குழந்தைமையை நெருங்குவோம்: 11- கேள்விகள் சூழ் உலகம் 

குழந்தைமையை நெருங்குவோம்: 11- கேள்விகள் சூழ் உலகம் 
Updated on
2 min read

கற்றலின் விரிவாக்கமும் ஆரம்பமும் கேள்விகள் தான். கேள்விகளை ஊக்கப்படுத்தினாலே அவர்களை அடுத்த அடுத்த கட்டத்திற்கு நகர்த்த இயலும்.

கேள்விகள் தான் ஒவ்வொரு வளர்ச்சிக்கும் மாற்றங்களுக்குமான அடித்தளம். ஏன் , எதற்கு எப்படி என்ற கேள்வி எழாமல் இருந்தால் அறிவியலோ மானுடமோ இத்தனை வளர்ச்சியினை கண்டிருக்காது. குழந்தைகளுக்கு வெகு இயல்பாகவே கேள்விகள் எழும். கொஞ்ச நஞ்சமல்ல ஏராளமான கேள்விகள் எழும்.

நம் கல்விமுறையில் மிகப்பெரிய சிக்கலே அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவர்களை கேள்விகளுக்கு பதில் சொல்ல வைத்து அடக்குவதே. மதிப்பீட்டு முறைகளில் நிறைய மாறுதல்கள் எழ வேண்டும். வகுப்புகளிலும் கேள்விகளுக்கான நேரமோ வாய்ப்போ மிகவும் குறைவு தான். இன்னொரு பார்வையில் பார்த்தால் அவர்களை கேள்வி கேட்கவோ கேட்பதற்கான சூழலையோ கூட நாம் உருவாக்குவதில்லை.

வாசிப்பு முகாம்களில் ஒரு பகுதியாக கேள்விகள் நேரம் என்று வைப்பதுண்டு. அந்த நிகழ்வில் குழந்தைகள் கேள்விகள் மட்டும் கேட்க வேண்டும். அதற்கு பதில்கள் சொல்லத்தேவையில்லை. எல்லோரும் தங்களுக்கு இருக்கும் கேள்விகளைக் கேட்கலாம். குறிப்பிட்டு ஒரு பகுதியில் என்றில்லாமல் அறிவியல், கணிதம், பள்ளி, ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள்,விளையாட்டு, வானம், பூமி என கட்டுக்கடங்காத கேள்விகள் வரும். உண்மையில் ஒவ்வொரு கேள்வி கேட்கும் போதும் அவர்களின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சியை காணலாம். ஆமாம் கேள்வி கேட்கும்போதே அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. மகிழ்ச்சி நிலவுகின்றது எனில் அங்கே கற்றல் நிகழ்கின்றது என்று தானே அர்த்தம்?

மற்றொன்று எதுவுமே இல்லாமல் கேள்வி எழாது. ஒரு குறைந்த அளவேனும் அதற்கு தீனி தேவை. அந்தக் கேள்வி பதிலை நோக்கி நகர்த்தும் ஆனால் பதில் கிடைக்கும் இடத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருக்கும். அந்த ஆச்சர்யம் மற்றும் ஒரு கேள்வி.

வீட்டில் குழந்தைகள் கேள்வி கேட்பார்கள். அவற்றை காது கொடுத்து கேட்டிருக்கமாட்டோம். நமக்கு அந்த கேள்விக்கு பதில் தெரியவில்லையெனில் “ஆமாம் பெரிய மனுஷம் மாதிரி கேட்கின்றான் பாரு” “உனக்கு வாய் ஜாஸ்தி” என்று அடக்கியோ மடைமாற்றியோ விட்டுவிடுவோம். நமக்கு தெரியாமலே இதனை செய்துவிடுகின்றோம்.

பல கேள்விகள் அவர்களின் வயதினை மீறி இருக்கலாம். நமக்கு அவர்களுக்கு கொடுக்கும் பதில்கள் புரியுமா என குழம்பிக்கொள்ளவே வேண்டாம். அந்த பதிலை கொடுத்துவிட்டு, ஒரு வேளை உனக்கு இன்னும் சில ஆண்டுகளில் புரியலாம் என்றும் சொல்லிவிடுங்கள். அந்த பதில்களை மனதில் அப்பிக்கொள்வார்கள், அதனைப்பற்றிய மேலும் விவரங்கள் அறியும்போது அந்த பதில்களை எடுத்து சரிபார்த்துக் கொள்வார்கள். அவர்கள் கேள்விகளை எந்நாளும் முடிக்கிவைத்திட வேண்டாம்.

தொழில்நுட்பம் வளர்ந்து இணையம் கைகளில் தவழும் இந்நாட்களில் குழந்தைகள் உடனே எடுத்து கூகுளில் தேடுகின்றார்கள். அது ஒரு வகையில் அவர்களின் வேட்கையை மட்டுப்படுத்துவதாகவே தோன்றுகின்றது.

குறைந்தபட்ச உழைப்பு இருந்தாலொழிய எந்த தேடலும் மனதில் நிரந்தரமாக நிற்காது. கூகுளில் அடுத்த பக்கத்திற்கு செல்வதுபோல அவை கடகடவென கடந்துவிடும். தேடுவதற்கான பொறுமையினை இழந்துவிடுவார்கள் அல்லது விடைகிடைக்கவில்லை எனில் சோர்ந்துவிடுவார்கள்.

கரோணா காலத்திலும் அவர்களுக்கு நிறைய நிறைய கேள்விகள் எழும். இது மிக நல்ல சமயம் அவர்களுடனும் அவர்கள் கேள்வியுடனும் பயணிப்பது. கேள்விகளை திறந்த ஊற்றாக அவர்கள் கொட்டுவதற்கு ஏற்ற களத்தினை அவர்களுக்கு உருவாக்க வேண்டும்.

அதற்கு முதன்முதலில் எனக்கு எல்லாம் தெரியும் உனக்கு தெரியாது என்ற அதிகார தொணியினை நம்மிடம் இருந்து உடைக்கவேண்டும். நமக்கு விடை தெரியாது எனில் ஆமாம் தெரியாது என ஒப்புக்கொண்டு, வா தேடுவோம் என்று துவங்கலாம். புத்தகத்தில் இருந்தோ, நண்பர்களிடம் இருந்தோ அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லலாம்.

ஒரு தனி நோட்டினை எடுத்து குழந்தைகளுக்கு எழும் கேள்விகளை எல்லாம் எழுதிக்கொண்டே வரச்ச்சொல்லுங்கள். அந்த நோட்டினை நமக்கு காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் தினமும் ஒரு ஐந்து கேள்விகளையாவது குறைந்தபட்சம் எழுத வேண்டும் என்று சொல்லிப்பாருங்கள்.

ஆரம்பத்தில் சடசடவென கேள்விகள் வந்து கொட்டும். அவை இதுவரையில் தேக்கி வைத்தவை. கொஞ்சம் கொஞ்சமாக குறையும். ஆனால் எப்போதெல்லாம் அவர்களிடம் கற்றல் நிகழ்கின்றதோ அப்போதெல்லாம் அவர்களின் இந்த நோட்டின் பக்கங்கள் நிரம்பும்.

கற்றலின் விரிவாக்கமும் ஆரம்பமும் கேள்விகள் தான். கேள்விகளை ஊக்கப்படுத்தினாலே அவர்களை அடுத்த அடுத்த கட்டத்திற்கு நகர்த்த இயலும். மறைமுகமாக சமூகமும் அடுத்த தளத்திற்கு நகரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in