Last Updated : 04 May, 2020 05:36 PM

 

Published : 04 May 2020 05:36 PM
Last Updated : 04 May 2020 05:36 PM

’’15 நிமிஷத்துல இளையராஜா போட்ட 5 பாட்டு; அத்தனையும் ஹிட்டு;  பெரிய தவறை சரிபண்ணினார்; ரீஷூட் செலவே இல்லாம செஞ்சார்!’’ - சிவசந்திரனின் ’என் உயிர் கண்ணம்மா’ அனுபவங்கள்  


சிவாஜி, கமல், ரஜினி, பிரபு, சிவகுமார் என பல நடிகர்களுடன் நடித்த அனுபவங்களை அப்படியே மனதில் சேகரித்து வைத்திருக்கிறார் நடிகர் சிவசந்திரன். இவை அனைத்தையும் என்னால் மறக்கவே முடியாது என்று பல விஷயங்களை ஒளிவுமறைவில்லாமல் பகிர்ந்துகொண்டார்.


‘இந்து தமிழ் திசை’யின் RewindwithRamji எனும் வீடியோ நிகழ்ச்சிக்காக, நடிகர் சிவசந்திரன் நீண்டதான பேட்டியளித்தார்.


அந்த வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இதோ:


‘’சிவாஜி சார் மாதிரி ஒரு மனிதரைப் பார்க்கவே முடியாது. அப்பேர்ப்பட்ட சிறந்த மனிதர். அவருடைய படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். 53ம் வருஷம் பிறந்தேன். 52ம் ஆண்டிலேயே, ‘பராசக்தி’யில் நடிக்க வந்துவிட்டார். முதல்நாள், முதல் ஷோ என சிவாஜி சார் படங்களை, ஏகப்பட்ட படங்களைப் பார்த்திருக்கிறேன்.


எம்ஜிஆர், சிவாஜி படங்களைப் பார்த்து பாடல்களைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். சிவாஜி சாரின் வசனங்களைக் கேட்டுத்தானே வளர்ந்தோம். ஆகவே அவர்கள் மீது அப்படியொரு மரியாதை எனக்கு உண்டு. மூத்த நடிகர்களை, நடிகைகளை மதிக்கும் பண்பு என்பது அன்றிலிருந்தே எனக்கு உண்டு. செளகார் ஜானகி அம்மா, சரோஜாதேவி அம்மா என பலரின் மீதும் மிகப்பெரிய மரியாதை உண்டு. சரோஜாதேவி அம்மாவெல்லாம், முதன்முதலாக நான் டைரக்‌ஷன் பண்ணியதைப் பார்த்துவிட்டு, ‘சிவசந்திரன், ரொம்பப் பிரமாதமா பண்ணிருக்கீங்க’ என்று மனம் திறந்து பாராட்டினார்கள். சிறுவயதில், நாங்கள் பார்த்து, ரசித்து, வியந்தோம். அவர்களெல்லாம் பாராட்டுகிறார்களென்றால், இதைவிட வேறென்ன வேண்டும் எங்களுக்கு?


இவையெல்லாம், இன்றைக்கு இருக்கிற நடிகர்களுக்கு இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அதைப் பற்றியும் நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால் இன்றைக்கும் மூத்த நடிகர்கள் மீது உள்ள மரியாதை எனக்கோ என்னைப் போன்றவர்களுக்கோ இம்மியளவும் குறையவில்லை. குறையவும் குறையாது.
‘சிவாஜி சார் வீட்டில், சிவாஜி சாருடன் உட்கார்ந்து சாப்பிட்டேன்’ என்று சொன்னால், வீட்டில் நம்பமாட்டார்கள். சிவாஜி சார், பிரபுவுக்கெல்லாம் சாகும் வரை நன்றிக்கடன்பட்டிருக்கேன். டைரக்ட் பண்ணினேன் என்பதற்காக சொல்லவில்லை. அவர்கள் என் மீது கொண்ட நட்பு, பாசம், பிரியம்னு அந்தக் குடும்பத்திடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. என்னை முதன்முதலாக டைரக்டராக்கியது பிரபுதான். அடுத்ததாக, தயாரிப்பாளராகவும் ஆக்கினார். அதையெல்லாம் மறக்கமுடியாது. நான் பிரபுவை வைத்து இயக்கிய முதல் படம் ‘என் உயிர் கண்ணம்மா’.

இந்தப் படம் பற்றிச் சொல்லும்போது, இளையராஜா சாரைப் பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். ராஜா சாரை அப்போதிருந்தே தெரியும். ரஜினியின் ‘பைரவி’ படத்துக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் போதே, அவருக்கு நான் அறிமுகமானேன். அதன் பிறகு அடிக்கடி பார்த்துக்கொள்ளும் போது, ஸ்நேகமாக ஒரு புன்னகை, ஒரு வணக்கம். இளையராஜா சாரிடம் உள்ள பெரியவிஷயம்... எப்போதும் எல்லோரிடமும் மரியாதையாகவும் அன்பாகவும் பேசுவார். அப்பலாம் அவர் ஒயிட் அண்ட் ஒயிட்தான் போடுவார். அதாவது ஒயிட் சட்டை, ஒயிட் பேண்ட்.


‘என்னுயிர் கண்ணம்மா’வுக்கு முன்பு, அவரிடம் ஒரு கதை சொன்னேன். டைரக்ட் பண்ணப் போகிறேன் என்று சொன்னேன். ‘நல்லாப் பண்ணுய்யா நல்லாப் பண்ணுய்யா’ என்றார். அப்புறம், ‘என் உயிர் கண்ணம்மா’ கதையைச் சொன்னேன். ராஜா சார், மிகப்பெரிய இண்டலிஜெண்ட். கதையைச் சொல்லும்போதே, திரைக்கதையை விவரிக்கும் போதே, பாட்டு எங்கெல்லாம் வந்தா நல்லாருக்கும்னு கணிச்சிருவாரு.


சேலத்துல கம்போஸிங் வைச்சுக்கலாம்னு சொன்னார். அப்பலாம், ராஜா சார் கம்போஸிங்னா, நாலஞ்சு தயாரிப்பாளர்கள் வருவாங்க. வரிசையா, ஒவ்வொருத்தருக்கா முடிச்சுக் கொடுப்பாரு. எஸ்.எஸ்.சங்கரலிங்கம் தான் என் படத்துக்கு தயாரிப்பாளர். சிவாஜி சாரை வைச்சு, ‘கல்தூண்’ லாம் பண்ணினவர். ரெண்டு பேருக்கு கம்போஸ் பண்ணிட்டு, மூணாவதா எங்களைக் கூப்பிட்டார். மொத்தம் அஞ்சு பாட்டு. பதினைஞ்சே நிமிஷம். போட்டுக் கொடுத்துட்டார். எல்லாப் பாட்டுமே சூப்பார்ஹிட்டு. நான் அப்படியே அசந்துபோயி உக்காந்துட்டேன்.


ஒவ்வொரு பாட்டுக்குமான சூழலைச் சொன்னேன். உடனே பாட்டுப் போட்டுக் கொடுத்தார். ‘இப்படியும் ஒரு கடவுளின் வரப்பிரசாதமா?’னு ஆச்சரியமாவும் பிரமிப்பாவும் இருந்துச்சு. அப்புறமா, சென்னைக்கு வந்து ரிக்கார்டிங்கின் போது காலைல ஆறுமணிக்கெல்லாம் ராஜா சார்கிட்ட போயிருவேன். போய் நோட்ஸ் மாதிரி எழுதுவேன். ‘யானைகள் குளிக்கின்றன, பறவைகள் கத்துகின்றன’ன்னெல்லாம் குறிப்பு எழுதி, அவர்கிட்ட கொடுப்பேன். அதையெல்லாம் பார்த்துட்டு, மியூஸிக் போட்டுத்தந்தார் ராஜா சார். ஒரு தெய்வீகமா இருந்துச்சு. இந்த வேலையை செய்றதுல திருப்தியும் நிறைவும் கிடைச்சிச்சு.


இதுக்குப் பிறகு வந்துச்சு பாருங்க ஒரு சோதனை.


நானோ புது டைரக்டர். முதல் நாள் ஷூட்டிங்ல, நூறு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுங்க. ஏழெட்டு யானை. எப்படியிருக்கும்? படத்துல ஓபனிங் ஸாங். பிரமாதமா எடுத்தாச்சு. இங்கே வந்து பாத்தா, பாட்டுக்கும் இசைக்கும் ஸிங்க் ஆகலை. சவுண்ட் எஞ்சினியர் ஏதோ தப்பு பண்ணிட்டார். ஹார்ட் அட்டாக் வரமாதிரி ஆயிருச்சு. அநேகமா, அன்னிக்கிதான் எனக்கு பி.பி. வர ஆரம்பிச்சிருக்கும்னு நினைக்கிறேன்.


எல்லாத்தையும் எடுத்துட்டு இளையராஜா சார்கிட்ட ஓடினேன். விஷயத்தைச் சொன்னேன். ‘ரீஷூட் எடுக்கணுமா சார்? தயாரிப்பாளர் ஒத்துக்குவாரா இல்லையானு தெரியலியே சார். என்னோட முதல் டைரக்‌ஷன் படம்’னு புலம்பித்தள்ளிட்டேன். ‘அமைதியா இருய்யா’ன்னு சொல்லி, அதையெல்லாம் சரிபண்ணிக் கொடுத்து, ஒரு குறையும் இல்லாமப் பண்ணிக்கொடுத்தது இளையராஜா சார்தான். கொஞ்சம் ஸ்பீடு பண்ணி, டெக்னிக்கலா ஏதேதோ பண்ணி, பக்காவா செஞ்சு கொடுத்தார். இல்லேன்னா, அதையெல்லாதையுமே ரீஷூட் எடுக்கவேண்டியிருக்கும். ஏகப்பட்ட செலவாகியிருக்கும். படத்துல, பிரபு பாடுற ஓபனிங் பாட்டு அது.


நமக்கு சோதனைங்கறது கொஞ்சநஞ்சமல்ல. எடுத்தவுடனேயே சோதனைதான் லைஃப்ல!’’ என்று சொன்னாலும், இளையராஜாவை சொல்லிச் சொல்லி சிலாகிக்கிறார்; பூரிக்கிறார் சிவசந்திரன்.


- நினைவுகள் தொடரும்


சிவசந்திரனின் பேட்டியை முழுமையாகக் காண :

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x