கள் அயோத்திதாசருக்குப் புதியதாக அச்சு இயந்திரம் ஒன்றை வாங்கிக்கொடுத்தனர். அதற்கு ‘கவுதமா பிரஸ்’ என பெயர்ச்சூட்டி 1914-ம் ஆண்டு மே 5-ம் தேதி தான் இறக்கும் வரைன் ‘தமிழனை' தவறாமல் வெளியிட்டார். தன் அரசியல் செயல்பாட்டுக்கும், பவுத்த மீட்டெடுப்புக்கும் ‘தமிழன்’ இதழை வாகனமாகப் பயன்படுத்தினார் தாசர். அதன் மூலமாகவே அனைத்து பவுத்த சங்கங்களையும் ஒருங்கிணைத்து பள்ளி, நூலகங்களை நடத்தினார்.

அன்றைய சமூக அரசியல் சம்பவங்கள் பற்றி கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார். ‘புத்தரது ஆதி வேதம், இந்திர தேச சரித்திரம், திருவள்ளுவர் சரித்திரம்’ உள்ளிட்ட வரலாற்று தொடர்களையும் மரபான ஆய்வு முறையோடு எழுதினார். ஜி.அப்பாதுரையார், ஏ.பி.பெரியசாமிப் புலவர், இ.நா.அய்யாகண்ணு புலவர், பி.லட்சுமி நரசு, ஸ்வப்பனேஸ்வரி அம்மாள், டி.சி.நாராயணசாமி உள்ளிட்டோரும் தமிழனில் தொடர் கட்டுரைகளை எழுதினர். அயோத்திதாசரின் புலமையால் வியந்த பட்டியலினத்தைச் சாராத, தமிழ் அல்லாத‌ அறிவுஜீவிகள் பலரும் தமிழனில் தொடர்ந்து எழுதினர்.

பவுத்தத்தின் குறியீடான தாமரையை முகப்பாகக் கொண்டு நவீன அரசியல், ஆய்வுக் கட்டுரை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, உயர்சாதி ஆதிக்க எதிர்ப்பு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், பவுத்தம், பெண் விடுதலை போன்ற முற்போக்கு கருத்துகளுக்கு முன்னுரிமை அளித்தார் அயோத்திதாசர். இலக்கியம், அறிவியல், மருத்துவம், விவசாயம், வானியல் அறிக்கை, வாசகர் கேள்வி - பதில் உள்ளிட்டவையும் மூன்று பத்திகளில் நெருக்கமான எழுத்தில், நேர்த்தியான வடிவமைப்புடன் பிரசுரமாகின. இக்காலத்திலே ஊடகங்களில் பெண்களுக்கான தனி பகுதிகள் கிடைக்காத நிலையில், நூறாண்டுகளுக்கு முன்பே தமிழனில் மகளிருக்கான 'லேடீஸ் காலம்' வெளிவந்திருக்கிறது. ஸ்வப்பனேஸ்வரி அம்மாள் 'திராவிட பெண்களின் பூர்வ சரித்திரம்' தொடர் எழுதும் அளவுக்கு பெண்களுக்கு முன்னுரிமை அளித்திருக்கிறார் பண்டிதர்.

இதே போல அச்சு இதழ்களில் இப்போது வெளியாகும் கேள்வி பதில் வடிவத்தை அயோத்திதாசர் அப்போதே சிறப்பாகச் செய்திருக்கிறார். 'சுதேசியும் பரதேசியும் வினா விடை' எனும் தலைப்பில் 29 மார்ச் 1911 தொடங்கி 26 ஜூலை 1911 வரை வாரந்தோறும் வெளியிட்டுள்ளார். இதில் 'சுதேசி'யின் கேள்விகளுக்கு 'பரதேசி' பதில் சொல்வதாக அமைந்திருக்கிறது. இங்கு 'சுதேசி' மண்ணின் பூர்வகுடியையும், 'பரதேசி' என்பதை பிற தேசத்தவரையும் குறியீடு மூலம் விளக்கியிருக்கிறார். பிரிட்டிஷாரை எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்த்தும், ஒடுக்கப்பட்டோரின் நோக்கில் ஆதரித்தும் எழுதி இருக்கிறார் தாசர். அதே வேளையில் நாட்டு விடுதலையை பேசிக்கொண்டு, சமூகக் கொடுமைகளை கண்டிக்காத தேசியத் தலைவர்களையும் விமர்சித்து எழுதினார்.

தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து வசதிகள் பெரிதாக இல்லாத காலக்கட்டத்தில் சென்னையில் அச்சான தமிழன் இதழுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் கடல் கடந்தும் வாசகர்கள் இருந்தனர். எல்லா வசதிகளும் நிறைந்திருக்கும் இக்காலக்கட்டத்திலேயே பத்திரிகைகளை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், அக்காலத்திலே அயோத்திதாசர் தமிழகத்தை தாண்டி பெங்களூரு, கோலார் தங்கவயல், ஹூப்ளி, குடகு, கேரளா, நாக்பூர், ஹைதராபாத், இலங்கை, ரங்கூன், பினாங்கு, சிங்கப்பூர், மொரிசியஸ், கரிபியன் தீவு உள்ளிட்ட இடங்களில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிக்கெல்லாம் தமிழனைக் கொண்டு சென்றார். ஒவ்வொரு இதழிலும் அந்தந்த பகுதியின் ஏஜென்ட் முகவரி, சந்தா விவரம், நன்கொடையாளர் முகவரி உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்டார்.

இறக்கும் தறுவாயிலும் தன் மகன் பட்டாபிராமனை அழைத்து, ‘தமிழன்’ இதழைத் தொடர்ந்து நடத்துமாறு பணித்தார். நூற்றாண்டை எட்டும் நிலையில் மறந்து போன தமிழன் இதழை அன்பு பொன்னோவியம், தி.பெ.கமலநாதன், எஸ்.வி.ராஜதுரை, ஐ.உலகநாதன், எச்.பெருமாள், டி.குப்புசாமி, தங்கவயல் ஐ.லோகநாதன் ஆகியோரிடம் இருந்து பெற்று முனைவர் ஞான.அலாய்சியஸ் தொகுத்து வெளியிட்டார். 1999‍-ல் இந்நூல் வெளியான பிறகு தமிழ் அறிவுத்தளத்தில் பெரும் அதிர்வு ஏற்பட்டது. இப்போது வரை அயோத்திதாசரின் சிந்தனைகளை மையப்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இதைவிட ஒரு பத்திரிகையாளர் எப்படி வரலாற்றில் நிற்க‌‌ முடியும்?

தமிழில் தொகுக்கப்பட்டதைப் போல அயோத்திதாசரின் சிந்தனைகள் ஆங்கிலத்துக்கு மொழிப்பெயர்க்கப்பட்டால், அவரின் உயரம் சர்வதேச அளவில் உயரும்.

(பண்டிதரைப் படிப்போம்...)

இரா.வினோத் | தொடர்புக்கு : vinoth.r@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x