

கோவிட்-19, மனித வரலாற்றில் ஏற்பட்ட உலகளாவிய தொற்றுநோய்களில் மிகவும் கொடியது. வீரியமிக்கது. இந்த நோயின் பாதிப்பும் அதனால் நேரும் மரணங்களும் நாளுக்கு நாள் அபாயகரமான அளவில் அதிகரித்து வருகின்றன. ஓர் அசாதாரண சூழலில் மூழ்கி உலகமே முடங்கிவிட்டது. இந்த வைரஸை எதிர்கொள்வதற்குத் தேவையான அறிவும் திறனும் எங்கள் நாட்டின் மருத்துவர்களிடம் உள்ளது என்று மார்தட்டிய அமெரிக்க அதிபர், செய்வது அறியாது கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார். கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் சமூக விலகலை இன்று கட்டாயமாக்கி உள்ளன. நமது நாட்டிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சமூக விலகல் நம்முடைய வாழ்நாளில் இதுவரை நாம் பார்த்திராத ஒன்று. சமூக விலங்கான மனிதனுக்கு நீண்ட காலத்துக்கு சமூகத்திலிருந்து விலக்கியிருப்பது எளிதல்ல. ஏற்கெனவே கோவிட்-19 குறித்த அச்சத்தில் மூழ்கியிருந்தவர்கள் இந்தச் சமூக விலக்கத்தால் கூடுதல் உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இது ஏற்படுத்தும் மனச் சோர்வினால் மக்கள் தளர்ந்து தடுமாறுகிறார்கள். இது குறித்து மனநல மருத்துவர் ருத்ரனுடனான சிறிய உரையாடல் இங்கே...
சமூக விலகலால் மக்கள் ஏன் தடுமாறுகிறார்கள்?
தனிமை என்பதை ஒரு சுகமாக அனுபவித்திருந்தவர்கள் கூட சுயவிருப்பின்றி அது ஒரு நிர்பந்தமாக அமைந்ததில் அமைதி இழந்திருக்கிறார்கள். பலர் மனத்தளவில் பதற்றமும் பயமும் சோர்வும் அடைந்திருக்கிறார்கள். மன அழுத்தத்தால் பலரும் தடுமாறுகிறார்கள். இதற்குக் காரணம் எல்லாமும் விரைவாக அமைந்துவிட்ட இன்றைய சமுதாய இயக்கம்தான். சுகமோ வருத்தமோ அதிக நேரம் அனுபவிக்காத ஒரு தலைமுறை உருவாகியிருக்கிறது. பொறுமை நிதானம் இரண்டுமே குறைந்து வருகிறது. எல்லாவற்றிலும் வேகத்தையே அனுபவித்தவர்கள் இந்த முடக்கத்தில் தடுமாறுகிறார்கள்.
சமூக விலகலால் மனத்துக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்?
சமூக விலக்கத்தில் இருக்கும்போது மனம் சோர்வதும் தளர்வதும் இயல்புதான் என்றாலும், அது எல்லார்க்கும் தீவிரமாக வந்துவிடாது. ஏற்கெனவே மனச்சோர்வினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இவ்வகைத் தனிமைப்படுத்துதல் நிச்சயமாய் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும், மனநோய்களால் பாதிக்கப்பட்டு மருந்துகளை உட்கொண்டு இயல்புக்குத் திரும்பியிருப்பவர்களுக்கு, திடீரென்று மருந்துகள் கிடைக்காமல் போனால் அவர்கள் மீண்டும் தீவிரமாகப் பாதிப்படையும் சாத்தியம் அதிகம். எனக்குத் தெரிந்த சிலர் இப்படி மருந்து வாங்க முடியாமல் தடுமாறுகிறார்கள். சில அவசியமான மருந்துகள் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்க அரசு ஆவன செய்வதாய் ஒரு செய்தி தென்பட்டது. அந்த அவசியமான மருந்துகள்/நோய்கள் பட்டியலில் மனநோய்கள் இல்லை. இதற்கு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாதிக்கப்பட்டவர்களை எப்படித் தேற்றலாம்?
இவர்களுக்குத் தேவை சகமனிதர்கள். உங்களுக்குத் தெரிந்து பாதிக்கப்பட்டவர் யாராவது இருந்தால் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசுங்கள். உங்களை நேரில் பார்க்க முடியாவிட்டாலும் உங்கள் குரல் வழி அந்த நெருக்கத்தை அவர்கள் உணர்வார்கள். தொடாதே, நெருங்காதே என்பது தான் கரோனா தடுப்பு. தொலைபேசி மூலம் பேசாதே என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. யார் மீதெல்லாம் உங்களுக்கு அக்கறை இருக்கிறதோ அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். வெட்டி அரட்டை கூட நேரத்தின் இறுக்கத்தைக் குறைக்கும். இறுக்கம் குறைய நாம் யார் வேண்டுமானாலும் உதவலாம், ஆனால், மனச்சோர்வு ஒரு நோய் நிலையிலிருந்தால் மட்டுமே மருத்துவ உதவி பலன் தரும்.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in