Last Updated : 05 May, 2020 02:29 PM

 

Published : 05 May 2020 02:29 PM
Last Updated : 05 May 2020 02:29 PM

மோகன், ரேவதி, கார்த்திக்... மறக்கவே முடியாத ‘மெளன ராகம்’ 


’கல்யாணமாகி முதன்முதல்ல உன்னை வெளியே கூட்டிட்டு வந்திருக்கேன். உனக்கு ஏதாவது வாங்கிக்கொடுக்கணும்’ என்று கணவன் கேட்க, ‘எதுவேணாலும் வாங்கிக் கொடுப்பீங்களா?’ என்று மனைவி கேட்க, ‘என்னால முடிஞ்சுச்சுன்னா வாங்கித்தரேன்’ என்று சிரித்துக்கொண்டே சொல்ல, அவள் அழுதுகொண்டே, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டே கேட்கிறாள்... ‘எனக்கு விவாகரத்து வேணும். வாங்கித் தர்றீங்களா?’’

விட்டுக்கொடுத்தல் எனும் வார்த்தையும் அந்த வார்த்தைக்குள்ளே பொதிந்திருக்கிற அதன் கனமும் அன்பால் நிறைந்திருப்பவை. குறிப்பாக, கணவன் மனைவிக்குள் இந்த அன்பும் விட்டுக்கொடுத்தலும் இருக்கவேண்டும். அவர்களிடம் இருந்து சகலருக்கும் அது பரவி, இன்னும் இன்னும் அன்பு வேர்விடும். நீர்விட்டு வளரும். தழைக்கும்.

1986ம் ஆண்டு சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி அன்று வெளியான மெளன ராகம் எனும் திரைப்படம் ரசிகர்களின் மனதுக்குள் செய்த சலசலப்புகள், கொஞ்சநஞ்சமல்ல. படம் வெளியாகி 34 வருடங்களாகிவிட்ட நிலையிலும், படத்தின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

மோகன் எனும் நடிகரை எல்லோருக்கும் பிடிக்கும். ரேவதி எனும் நடிகையை யாருக்குத்தான் பிடிக்காது? ராஜாவின் இசையில் மயங்காதவர்களும் இருக்கிறார்களா என்ன? அப்படியான சந்தோஷத்துடன் தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தார்கள் ரசிகர்கள். படம் ஆரம்பித்து, இருவருக்கும் கல்யாணமாகி, டில்லிக்குப் போன ரெண்டாவது நாளே, மோகனிடம் ரேவதி, ‘எனக்கு விவாகரத்து வாங்கிக்கொடுங்க’ என்று கேட்டால், மோகனுக்கு மட்டும் அல்ல, பார்க்கிற நமக்கும் பகீரென்றுதானே இருக்கும்.

இதுதான் ராகத்தின் மெளனம். மெளனமாய் சத்தமின்றி இருவரும் ரகசியமாய் பாடுகிற ராகம். கதையின் மையம் இதுவே!

அழகான நடுத்தரக் குடும்பத்தின் காலைப்பொழுதில் இருந்து தொடங்குகிறது கதை. அப்பா, அம்மா, தங்கை, அண்ணன், அண்ணி என கலகலப்பான குடும்பச் சூழல், அதிகாலையின் ஃபில்டர் காபியின் நறுமணம்.

அந்த வீடே சந்தோஷத்தால் நிறைந்திருக்கிறது. பெண்ணைக் கல்லூரியில் விட அப்பா ஸ்கூட்டரில் செல்கிறார். அவளுக்கு இந்த அமைதியும் இப்படியெல்லாம் தாங்குவதும் என்னவோ செய்ய, கேட்கிறாள். ‘சாயந்திரம் உன்னை பொண்ணுபாக்க வர்றாங்கம்மா’ என்கிறார்.

அதிர்கிறாள். தோழிகளிடம் புலம்புகிறாள். மழையும் துணைக்கு வர, ஆடுகிறாள். பாடுகிறாள். நனைகிறாள். தொப்பலாக நனைந்துகொண்டு லேட்டாக வீடு செல்ல, அங்கே காத்துக்கொண்டிருக்கிறார், பெண் பார்க்க வந்த மோகன். தனியே பேச விரும்புகிறார். ஆனால் அவள் பேசுகிறாள்...’’என்னை அடக்கமான பொண்ணுன்னு சொல்லுவாங்க. அப்படிலாம் இல்ல. பிடிவாதம், கோபம், திமிரு, ஈகோ எல்லாமே இருக்கு. அக்கறை கிடையாது. பொறுமை இல்லை. பொறுப்பு இல்லை. இந்தக் கல்யாணம் புடிக்கலை எனக்கு’ என்பாள். அதற்கு அவர், ‘உன்னைப் பிடிச்சிருக்கு’ என்று சொல்லி சம்மதம் சொல்லுவார்.

‘எல்லாரும் மாப்பிள்ளையைப் புடிச்சிருக்குன்னு சொல்றோம். கல்யாணம் புடிச்சிருக்குன்னு சொல்றோம். அவகிட்டயும் கேளுங்க’ என்று சொல்ல, பிடிக்கலை என்கிறாள். ஏன் என்று கேட்டால், ‘பிடிக்கல... அதனால பிடிக்கல’ என்கிறாள். ‘சின்னக்குழந்தை மாதிரி நடந்துக்கறே’ என்பார் அப்பா. ’சின்னக்குழந்தை மாதிரி நடத்துறீங்க. என் விருப்பம் கேக்காம பண்றீங்க’ என்கிறாள். அந்த சண்டை களேபரங்களுக்குப் பிறகு, அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வர... வீடே தவித்துக் கதறுகிறது. மனம் மாறுகிறாள். அப்பாவுக்காகச் சம்மதிக்கிறாள்.

டெல்லி. கல்யாணமாகி குடித்தனம். ஆனால் விவாகரத்துக் கேட்கிறாள் கணவனிடம்.

காரணம் கேட்க... அங்கே விரிகிறது பிளாஷ்பேக்.


முரட்டுத்தனம், துறுதுறுப்பு, தட்டிக்கேட்கும் குணம் கொண்ட கார்த்திக். அங்கே, இருவருக்கும் காதலாக மலர்கிறது. கல்லூரிக்கே வந்து, திவ்யா அப்பாவுக்கு ஆக்ஸிடெண்ட் என்று ரேவதியை அழைத்துச் செல்கிறார். எங்கே என்று கேட்க, வாணிமஹால் பக்கம் என்கிறார். ’எங்க அப்பா கோயம்புத்தூர் போய் மூணு நாளாச்சு. நாளைக்குத்தான் வர்றாரு’ என்பார். அப்ப, தாத்தாவா இருக்குமோ என்று சொல்ல, ’எங்க தாத்தா நான் பொறக்கறதுக்கு முன்னாடியே செத்துட்டாரே’ என்பார். இப்படியான கலாட்டாக்களும் கவிதைகளுமாக ரகளை பண்ணியிருப்பார் கார்த்திக். ஆனால் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துகொள்ளும் தருணத்தில், போலீஸால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துவிடுவார் கார்த்திக்.

இந்தக் காதலும் காதல் இப்படியான சோகத்துடன் முடிந்ததும் அப்படியே மென்று விழுங்கி சகஜமாக வாழ்கிறாள். ஹோட்டலில், கார்த்திக்கும் ரேவதியும் இருக்க, அங்கே வரும் ரேவதி அப்பாவை, ’மிஸ்டர் சந்திரமெளலி மிஸ்டர் சந்திரமெளலி’ என்று கலாய்ப்பாரே... அது இன்னும் நூற்றாண்டுக்கும் தாங்கும்! ‘மெளன ராகம்’ படத்தின் இந்தி ரீமேக்கில், இந்தக் காட்சி வைக்கப்பட்டிருக்கும். ஆனாலும் சந்திரமெளலி அளவுக்கு எடுபடவில்லை.

கணவன் மோகனிடம் எல்லா விவரங்களும் சொல்ல, அந்த ஜென்டில் மோகன் விவாகரத்துக்கு அப்ளை செய்கிறார். ஒருவருடம் சேர்ந்து இருந்த பிறகுதான் பிரிவதற்கு இடம் என்கிறது சட்டம். ஆகவே சேர்ந்து இருக்கிறார்கள். அப்படியான தருணங்கள், ரேவதியை எப்படியெல்லாம் மனம் மாற்றுகிறது. சேர்ந்தார்களா, பிரிந்தார்களா என்பதை, வலிக்க வலிக்க... ஆனால் மெளனமாக, பதட்டமோ பரபரப்போ இல்லாமல், கண்ணீர்க்கவிதையாய் சொல்லியிருப்பார் இயக்குநர் மணிரத்னம்.

அந்த ஏழு நாட்கள் படத்தினை கொஞ்சம் மாற்றிச் செய்தது என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் மணிரத்னம் தனக்கே உண்டான ஸ்டைலில், மிக அழகாக உணர்வுகளைப் பதிந்திருப்பார். மோகன், ரேவதி, கார்த்திக், ரா.சங்கரன், வி.கே.ராமசாமி, அந்த டில்லிவாலா ‘போடா டேய்’ என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவ்வளவு நேர்த்தியாக படைக்கப்பட்டிருக்கும்.

படத்துக்கு மூன்று தூண்கள்... மூன்று பலம். படம் முழுக்க தன் கேமராவால், காட்சிகளையும் கதைகளின் உணர்வுப்போக்குகளையும் ஒளிப்படுத்தியிருப்பார் பி.சி.ஸ்ரீராம். பாடல் வரிகளில் அத்தனை ஜீவனையும் நிறைத்திருப்பார் கவிஞர் வாலி. நிலாவே வா, பனி விழும் இரவு, மன்றம் வந்த தென்றலுக்கு என எல்லாப் பாடல்களும் அவ்வளவு அழகு. மூன்றாவது ஆனால் முதன்மையான பலம்... முழுமையான பலம் இளையராஜா. படம் நெடுக, காட்சிகளின் வீரியங்களை தன் வாத்தியங்களால் கடத்திக் கடத்தி, மனசுக்குள் நிறைக்கச் செய்திருப்பார், நிலைக்கச் செய்திருப்பார் இளையராஜா.

83ம் ஆண்டு ’பல்லவி அனுபல்லவி’, 85ம் ஆண்டு ’உணரூ’, அதே வருடத்தில் ’பகல்நிலவு’, ’இதயக்கோயில்’. அதையடுத்து 86ம் வருடத்தில் இதோ... மெளனராகம். 87ம் ஆண்டின் ’நாயகனுக்கு’ முந்தைய இந்தப் படத்திலேயே நிறையவே மாறி, நிறையவே டியூனாகியிருப்பார் மணிரத்னம். அவர்தான் வசனமும். வார்த்தைகளில் ஷார்ப், கதையில் தெளிவு, திரைக்கதையில் நேர்த்தி என படம் நெடுகிலும் மணிரத்ன டச் பளிச்சிட்டுக்கொண்டே இருக்கும்.

‘முதலிரவு வேணாம். பிடிக்கல. யாரோ ஒருத்தர் கூட...’ என்பார் ரேவதி. ‘அவர் யாரோ இல்ல. உன் புருஷன்’ என்பார் அம்மா. ‘ரெண்டுநாளைக்கு முன்னாடி நீ என்னை இப்படி விடுவியா’ என்று கேட்பார் ரேவதி.ஒருநிமிடம் கூனிக்குறுகிப் போவார். மெல்ல அங்கிருந்து நகருவார். மோகனின் இயல்பான நடிப்பு இன்னும் நம் மனதை கனப்படுத்திவிடும். இந்தக் கேரக்டர் பார்க்கிற பெண்களின் மனதில் அப்படியே பதிந்தது. ‘மோகனைப் போல் அன்பான, பண்பான, அமைதியான கணவன் வேண்டும்’ என்று அளவீடு வைத்தார்கள்.

விவாகரத்து கேட்ட மனைவியின் கையைப் பிடிப்பார் மோகன். விடச் சொல்லுவார் ரேவதி. ’பயமா, பிடிக்கலையா’ என்பார். ’பிடிக்கல’ என்பார். ’ஏன்’ என்று மோகன் கேட்பார். ’உடம்புல கம்பளிப்பூச்சி ஊறுற மாதிரி இருக்கு’ என பொளேரென முகத்தில் அடித்தது போல் சொல்லுவார். இப்படி படம் நெடுகவே வசனகர்த்தா மணிரத்னமும் தெரிகிற படத்தை, அவரின் அண்ணன் ஜி.வெங்கடேஸ்வரன் தயாரித்தார்.

இது 'மணி மெளன ரத்ன ராகம்!' இன்றைக்கும் ரசிக நெஞ்சங்களில் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x