Published : 05 May 2020 11:56 am

Updated : 05 May 2020 11:58 am

 

Published : 05 May 2020 11:56 AM
Last Updated : 05 May 2020 11:58 AM

ரமண பகவான் அவரது உடலாக இல்லை: இளையராஜா பேட்டி

ilayaraja-interview-about-sri-ramana-maharishi

இசையமைப்பாளரும் ரமண பக்தருமான இளையராஜாவிடம் செய்யப்பட்ட நேர்காணல் இது. 'தி இந்து' பப்ளிஷிங் க்ரூப் பகவான் ரமணர் குறித்து ஆங்கிலத்தில் சமீபத்தில் வெளியிட்ட WHO AM I ? Bhagavan sri ramana maharishi 1879 – 1950 நூலுக்காக டி.எஸ். சுப்ரமணியன், இளையராஜாவிடம் மேற்கொண்ட நேர்காணலின் தமிழாக்கம் இது.

பிறவி மேதைமை கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா அரிதாகவே பேட்டிகளுக்கு ஒப்புக்கொள்வார். கடந்த பல தசாப்தங்களாக ஆன்மிக குருவாகத் திகழும் ரமணர் பற்றிப் பேசுவதற்காக உடனடியாக இந்த நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டார். பகவான் ரமணர் என்பவருக்குத் தேகம் என்பது கிடையாது என்பதைச் சுற்றியே அவரது பேச்சு இருந்தது. அவர் வடிவமற்றவர் என்று கூறும் இளையராஜா, ரமணர் என்பவருக்கு சரீரம் இருந்ததே தவிர அவர் ஒரு சரீரரைப் போல ஒரு தேகியாக வாழவில்லை என்று குறிப்பிடுகிறார். ரமணர் தேகி அல்ல என்பதை தனது பல அவதானங்கள் மூலம் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டுகிறார். “பகவான், பகவான் தான். அவர் பரம்பொருள். அவர் சர்வேஸ்வரன்" என்கிறார்.


76 வயதாகும் இளையராஜா, ரமண மகரிஷியின் மகிமையைப் புகழும் வண்ணம் பல பாடல்களை எழுதி தானே அந்தப் பாடல்களுக்கு மென்மையான இசையையும் தந்துள்ளார். அவை ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளன. “பிக்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்", “சுற்றுகிற உலகத்திலே", “விண்ணோர் தொழும்" ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. ரமணரின் வாழ்க்கை, போதனைகள் குறித்த நுட்பமான புரிதலை இவர் எழுதிய ‘ரமண அமுது’ நூல் வெளிப்படுத்துகிறது.

இந்தியா உலகத்துக்குத் தந்த மகத்தான இசையமைப்பாளர்களில் ஒருவரான இளையராஜாவின் பங்களிப்பு நமக்கு வியப்பூட்டுவது. ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் இசைக்கோர்ப்பு செய்திருக்கும் இளையராஜா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேலான படங்களுக்கு திரையிசை அமைத்துள்ளார். 20 ஆயிரம் கச்சேரிகளுக்கு மேல் செய்தவர் இவர். இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், வாத்தியக் கலைஞர், ஹார்மோனியக் கலைஞர் எனப் பல அவதாரங்களை எடுத்தவர். லண்டனின் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து சிம்பொனியை இயற்றிய முதல் ஆசியர் இவர். இளைஞராக இருந்தபோதே, லண்டனைச் சேர்ந்த ட்ரினிடி காலேஜ் ஆப் மியூசிக் நடத்திய, செவ்வியல் கிடார் பிரிவுத் தேர்வில் ஹானர்ஸ் பட்டத்தோடு தங்கப்பதக்கம் வென்றவர். திருவாசகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யுள்களைத் தேர்ந்தெடுத்து ஒரட்டோரியோ இசைத் தொகுப்பாக வெளியிட்டவர். இந்திய மரபு இலக்கியம் சார்ந்து செய்யப்பட்ட முதல் முயற்சி இது. திருவாசகத்தை சிம்பனி இசைக்குழுவுடன் சேர்ந்து உருவாக்கும் யோசனை இளையராஜாவுக்கு உதித்த இடம் திருவண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவுடனான நேர்காணல் ரமணாசிரமத்தின் வளாகத்தில் நடைபெற்றது. தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாடல் நடைபெற்றது.

இளையராஜா பேசுகிறார் இப்போது:

பிற யோகிகள், சித்தபுருஷர்களுடன் பகவானை ஒப்பிட முடியாது. அவர் எப்போது ஞானத்தை அடைந்தாரோ, அந்தத் தருணத்திலிருந்தே அவர் தன் தேகத்தில் வாழவில்லை. பகவான் அவரது உடலாக இல்லை. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் பாதாள லிங்க சன்னிதியில் சேஷாத்ரி சுவாமிகள் பார்த்திராவிட்டால் ரமணர் கவனிக்கப்படாமலேயே போயிருப்பார் என்பது உண்மையல்ல.

நாம் எல்லாரும் 16 வயதுப் பருவத்தைக் கடந்திருப்போம் தானே. அந்த 16 வயதில் என்னென்ன யோசனைகள் ஏற்படும், நமது நடத்தை எப்படியெப்படி இருக்கும் என்பதெல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும். நமது தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் என்ன தொடர்பை வைத்திருந்தோம்? நமது செயல்பாடுகள் என்னவிதமாக இருந்திருக்கின்றன? பகவான் 16 வயதில், தன்னறிவை எட்டிய பின்னர், ஒரு நொடி கூட அவர் அடைந்த ஞானத்திலிருந்து வழுவவேயில்லை. அப்படி இருந்த நபர் ஒட்டுமொத்த உலகத்திலுமே இல்லை. நாம் பல்வேறு துறவிகளைப் பற்றிக் கேட்டிருப்பதால் இந்த விஷயத்தை நான் அழுத்திச் சொல்கிறேன். “நான் யார்?” என்ற கேள்வி மற்ற துறவிகளின் வாழ்க்கையில் எழவே இல்லை.

ஸ்ரீ ரமண மகரிஷி பாதாள லிங்க சன்னிதியில் தபசில் இருந்தபோது, கறையான்கள் அவரைச் சுற்றிப் புற்றை எழுப்பி அவரைப் படுத்தியெடுத்தன. அவர் உணவு உட்கொள்வதற்காக வெளியே வந்துபோனாரா? அன்றாடக் கடன்களைக் கழிக்க எழுந்தாரா? அவர் வெளியே வரவேயில்லை. அது எப்படிச் சாத்தியமானது? சாமானிய மனிதர்களின் நடைமுறை, இயற்கையோடு அதைச் சம்பந்தப்படுத்தவே முடியாது. ஒரு மனிதக் கற்பனையின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயம் அது. எல்லாரும் அதைச் சாதித்துவிட முடியாது. பகவான் சுயவிசாரத்தையும் தன் அறிதலையும் எங்கேயும் தவறவிடாமல் தொடர்ந்து கொண்டிருந்தார். அதை அவர் அநாயசமாகக் கையாண்டார்.

அண்ணாமலை சுவாமிகள் இளம் வயதில் தன்னை வருத்தியெடுத்த பாலியல் உணர்வுகளைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், யாரிடமும் அந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவும் முடியாமல் இறுதியாக பகவானிடம், “பாலியல் ரீதியான எண்ணங்கள் உங்களுக்கு வந்திருக்கிறதா?” என்று கேட்கிறார். “16 வயதிலேயே எனது உடலைக் கடந்துவிட்டேன். எனக்கு உடல் இருந்திருக்குமானால் அந்த எண்ணங்கள் எனக்கு வந்திருக்கும். எனக்கு உடலென்பதே கிடையாது” என்பதே பகவானின் பதில்.

நாம் பகவானை பௌதிக வடிவமாக மட்டுமே பார்த்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவரது உடலைத் தாண்டி அவரைப் பார்க்கவே இல்லை. இப்படிச் சொல்வதனால் அவருக்கு உடல் அளவிலான தோற்றமில்லை என்று அர்த்தம் இல்லை. அவருக்கு உடல் இருந்தது; ஆனால், தேகி அல்ல அவர்.

1898-ம் ஆண்டு, ரமண மகரிஷி தனது வீட்டைவிட்டுத் துறந்து வந்து இரண்டு ஆண்டுகளான நிலையில் பகவானுடைய தாயார் பவழக்குன்றில் அவரைச் சந்தித்து, வீட்டுக்கு வா என்று கெஞ்சிக் கோரினார். “அவரவர் பிராப்தப்பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கு இருந்து ஆட்டுவிப்பன்; என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது; நடப்பது என் தடைசெய்யினும் நில்லாது; இதுவே திண்ணம் ஆகலின் மவுனமாய் இருக்கை நன்று" என்று தனது பதிலை ஒரு தாளில் எழுதிக் காட்டினார்.

ஒரு வார்த்தைகூட தனது தாயை திரும்ப அனுப்பிய பகவான்தான், பின்னர் தன்னுடனேயே அவர் இருப்பதற்கு அனுமதிக்கவும் செய்தார். இதற்குக் காரணம் என்ன? அவர் தேகி அல்ல. அவர், அவருடைய தேகம் மட்டுமே அல்ல.

ஒரு சமயத்தில், ஒரு உயில் எழுதப்பட்டு அவரிடம் கையெழுத்து மட்டும் போடுவதற்குக் கோரப்பட்டது. அவர் கோபத்துடன் கொடுக்கப்பட்ட பேனாவை அந்த உயில் எழுதப்பட்ட காகிதத்தின் மேல் தூக்கியெறிந்தார். தூக்கி எறியப்பட்ட பேனாவிலிருந்து ஒரு கோடு விழுந்தது. அவருடைய சம்பந்தமோ சங்கல்பமோ இல்லாமலா அந்தக் கோட்டை வரைந்தார்? ஆயிரம் முறைகள் அவர், தனக்குப் பெயர் கிடையாதென்று சொல்லியிருக்கிறார். “என்னுடைய பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது. நான் எப்படி கையெழுத்துப் போட முடியும்?” என்று கேட்டார். அப்படியெனில் அவர் தேகி இல்லை என்றே அர்த்தம்.

பகவானைப் பார்த்த மக்கள் யாரும் அவரை உண்மையிலேயே பார்க்கவில்லை. அதேவேளையில், அவரை நேரடியாகப் பார்க்காதவர்கள் பார்க்காதவர்களும் அல்ல. இந்த நிச்சயம் தான் அவர் கொடுப்பது. பகவான் தொடர்பில் அவரது பக்தர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவை தன்போல நடந்ததாகவே பார்த்து அவர்கள் அவரிடம் சரணடைந்தார்கள்.

1950-ல் ரமணர் அண்ணாமலை குன்றின் உச்சியில் தனது உடலை விட்டு, ஜோதியுடன் கலந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்போது, பரம்பொருள் அவரை நோக்கி வந்ததாகவே அர்த்தமாகிறது. இது நமக்கு நடக்க நாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும். அந்தப் புண்ணியம் கிடைத்தால் அவனது காலடியிலேயே விழுந்து கிடக்க மாட்டோமா நாம். வேறு எந்த எண்ணமும் நமக்கு முளைக்கவே முளைக்காது. பகவானே ஒருமுறை, உலகம் தன்னிடமிருந்தே பிறப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

சுந்தரம் என்ற திருவேணி சுவாமிகள் பகவான் ரமணருடன் ஒரு நாள் காலை சமையலறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ரமணர், திருவேணி சுவாமிகளிடம், “சுந்தரம், காய்கறிகளை நறுக்குவதை உடனே நிறுத்திவிட்டு, மாமரத்திலிருந்து விழுந்த மாம்பழங்களைச் சேகரித்து இங்கே எடுத்துவா" என்று கூறினார். சுந்தரம் அதற்கு போகிறேன் என்று பதில் சொல்லிவிட்டு, காய்கறிகளை நறுக்குவதைத் தொடர்ந்தார். “சுந்தரம், நான் என்ன செய்யச் சொல்கிறேனோ அதை முதலில் செய். ஒட்டுமொத்த உலகமும் என்னிடமிருந்தே பிறப்பெடுக்கிறது என்பதை நீ உணரவேண்டும். நான் எதைச் சொல்கிறேனோ அதை முதலில் செய்.” அவர் இப்படி உரைத்த நாளிலிருந்து பகவான் எதைச் சொன்னாலும் அதை உடனடியாக திருவேணி சுவாமிகள் செய்து முடித்துவிடுவார்.

இன்னொரு சமயம், சமையலறையில் அரிசிப் பாத்திரம் கொதித்துப் பொங்கி வழியத் தொடங்கியது. தண்ணீர் குறைந்து பாத்திரத்தில் சோறு பிடித்து விடும் நிலையில் இருந்தது. சோறு தீய்ந்துவிடும் என்பதை ரமணர் உணர்ந்து திருவேணி சுவாமிகளிடம் பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கச் சொன்னார். ஆனால் சுந்தரத்திடம் கைப்பிடித் துணி இல்லை. பகவானின் அவசரத்தை அவர் உணர்ந்திருந்ததால் கொதித்த பாத்திரத்தை இறக்கிவிட்டார். பாத்திரத்தின் உஷ்ணன் சுந்தரத்தை ஒன்றும் செய்யவில்லை. இப்படியான நிலையில் பகவானை நாம் எப்படிப் புரிந்துகொள்வது. அவரை மதிப்பிடுவதற்கான அளவுகோலே இல்லாத ஒரு நபர் அவரை எப்படி அளக்க முடியும்? நம்மால் பகவான் ரமணரை அளக்கவே முடியாது.

எனக்குப் பகவானின் பெயரைச் சொல்வதற்குக் கூட தகுதியோ, அருகதையோ கிடையாது என்று தெரியும். ஆனாலும், பகவான் என்னைப் பொறுத்துக் கொள்வார் என்றே நம்புகிறேன். அவரது பெயரை உச்சாடனம் செய்துகொண்டிருப்பதைத் தவிர எனக்கு வேறு வழி கிடையாது. அவரது பெயரையும் அவரது மந்திரத்தையும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதன் வழியாக எனது வாழ்க்கையைத் தொடர்கிறேன். பகவான் பகவான் தான். அதை மீறி வேறு என்ன சொல்ல இருக்கிறது? இப்போது என்னிடம் நீங்கள் கேள்விகளைக் கேட்கலாம்.

தமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன்

( ரமணர் குறித்து இளையராஜாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும் நாளை தொடரும்)


தவறவிடாதீர்!

Ilayaraja interviewSri ramana maharishiWHO AM I ? Bhagavan Sri Ramana Maharishi 1879 – 1950இளையராஜாஇளையராஜா பேட்டி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x