Published : 05 May 2020 11:23 AM
Last Updated : 05 May 2020 11:23 AM

கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர நாம் என்ன செய்ய முடியும்?

முனைவர் ஜோசப் ஆண்டனி

கரோனா ஊரடங்கு இரண்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாகத் தொடர்ந்துவருகிறது. ஊரடங்கு மூலம் அரசு நம்மைத் துன்புறுத்துகிறது என்றே பலரும் நினைக்கிறார்கள். சமூக இடைவெளியை நாம் கடைப்பிடிப்பதால் மட்டும் நோய் கட்டுக்குள் வந்துவிடுமா என்ற அலட்சியப் போக்கு உள்ளவர்களுக்கு, ஒரு செய்தி இருக்கிறது. கரோனாவுக்கு மருந்து மாத்திரை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சமூக இடைவெளி ஒன்றே இப்போதைக்கு மருந்து. ஊரடங்கில் அடங்கி இருப்பதன் மூலம் மட்டுமே கரோனாவையும் அடக்க முடியும். அதாவது தொற்று பரவுதலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

சரி, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் ஊரடங்கு தொடரும் என்ற கேள்வி, நம் அனைவர் மனதிலும் எழும். அது நம் கையில்தான் இருக்கிறது. அதாவது சமூக இடைவெளியை முழுமையாகக் கடைப்பிடித்து, நாம் தனித்திருந்தால், கரோனாவை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரலாம், ஊடரங்கும் விலக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த ஊரடங்குக் காலத்தில் நாம் தனித்துத்தானே இருந்தோம், அப்படியிருந்தும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பது எப்படி?

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஊரடங்குக் காலத்தில் நாம் அனைவருமே சமூக இடைவெளியை, தனித்திருத்தலை முழுமையாகக் கடைப்பிடித்தோமா? உறுதியாக ஆமாம் என்று பதில் கூற முடியாது. அப்படி முழுமையாகக் கடைப்பிடிக்காததன் காரணமாகவே கரோனா தற்போது தீவிரமடைந்துகொண்டிருக்கிறது. சமூக இடைவெளியைத் தீவிரமாகவும் உறுதியாகவும் கடைப்பிடித்தால் நிச்சயம் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். இது தொடர்பாக இங்கிலாந்தின் லீட்ஸ் பல்கலைகழகத்தின் பொறியியல் துறையில் பணிபுரியும் நானும் (ஜோசப் ஆண்டனி), தெற்கு கஜகஸ்தான் மாகாணப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் துலீகனும் ஓர் ஆய்வு மாதிரியை செயல்படுத்திப் பார்த்தோம்.

ஊரடங்கு அவசியம்தானா?

பின்வரும் மதிப்பீடு ஏப்ரல் 9 ஆம் நாளில் தொடங்கி அடுத்த 30 நாட்களுக்கு உருவாக்கப்பட்டது. படம்-1இல் குறிப்பிட்டுள்ளபடி ஏப்ரல் 9 அன்று தமிழகத்தில் 834 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

இதன்படி கணிக்கப்பட்ட முடிவுகள் நாள்தோறும் புதிதாகக் கண்டறியப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையுடன் ஏறக்குறைய ஒத்துப்போகிறது. இது தொடர்பான ஆய்வு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தனித்திருத்தலின் அவசியம் என்ன?

ஊரடங்கின்போது ஒவ்வொரு குடும்பத்தினரும் சமூக இடைவெளியை உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு சொல்வதன் முக்கியத்துவத்தை படம் 2இன் மூலம் அறியலாம். அத்துடன் உலகம் முழுவதும் சந்திக்கும் ஒரு புதிய சிக்கலையும் இந்த இடத்தில் நினைவில்கொள்வது அவசியம். அதாவது பெரும்பாலான மக்களுக்கு அறிகுறி எதுவும் தெரியாமலே, கரோனா தொற்று இருக்கும் நிலை தற்போது உள்ளது. சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 98 சதவீதத்தினருக்கு அறிகுறி இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஏப்ரல் 30 அன்று கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். எனவே, அவசியத் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்ப்பதே சிறந்தது.

இதன் முக்கியத்துவத்தை படம்-2இன் மூலம் அறியலாம். ஏப்ரல் 9 நிலவரத்தை அடிப்படையாக வைத்து மே 8இல் நிலவரம் எப்படி இருப்பதற்கு சாத்தியம் இருக்கிறது என்பதை இந்த ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள முடியும். அதாவது பாதிக்கப்பட்டோர் எனக் கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை = கண்டறியப்பட்டோர் மடங்கு x 834. அதாவது ஏப்ரல்-9இல் பாதிக்கப்பட்டோர் எனக் கண்டறியப்பட்டோர் 1 மடங்கு என்று வைத்துக்கொண்டால், மே 8 ஆம் நாள் 4.71 மடங்காக அதிகரித்திருக்க சாத்தியம் இருக்கிறது (அதாவது, மொத்த பாதிக்கப்பட்டோர் = 4.71 x 834=3,928).

ஒருவேளை ஏப்ரல் 9ஆம் நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 33 சதவீதத்தினர் தனித்து இருந்திருந்தால், நோய்த்தொற்றுப் பரவல் 2.52 மடங்காகவும், 58 சதவீதத்தினர் தனித்து இருந்திருந்தால் நோய்த்தொற்றுப் பரவல் 1.58 மடங்காகவும், 73 சதவீதத்தினர் தனித்து இருந்திருந்தால் நோய்த்தொற்றுப் பரவல் 1.19 மடங்காகவும் குறைவதற்கு சாத்தியமுள்ளது. கடைசி வாய்ப்பின்படி மே 8 அன்று கூடுதலாக பாதிக்கப்படுவோர் 3,928 பேருக்குப் பதிலாக, வெறும் 917 பேர் (1.1 x 834) மட்டுமே பாதிக்கப்படுவதற்கு சாத்தியமுள்ளது. இது நான்கில் ஒரு மடங்கைவிடக் குறைவு. இதன் மூலம் நோய்த்தொற்றை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். இதைவிடச் சிறந்த நிலையை அடைவதும் சாத்தியம்தான். அதற்குக் கூடுதல் கவனம் தேவை.

சமூக இடைவெளியும் தனித்திருத்தலும் மட்டுமே இப்போதைக்கு நம்மிடம் இருக்கும் சிறந்த மருந்துகள். இவற்றை உறுதியாகப் பின்பற்றுவதன் மூலம் பாதிப்பிலிருந்து நம் சமூகம் விரைவில் மீள வாய்ப்பிருக்கிறது. இல்லாவிட்டால், ஊரடங்கு தொடர்கதை ஆகிவிடுமோ என்ற கவலையை நீண்ட நாட்களுக்குத் தவிர்க்க முடியாமல் போய்விடும். இப்படிச் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதால் பயன்பெறுவது நாம் மட்டுமல்ல-ஒட்டுமொத்தச் சமூகமும்தான் என்பதையும் மறந்துவிடக் கூடாது.

அரசு விதிகளுக்கு உட்பட்டு, தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது; அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுவது; மூக்கு-கண்களை கைகளால் தொடாதிருப்பது; சமையல் கத்தி, வீட்டுக் கம்பிக் கதவு, மரக் கதவின் கைப்பிடிகள், சாவிக்கொத்து, வெளியே அடிக்கடி பயன்படுத்தும் பைகள், வாகனக் கைப்பிடிகள், கைபேசித் திரை போன்றவற்றை நாள்தோறும் சுத்தம்செய்வது போன்றவை சமூக இடைவெளி எனும் உத்தியின் தொடர்ச்சியே. எனவே, வரும் நாட்களில் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எவ்வளவு தீவிரமாகப் பின்பற்ற முடியுமோ, அவ்வளவு உறுதியாகப் பின்பற்றுவோம் - அவை நம்மை, நம்மைச் சார்ந்தோரை, அருகில் வசிப்பவர்களை, மக்களைக் கரோனா தாக்கத்திலிருந்து காக்க உதவும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கட்டுரையாக்கத்தில் உதவி: மு.வீராசாமி, மதுரை

முனைவர் ஜோசப் ஆண்டனி, FRSC, லீட்ஸ் பல்கலைக்கழகம், இங்கிலாந்து

தொடர்புக்கு: S.J.Antony@leeds.ac.uk


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x