

கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதலாகவே களத்தில் முன்னிலைப் பணியாளர்களாக உள்ளனர் மருத்துவத் துறையினரும், காவல் துறையினரும்.
அதனால்தான் நாம் அனைவரும் கைதட்டி அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தோம்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார், மருத்துவப் பணியாளர்களுக்கு டிஎஸ்பி கார்த்திகேயன் தனது சொந்த செலவில் சிக்கன் பிரியாணி வழங்கினார்.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே முடங்கினாலும், மருத்துவப் பணியாளர்கள், போலீஸார் இரவு, பகலாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன் தனது சொந்த செலவில் சிக்கன் பிரியாணி வழங்கினார்.
மானாமதுரை துணை கோட்டத்திற்குட்பட்ட மானாமதுரை, சிப்காட், திருப்புவனம், திருப்பச்சேத்தி, பழையனூர், பூவந்தி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, காவலர்கள், மானாமதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர்களுக்கு வழங்கப்பட்டன.
டிஎஸ்பி கார்த்திகேயனின் கனிவான உபசரிப்பை போலீஸார், மருத்துவப் பணியாளர்கள் மனதார பாராட்டினர்.