Last Updated : 03 May, 2020 03:47 PM

 

Published : 03 May 2020 03:47 PM
Last Updated : 03 May 2020 03:47 PM

’’ஒலிப்பதிவு மேதை சம்பத் சாருக்கு சாவே இல்லை!’’ - முக்தா ரவி நெகிழ்ச்சி 

படத்தில், டைட்டில் ஆரம்பித்து கம்பெனி பெயர் தொடங்கி, இயக்கம் வரை டைட்டில் ஓடும். அந்த டைட்டிலில், நம் வாழ்நாளில் இதுவரை பார்த்த படங்களின் 100க்கு 90 படங்களில், ஒலிப்பதிவு என்று டைட்டில் போடும் போது, சம்பத் என்று பெயர் வரும், கவனித்திருக்கிறீர்களா. அந்த சம்பத் ஒலிப்பதிவு மேதை. சவுண்ட் உலகின் கில்லாடி.
கடந்த மே 1ம் தேதி சம்பத் மறைந்துவிட்டார்.


ஏவி.எம் ரிக்கார்டிங் தியேட்டர் சுவர்கள் மொத்தமும் அவரின் விரலசைவைக் கவனித்துக் கொண்டே இருக்கும். எம்.எஸ்.வி உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்கு, அவர் இருக்கிறார் பார்த்துக்கொள்வார். சரியாகத்தான் இருக்கும் என்பதில் மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது. வாத்தியங்களுடனும் ஒலிகளுடனும் மிகப்பரிச்சயப்பட்ட அவர்... சம்பத். ஏவி.எம். சம்பத் என்பார்கள். ஆர். ஆர். சம்பத் என்பார்கள். இயக்குநர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் ‘சம்பத்’ என்கிற நான்கெழுத்து மனிதர் மீது பேரன்பும் அவரின் திறமையின் மீது மிகப்பெரிய மரியாதையும் உண்டு.


காவிரி பாய்ந்தோடும் திருச்சி மண் சம்பத்தின் பூர்வீகம். ஆரம்பகால பள்ளிப்படிப்பையெல்லாம் முடித்துக் கொண்டு, சென்னைக்கு வந்தார். அடையாரில் உள்ள செண்ட்ரல் பாலிடெக்னிக்கில் அவர் தேர்ந்தெடுத்துப் படித்த படிப்பு... ஒலிப்பதிவு. டிப்ளமோ தேர்ச்சி பெற்றார்.


இந்தியாவின் தலை சிறந்த ஒலிப்பதிவு மேதைகள் என்று போற்றப்படும் ராபின் சட்டர்ஜி, மிஸ்ரா, முகுல்போஸ் தொடங்கி தமிழகத்தின் ஜே.ஜே.மாணிக்கம் உள்ளிட்டோர் வரை பணிபுரிந்தவர். ஏவி.எம் நிறுவனத்தின் ஏவி.எம் ரிக்கார்டிங் தியேட்டரில் பல ஆண்டுகாலம் பணிபுரிந்தார்.


முக்தா வி.சீனிவாசனின் மகன் முக்தா ரவி அவரைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.


‘’சம்பத் சார் மிகச்சிறந்த ஒலிப்பதிவாளர். ஒவ்வொரு ஓசையையும் கவனத்தில் கொண்டு, அதற்கு தகுந்தது போல் ஏற்ற இறக்கங்கள் கொண்டு, பின்னணி இசைக்கு உழைப்பதில் வல்லவர். எங்களுடைய முக்தா பிலிம்ஸ் படங்கள் பலவற்றுக்கு அவர் ஒலிப்பதிவாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அவரைப் பற்றி அப்பா முக்தா சீனிவாசனும் பெரியப்பா முக்தா ராமசாமியும் பல விஷயங்கள் சொல்லி சிலாகித்திருக்கிறார்கள். சவுண்ட் ரிக்கார்டிங் உலகில், மிகப்பெரிய லெஜண்ட் சம்பத் சார்.
ஒரு பாடலை எப்படி ரிக்கார்டிங் செய்யவேண்டும் என்பது ஒருவிதம். அதேசமயம், பின்னணி இசையை எப்படி ரிக்கார்டிங் செய்யவேண்டும் என்பது வேறொருவிதம். இப்படி மாற்றங்களுடன் ரிக்கார்டிங் செய்தாலும் அதற்கு ரீ ரிக்கார்டிங் செய்யும் போது இன்னும் கவனமாக இருந்து செதுக்குவார் சம்பத் சார். இசையின் ஆதிக்கத்தால், வசனம் அடிபட்டுவிடக்கூடாது. வசனம் மிகப்பெரிய தாக்கத்தைக் கொடுப்பதற்கு ஏதுவாக, வசனம் பேசி முடித்ததும் அங்கே இசையின் ஆதிக்கம் இருக்கவேண்டும். இதில் மிகப்பெரிய மேதை சம்பத் சார்.


படத்திலும் சிவாஜி சார் நடித்தால் அதற்கு ஒருமாதிரி ரீ ரிக்கார்டிங் இருக்கும். நாகேஷோ சோவோ நடித்தால் அந்தக் காமெடிக் காட்சிக்கு தகுந்தது போல் ரீ ரிக்கார்டிங் இருக்கும். அப்போது சிறுவயதாக இருந்த எனக்கு, அப்பா முக்தா சீனிவாசன் சம்பத் சாரின் வேலைகளையும் நுணுக்கங்களையும் வியந்து வியந்து சொன்னதெல்லாம் நினைவில் இருக்கிறது.

சமைப்பது ஒரு கலை. பரிமாறுவது ஒரு கலை. சமைப்பதற்கும் பரிமாறுவதற்கும் நடுவே, எதெதில் உப்பு காரமெல்லாம் சரியாக இருக்கவேண்டும் என்று டேஸ்ட் பார்ப்பது மற்றொரு வகை. நடுவே இருந்தபடி ஒலிப்பதிவை நமக்கு வழங்குவதில், சம்பத் சார், மறக்கவே முடியாத மாமனிதர்.


எத்தனையோ இசையமைப்பாளர்களுக்கு பணிபுரிந்திருக்கிறார். இளையராஜா ஆரம்பத்தில் ஏவி.எம் ரிக்கார்டிங் தியேட்டரில்தான் கம்போஸிங் செய்தார். கிட்டத்தட்ட முதல் நூறு படங்களுக்கு அங்கேதான் இருந்தார். அப்போது சம்பத் சார்தான் ஒலிப்பதிவாளர். ஆனால் இவர் அதிகமாக பணியாற்றிய இசையமைப்பாளர் எம்.எஸ்.வி. யாகத்தான் இருக்கும். இருவரும் கூட்டாக இருந்து, பேசிப்பேசி ரிக்கார்டிங் பண்ணுவதைப் பார்க்கவே அழகாக இருக்கும்.

எங்களின் முக்தா பிலிம்ஸ் 60 ஆண்டையொட்டி விழா நடத்தினோம். கடந்த டிசம்பரில் நடந்த விழாவுக்கு சம்பத் சாரையும் அழைத்து கெளரவித்தோம். நடிகர் சிவகுமாரைக் கொண்டு அவருக்கு நினைவுப்பரிசு வழங்கினோம்.


மலையாளப் படம் ஒன்றுக்காக ஒலிப்பதிவுக்காக தேசியவிருது வாங்கியிருக்கிறார். தமிழக அரசு இவருக்கு மூன்று முறை விருதுகள் வழங்கியிருக்கிறது.
ஒலிப்பதிவில் சம்பத் சார் மேதை. அவர் மறைந்துவிட்டாலும், அவர் ஒலிப்பதிவு செய்த பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவர் பணியாற்றிய படங்களின் காட்சிகளும் வசனங்களும் நம் மனதில் இருந்துகொண்டே இருக்கும்.


சவுண்ட் வித்தைக்காரரான சம்பத் சார், மெளனத்தைக் கொண்டும் ரிக்கார்டிங் செய்தவராயிற்றே. அந்த மெளனமும் கூட, சம்பத் சாரின் திறமையை நமக்கு பறைசாற்றிக் கொண்டே இருக்கும்.


சம்பத் சாருக்கு சாவே இல்லை’’


இவ்வாறு முக்தா ரவி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x