Published : 05 May 2020 07:52 PM
Last Updated : 05 May 2020 07:52 PM

கரோனா அச்சம்: கர்ப்பிணிகளைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

காட்டுத் தீ போல் கரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்நிலையில் பொதுவாகவே பாதுகாப்பாக இருக்கவேண்டிய கர்ப்பிணிப் பெண்கள் கரோனா பரவலுக்குப் பிறகு மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக செல்வதா வேண்டாமா, பிரசவத் தேதி நெருங்கும் நிலையில் வெளியே சென்றால் கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற குழப்பமான மனநிலையில் உள்ளனர் பெண்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப் பின்பற்றுங்கள்

கரோனா தொற்றுநோய்க்கு பொதுவாக அறிவுறுத்தப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றினாலே தொற்றுநோய் தாக்கத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் பாதுகாப்பாக இருக்கமுடியும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் சாந்தி.

கர்ப்பிணிப் பெண்களுக்கு கரோனா தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்கிறார் அவர். “கரோனா தொற்றுநோயிலிருந்து தற்காத்துக்கொள்ள முக்கியமான வழி நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்வதுதான். இந்த நேரத்தில் வீட்டிலிருப்பதன் மூலம் கரோனா தொற்றுநோய் தொடர்பைத் துண்டிக்க முடியும். வீட்டு வாசலில் ஒரு வாளி நிறையத் தண்ணீர், சோப்பு ஆகியவற்றைக் கண்டிப்பாக வைக்கவேண்டும். வெளியே சென்றுவிட்டு வீட்டிற்குள் வரும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நன்றாக கை, கால் மற்றும் முகம் கழுவிய பின்னர்தான் வீட்டிற்கு அனுமதிக்கவேண்டும். அதேபோல் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை கைகளைச் சுத்தமாகச் சோப்பு போட்டுக் கழுவவேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறைக்குச் செல்வதற்கு முன்பும் பின்பும் கைகளைச் சுத்தமாகக் கழுவவேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையைப் பின்பற்றுவது ஒவ்வொருவருக்கும் நல்லது.

கர்ப்பிணிகள் கவனத்திற்கு
சாதாரண இருமல், சளி பிடித்திருந்தாலும் அவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் இருக்கும் இடத்திலிருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்வது கட்டாயமாகும். காற்றின் வழியாகவும் கரோனா பரவுவதால் பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கண்டிப்பாகச் சுத்தமான சூழ்நிலையில் இருப்பது அவசியமாகும்.

மருத்துவமனைக்கு மாதாந்திரப் பரிசோதனைக்குச் செல்வதாக இருந்தால் மருத்துவரிடம் தொலைபேசியில் வரவேண்டிய அவசியம் உள்ளதா எனத் தெளிவாக கேட்ட பின்னரே வெளியே செல்லுங்கள். ரத்த அழுத்தம் (BP) நீரிழிவு மற்றும் ரத்தசோகை போன்ற பிரச்சினைகள் உள்ள கர்ப்பிணிகள் மட்டும் அவசரத் தேவையென்றால் மாதாந்திர பரிசோதனைக்கு மருத்துவரிடம் ஆலோசனை செய்துவிட்டு பின்னர் செல்லலாம்.
பிரசவத் தேதி நெருங்கும் நிலையில் உள்ள பெண்கள் முன்கூட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது நல்லது.

மகப்பேறு மருத்துவர் சாந்தி

குழந்தை பெற்ற பெண்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கலாம். அவர்கள் தங்களுடைய உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

குழந்தையுடன் வெளியே சென்றுவிட்டு வந்தால் கண்டிப்பாக உடுத்தியிருந்த உடைகளைச் சோப்பு தண்ணீரில் போட்டுத் துவைத்து, சுத்தமாக குளித்த பின்னர்தான் குழந்தைக்கு பால் கொடுக்கவேண்டும். குழந்தையையும் வெதுவெதுப்பான நீரில் குளிக்கவைப்பது நல்லது.

இந்தக் காலகட்டத்தில் அவசியமில்லையெனில் பச்சிளம் குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமாக இருக்க பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், வைட்டமின் சி சத்து அதிகமுள்ள ஆரஞ்சு போன்ற பழங்களை எடுத்துக்கொள்ளவேண்டும்.

சூடான உணவுகளைச் சாப்பிடுவது இந்த சூழ்நிலையில் நல்லது.

மூன்று மாதம் மற்றும் ஐந்து மாத கருவுற்ற பெண்கள் மாதாந்திரப் பரிசோதனையை மருத்துவரின் ஆலோசனைப்படி பதினைந்து நாட்கள் கழித்துகூட மேற்கொள்ளலாம்.

செயற்கை கருவூட்டல் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் பெண்கள் தற்காலிகமாக மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.
இந்த சிகிச்சை மேற்கொள்ளும் தம்பதிகள் அவசரத் தேவை இருந்தால் மட்டும் மருத்துவமனைக்குச் செல்லலாம்.

குழந்தை பிரசவித்த பெண்கள் மற்றவர்களுடன் பேசும்போது ஒரு மீட்டர் இடைவெளியைப் பின்பற்றிப் பேசுவது அவசியமாகும்.
ஆபத்தான சூழ்நிலையில் 108 ஆம்புலன்ஸை அழைக்கலாம்.

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில் கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாக்க குடும்பத்தினர் ஒத்துழைப்பு அளிப்பது அவசியமாகும். கரோனாவைக் கண்டு பீதியடைவதைவிடப் பாதுகாப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதே தொற்றுநோய் பரவலைத் தடுக்கும்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட கருத்தரித்த தாய்மார்களிடமிருந்து பச்சிளம் குழந்தைகளுக்கு நேரடியாக கரோனா நோய்த் தொற்று பரவுகிறதா என்பது குறித்து அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன” என்று மகப்பேறு மருத்துவர் சாந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x