Published : 05 May 2020 11:29 am

Updated : 05 May 2020 11:29 am

 

Published : 05 May 2020 11:29 AM
Last Updated : 05 May 2020 11:29 AM

’லட்சுமி ரொம்ப கோபப்படுவாங்க, நிறைய கேள்வி கேப்பாங்க, முதல் படத்துல எதுக்கு ரிஸ்க்னு பயந்தேன். ஆனா...’’ - நடிகர் - இயக்குநர் சிவசந்திரன் மனம் திறந்த பிரத்யேகப் பேட்டி 

sivachandran-4-rewindwithramji


’அவர் உள்ளேயிருந்து பேசுகிறார். உள்ளேயொன்று வெளியே ஒன்று என்று பேசவில்லை’ என்று ஒருசிலரைச் சொல்லுவோம். நடிகரும் இயக்குநருமான சிவசந்திரன் அப்படித்தான். எதையும் யோசித்துப் பேசுவதில்லை. எந்தக் கேள்வி கேட்டாலும், ஞாபக அடுக்கில் இருந்து அதை எடுத்து, அதற்கு தன் கருத்தையும் தான் அனுபவித்து உணர்ந்த விஷயத்தையும் சேர்த்துப் பேசுகிறார். கேள்விகளைப் புறக்கணிக்கவில்லை. பதிலுக்கு விட்டம் பார்க்கவில்லை. மிக நேர்மையாளராக இருக்கும் சிவசந்திரனின் பேட்டி... வெல்லக்கட்டிதான்!


‘இந்து தமிழ் திசை’ யின் 'RewindWithRamji' எனும் நிகழ்ச்சிக்காக, நடிகர் சிவசந்திரன் அளித்த நீண்ட பேட்டியின் எழுத்தாக்கம் இது.


அந்தப் பேட்டி தொடர்கிறது...


‘’’என் உயிர் கண்ணம்மா’ படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு பிரபுவால் கிடைத்தது. பிரபு என் இனிய நண்பர். என் வளர்ச்சியில் சிவாஜி சார் குடும்பம் ஆர்வத்துடன் இருந்தது. இளையராஜா சார்தான் இசை. படத்தில் ஐந்து பாடல்கள். ஐந்து பாட்டையும் பதினைந்தே நிமிடத்தில் போட்டுக் கொடுத்தார்.


ரீரிக்கார்டிங்கையெல்லாம் முடித்துவிட்டு, ’படம் நல்லா வந்திருக்குய்யா. பிரமாதம்’னு மனம் திறந்து பாராட்டினார் ராஜா சார். அத்தோடு நிற்கவில்லை. ‘சிவா... டைட்டில் பாட்டு ஒண்ணு போட்டுருவோமா?’ என்று கேட்டார். உடனே, அதற்கு டியூனும் போட்டார். சரி... பாட்டு? அதை அவரே எழுதியும் கொடுத்துப் பாடியும் கொடுத்தார். ‘தென்னாடுதான் இது எந்நாளும் ஏமாத்தும் பொன்னாடுதான் அட எல்லாரும் நம்மாளுதான்’னு பாட்டையும் பாடினார். கிரேட்மேன். அவர் கூடலாம் சேர்ந்து பணியாற்றியது பாக்கியம்.


படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்துச்சு. எல்லாருமே அப்படி ஒத்துழைச்சாங்க. படத்தோட தயாரிப்பாளர் சங்கரலிங்கம், அற்புதமான தயாரிப்பாளர். கதை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. படத்துக்கு ஹீரோயினா லட்சுமின்னெல்லாம் முடிவு பண்ணலை. நமக்கு முதல் படம். லட்சுமி மிகப்பெரிய நடிகை. நிறைய கேள்வி கேப்பாங்க. ஏதாவது சரியா இல்லேன்னாக்கூட கர்வப்பட்டு கோபமாகி கிளம்பிப் போயிருவாங்க. மழை சீன்ல நடிக்கமாட்டாங்க. அப்படியே நடிச்சாலும், இருமல், சளின்னு சொல்லிப் போயிருவாங்கன்னெல்லாம் சொல்லிவைச்சிருக்காங்க. எனக்கு பயம்.


இத்தனைக்கும் ‘பொல்லாதவன்’ ல லட்சுமி நடிச்சிருப்பாங்க. நானும் நடிச்சிருப்பேன். ஆனா அவங்ககிட்ட பேசிக்கிட்டது கூட இல்ல. நடுவுல சிவகுமார் அண்ணனும் அவங்களும் நடிச்ச படத்துல, நானும் நடிச்சிருந்தேன். அவங்க கூட சேர்ந்துதான் நடிச்சேன். ஆனாலும் பெரிய பழக்கமெல்லாம் இல்ல. பேசிக்கவும் மாட்டேன்.
சரி... படத்துக்கு, அந்த லட்சுமி கேரக்டருக்கு டிம்பிள் கபாடியாவைப் போடலாமா. அவங்கதான் கொஞ்சம் செக்ஸியாவும் கிளாமராவும் நல்லா இருப்பாங்க. ’செம்மீன்’ ஷீலா மாதிரி கேரளா கெட்டப் டிரஸ்ஸுக்கு சரியா இருக்கும்னெல்லாம் பேசினோம். ஆனா இதெல்லாம் ஒர்க் அவுட்டாகலை. கடைசியா, லட்சுமியம்மாவைக் கேக்கலாம்னு முடிவாச்சு. சரி... யாரு பூனைக்கு மணி கட்றதுன்னு யோசிச்சோம். அப்பதான் சிவாஜி சார் குடும்பத்தைச் சேர்ந்த மனோ இதுக்கு ரொம்பவே உதவினார். ’வா சிவா, நான் பேசுறேன்’னு லட்சுமியம்மா வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தார்.


அப்போ, இந்த காம்பவுண்டு நாலடிதான் இருக்கும். இப்பதான் ஆறடியாக்கினோம். பெரிய நாய் இருக்கும். அது முன்னங்காலை தூக்கிட்டு பாய்ஞ்சு நின்னா, நம்ம தோள்பட்டைக்கு வந்திருக்கும். அவ்ளோ பெரிய நாய். அப்படி காம்பவுண்டு சுவர்ல நிக்கிறதைப் பாத்துட்டு, பயந்து நடுங்கிட்டு வாசல்லயே நின்னோம்.
அப்புறமா உள்ளே போனோம். உக்கார்ந்தோம். என்னை டைரக்டரா அவங்க ஒத்துக்கணுமே. அந்தக் காலத்துலயெல்லாம் டைரக்டராகணும்னா, அஸிஸ்டெண்ட் டைரக்டா, அசோசியேட் டைரக்டரா இருந்துட்டுதானே டைரக்டராக முடியும். இவன் யாருடா... ஹீரோவா, வில்லனா நடிச்சான். இப்ப டைரக்டர்ங்கறான்னா யாரு ஒத்துக்குவா. முதல்ல அந்த புரொடியூசர் ஒத்துக்கிட்டதே பெரியவிஷயம். சிவாஜி சார், பிரபுலாம் சொல்லித்தானே ஒத்துக்கிட்டாங்க.


லட்சுமியம்மாகிட்ட கதையைச் சொன்னேன். அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. ’சரி... ஸ்க்ரீன் பிளே பண்ணிக் கொண்டாங்க’ன்னு சொன்னாங்க. அப்புறம் ரெடிபண்ணிக் கொண்டு வந்து, அவங்களுக்கு முழு ஸ்கிரிப்டையும் சொன்னேன். அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிப்போச்சு.


லட்சுமியம்மாகிட்ட ஒரேயொரு ரிக்வெஸ்ட்தான் வைச்சேன் ‘மேடம்... காலைல 7 மணிக்கு ஷூட்டிங்கிறகு வந்துடணும். மழைல எடுப்பேன். சகதில எடுப்பேன். இது எனக்கு முதல் படம். கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுக்கணும்’னு கேட்டேன். சரின்னாங்க. எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டாங்க.


அப்புறம்... அடுத்த ஹீரோயின். யாரைப் போடலாம்னு யோசிச்சோம். புது ஹீரோயின் போட்டா நல்லாருக்கும்னு சிலர் சொன்னாங்க. அப்பதான் நடிகை சரண்யா வந்தாங்க. அப்போ அவங்க நடிக்கவே இல்ல. அதாவது சான்ஸ் கேட்டு வந்திருந்தாங்க. நாமளும் அறிமுகப்படுத்தலாம்னு இருந்தப்போ சரண்யா வந்தாங்க.
சரண்யா முகம், நம்மூரு முகம். கேமிராமேனும் ஓகேன்னுதான் சொன்னார். சரி டெஸ்ட் எடுத்துப் பாப்போம். புரொடியூசர் வரட்டும். அவர் என்ன சொல்றாரோ அதன்படி செய்வோம்னு சொன்னேன். சரண்யாவை டெஸ்ட்லாம் எடுத்து ரெடியா இருக்கோம். தயாரிப்பாளர் வந்தார். உள்ளே நுழைஞ்சதுமே... தயாரிப்பாளர்... ‘படத்துல செகண்ட் ஹீரோயின் ராதா. சரின்னு சொல்லிட்டாங்க’ன்னு சொன்னார்.


ராதா கூட பல படங்கள் நடிச்சிருக்கேன். நான், பிரபு, ராதா. வில்லன், ஹீரோ, ஹீரோயின். ராதாவை நான் துரத்துவேன். டிரஸ்ஸைப் பிடிச்சு இழுப்பேன். பிரபு வந்து அடிப்பாரு. நாம அடிவாங்கிட்டு ஓடிடணும். இப்படி பல படங்கள் நடிச்சிருக்கோம். பிரபு, அம்பிகா, ராதா, நான் எல்லாருமே நல்ல பிரண்ட்ஸ்.


‘ராதாகிட்ட சொன்னோம். நீங்க டைரக்ட் பண்றீங்கன்னு. ரொம்ப சந்தோஷம். நடிக்கிறேன்’னு சொல்லிட்டாங்க’ன்னு சொன்னாரு. ஒருவேளை, ராதா நடிக்க முடியலைன்னா, சரண்யா நடிச்சிருப்பாங்களான்னு தெரியல. ஏன்னா, நான் ஓகே பண்ணிருந்தேன். புரொடியூசர் ஓகே பண்ணனுமே!


இந்த தயாரிப்பாளருக்கு என்னன்னா... படத்தை நல்லா பெருசாவே பண்ணனும். பெரிய நடிகர் நடிகைகளெல்லாம் நடிக்கணும். எவ்ளோ செலவானாலும் பரவாயில்லைனு செயல்படுறவர். அப்படி தயாரிப்பாளர் கிடைக்கறது பெரியவிஷயம்.


சினிமாங்கறது வித்தியாசமான ஒரு தொழில், இங்கே எதுவேணா நடக்கும். எப்பவேணா நடக்கும். விடிய விடிய, ராப்பகலா கண்முழிச்சு, பக்காவா ஒரு கதை பண்ணி, அதை படமாக்கியிருப்போம். ஆனா அந்தப் படம் ஓடாமலும் போகும். இப்படி என்ன வேணாலும் நடக்கும். அதான் சினிமா! அதான் சினிமா உலகம்!’’ என்று சினிமாவின் இரண்டுபக்கத்தையும் எந்தப்பக்கமும் இல்லாமல், ரசிக மனோநிலையில் இருந்தபடி விவரித்தார் சிவசந்திரன்.


- நினைவுகள் தொடரும்


நடிகரும் இயக்குநருமான சிவசந்திரனின் முழுமையா வீடியோ பேட்டியைக் காண :


தவறவிடாதீர்!

’லட்சுமி ரொம்ப கோபப்படுவாங்கநிறைய கேள்வி கேப்பாங்கமுதல் படத்துல எதுக்கு ரிஸ்க்னு பயந்தேன். ஆனா...’’ - நடிகர் - இயக்குநர் சிவசந்திரன் மனம் திறந்த பிரத்யேகப் பேட்டிஎன் உயிர் கண்ணம்மாசிவசந்திரன்பிரபுலட்சுமிராதாRewindwithramji

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x