Published : 30 Apr 2020 16:58 pm

Updated : 30 Apr 2020 16:58 pm

 

Published : 30 Apr 2020 04:58 PM
Last Updated : 30 Apr 2020 04:58 PM

’’ எம்.என்.ராஜம் திட்டினாங்க; எனக்கும் டான்ஸ் வரலை; சரத்பாபு அண்ணனும் டான்ஸ் ஆடலை’’ - நடிகை வடிவுக்கரசி பிரத்யேகப் பேட்டி

vadivukkarasi-3-rewind-with-ramji

வலியையும் வெற்றியையும் ஒரேவிதமாக ஏற்றுக்கொள்வது என்பது சாதாரணமல்ல. செல்வத்தின் உச்சியில் இருந்ததையும் ஹோட்டலில் வேலைக்குச் சென்றதையும் சரிசமமாகவே பார்க்கிற மனசுதான், நடிகை வடிவுக்கரசிக்கு.


‘இந்து தமிழ் திசை’ யின், 'RewindWithRamji' எனும் வீடியோ நிகழ்ச்சிக்காக, வடிவுக்கரசி தன் வாழ்க்கையை விவரித்த ஒவ்வொரு சம்பவங்களும் வரிகளும் எல்லோர்க்குமான பாடம்.வடிவுக்கரசி வழங்கிய வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் தொடர்கிறது.


‘’அப்பா டென்ஷனாயிட்டார். ‘நீ எப்படி சினிமால நடிக்கலாம்? யாரைக் கேட்டு நடிச்சே?’ன்னு எனக்கு செம அடி விழுந்துச்சு. ‘நான் சாகறேன்’ன்னு தூக்கு மாட்டிக்கப்போயிட்டார். அவரை எல்லாரும் தடுத்து உக்கார்த்தி வைச்சோம். ’பி.மாதவன், தேவராஜ் - மோகன்னு எல்லாரும் என்னைத் தெரியும். அவங்களாம் உன்னைப் பாத்தாக்க என்னை என்ன நினைப்பாங்க? ‘என்னண்ணே... மகளை சினிமாவுக்கு அனுப்பிட்டீங்களேண்ணே’ன்னு கேப்பாங்களே!னு கத்துறாரு.


‘இல்லப்பா. இனிமே இந்தத் தப்பை பண்ணமாட்டேம்பா’ன்னு கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டு நிமிர்ந்தா, ஷூட்டிங்கிற்கு கூப்பிட வந்துருக்காங்க. அதுக்குப் பிறகு அப்பா அவங்க நண்பர்கள் வட்டத்துல கேட்டு என்ன செய்றதுன்னு ஆலோசனை கேட்டாரு. ‘தைரியமா நடிக்க விடுங்க. நம்ம இண்டஸ்ட்ரி. நாம இருக்கோம். பாத்துக்குவோம்’னு சொன்னபிறகு, ஷூட்டிங் போனேன். அப்பாவும் வந்தாங்க. விஜிபில படப்பிடிப்பு. ஹோட்டல் சீன். நடிச்சு முடிச்சதும், இனிமே நடிக்கவே கூடாதுன்னு உறுதி எடுத்துக்கிட்டு, பழையபடி நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.


ஆனா ‘சிகப்பு ரோஜாக்கள்’ படம் வெளிவந்துச்சு. தீபாவளி ரிலீஸ். 78ம் வருஷம். பட விமர்சனத்துல, என் கேரக்டரையும் நடிப்பையும் பாராட்டி எழுதிட்டாங்க. புதுமுகமா இருந்தாலும் நல்லா நடிச்சிருக்காங்கன்னு எழுதினாங்க. ஒருபக்கம், பி.மாதவன் சார், தேவராஜ் - மோகன் சார் அவங்க படத்துல என்னை நடிக்க வைக்க ப்ளான் பண்றாங்க.


இந்த சமயத்துலதான், ஆர்.சி.சக்தி சார், புதுமுகங்களையெல்லாம் வைச்சு, ‘ஆனந்தம் இன்று ஆரம்பம்’னு ஒரு படம் எடுக்கத் திட்டமிட்டார். இந்தப் படத்துல என்னை ஹீரோயினாப் போடச் சொல்லி ரெகமெண்ட் பண்ணினது யார் தெரியுமா? கமல் சார். அவங்க வீட்டுக்கு வந்து கேட்டாங்க. அந்தக் காலத்துல எம்ஜிஆரை வைச்செல்லாம் படம் தயாரிச்ச சோமுங்கறவர்தான் தயாரிப்பாளர். உடனே பி.மாதவன்கிட்ட அப்பா ஐடியா கேட்டார். ’நல்லவிஷயம்தானே. ஓகே சொல்லுங்க’ன்னு சொல்லிட்டார். சரின்னு சொல்லியாச்சு.


பிரசாத் ஸ்டூடியோல முதல்நாள் பூஜை, ஷூட்டிங்னு ஆரம்பமாச்சு. அதுல காந்திமதி அத்தை, கவுண்டமணி சார், அப்புறம் புது ஹீரோ சுதாகர் (கிழக்கே போகும் ரயில் சுதாகர் இல்லை). ஆனா இந்தப் படம் வரலை. இதுல நடிச்சிட்டிருக்கும் போதே, ‘ஏணிப்படிகள்’ படம் வந்துச்சு. இதுல எனக்கு பயம் என்னன்னா... சிவகுமார் அண்ணன் தான். என்னைப் பாத்துட்டு, ‘நீ ஏ.பி.என் அண்ணனோட பொண்ணுல்ல. உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை’ன்னு பாத்ததுமே திட்டுனாரு. அப்புறம் பி.மாதவன் சார் வந்து விவரம்லாம் சொன்னார்.


பி.மாதவன் சார் எங்க ஊருக்கு பக்கத்து ஊர்தான். எங்க அப்பாவோட அண்ணன், அதாவது என் பெரியப்பாவோட ஒண்ணா காலேஜ்ல படிச்சவரு. அவர்தான், படத்துக்கு டைரக்டர். அந்த ‘ஏணிப்படிகள்’ மூலமா என் திரையுலக வாழ்க்கைல கிடைச்ச முதல் தோழிதான்... நடிகை ஷோபா.


அதேகட்டத்துலதான், எஸ்.ஏ.ராஜ்கண்ணு படம் எடுக்கிறார். பாலகுரு சார், பாக்யராஜ் சார்னு எல்லாருமே தெரிஞ்சவங்க. என்னை ஹீரோயினாப் போடணும்னு முடிவு பண்ணிட்டாங்க. ‘கிராமத்துக் கதை. இந்தக் கேரக்டருக்கு நான் நல்லாருப்பேன்னு’ சொல்லி என்னை புக் பண்ணினாங்க.


அப்போ என் கூட சேர்ந்து போட்டோ செஷனுக்காக ஒருத்தரைக் கூட்டிட்டு வந்தாங்க. அவரோட நின்னு போட்டோ ஷூட் பண்ணும்போது எனக்குத் தெரியாது... அவர்தான் விஜயகாந்த்னு!


ஆமாம்...’கன்னிப்பருவத்திலே’ படத்துல, ராஜேஷ் சார் பண்ணின கேரக்டரை விஜயகாந்த் தான் பண்ணவேண்டியது. அப்புறம்தான் ராஜேஷ் சாரை புக் பண்ணினாங்க. முப்பது நாள் திருச்சில ஷூட்டிங்.


‘ஏணிப்படிகள்’ படத்துல அஞ்சு வயசு பையனுக்கு அம்மாவா, பீலிசிவம் சாரோட மனைவியா நடிச்சேன். நடிக்கும்போதே எல்லாரும் பாராட்டினாங்க. ‘கன்னிப்பருவத்திலே’க்கு விஜயகாந்த் சாரோட நான் போட்டோஷூட் பண்ணினதெல்லாம் எனக்கு தெரியாது. நானே மறந்துட்டேன். அப்புறம் பல வருஷம் கழிச்சு, அவரை வைச்சு நான் ‘அன்னை என் தெய்வம்’ படம் பண்ணினப்போ, விஜயகாந்த் சாரே சொன்னார்... ‘நீங்கதான் என் முதல் ஹீரோயின். உங்களோட போட்டோ மட்டும் ஷூட் பண்ணினாங்க. அப்புறம் என்னை வேணாம்னு சொல்லிட்டாங்க’ன்னு ஞாபகமா சொன்னார். விஜயகாந்த் சாரெல்லாம் மிகப்பெரிய மனிதர்.


‘கன்னிப்பருவத்திலே’ படம் பண்ணும்போதே, கன்னிமரா வேலையை ரிஸைன் பண்ணிட்டேன். சம்பளம் 1,500ன்னு சொன்னாங்க. ஒரேமாசம்தான் சம்பளம் வாங்கினேன். நின்னுட்டேன். ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்துக்கு சம்பளம்னு தரலை. ஆனா, தீபாவளி சமயம்னு படத்துல நான் கட்டிகிட்ட புடவை, பிளவுஸோட 250 ரூபாயும் வைச்சு கே.ஆர்.ஜி. சார் கொடுத்தார்.


என் பெரியப்பா ஏ.பி.என் அப்படிச் செஞ்சு பாத்திருக்கேன். பணத்தைக் கத்தையா வைச்சுக்கிட்டு, எல்லாருக்கும் வரிசையா பணம் கொடுத்தார் கே.ஆர்.ஜி. அப்புறம் ‘கன்னிப்பருவத்திலே’ ஒர்க் முடிஞ்சு சென்னைக்கு வந்ததும், தேவராஜ் - மோகன் அங்கிளோட ‘கண்ணில் தெரியும் கதைகள்’ படத்துக்கு புக் பண்ணினாங்க.
‘கன்னிப்பருவத்திலே’ படத்துல பெரிய சிரமம் என்னன்னா... என்னை டான்ஸ் ஆடச்சொன்னாங்க. புலியூர் சரோஜாவைப் பாத்தாலே தலைதெறிக்க ஓடுவேன். ‘ஆவாரம்பூமேனி’ பாட்டுக்கு கூட, நான்பாட்டுக்கு ஜடையைச் சுத்திக்கிட்டு ஓடிக்கிட்டே இருப்பேன். மத்தவங்கதான் ஆடுவாங்க.

இதுல இப்படின்னா... ‘கண்ணில் தெரியும் கதைகள்’ படத்துல, ஒரு பாட்டுக்கு பரத நாட்டிய டிரஸ்லாம் போட்டுக்கிட்டு ஆடவைச்சாங்க. எவ்ளோ கொடுமைங்க எனக்கு! எம்.என்.ராஜம் அத்தைதான் தயாரிப்பாளர்.
ஹைதராபாத்ல ஷூட்டிங். இந்தப் படத்துல அஞ்சு இசையமைப்பாளர்கள். எல்லாப் பாட்டுமே செம ஹிட்டு. ’நானொரு பொன்னோவியம் கண்டேன்’ பாட்டு எனக்கு. இதுக்குதான் பரத நாட்டியம். இந்தப் படத்துல எனக்குத் தோழியாக் கிடைச்சவங்கதான் ஸ்ரீப்ரியா. அப்போ அவங்க பெரிய ஹீரோயின். அதனால அவங்களுக்கு தனி கார் வரும். ஒருநாள்... ஸ்ரீப்ரியா அவங்க கார்லயே என்னைக் கூட்டிட்டுப் போனாங்க. அப்படி ஆரம்பமாச்சு பழக்கமும் நட்பும். இன்னிக்கி வரை, அதே அன்பு, மரியாதைன்னு ஸ்ரீப்ரியாவோட நட்பு தொடருது.


பரத நாட்டிய டிரஸ் கொண்டு வந்து கொடுத்தாங்க. டான்ஸ்மாஸ்டர் சோப்ரா மாஸ்டர். மாலினி, கலா மாஸ்டர்லாம் அதுல ஆடுறாங்க. கொஞ்சம் நளினமா நடந்து வானு சொல்றாங்க. எனக்கு நளினமாலாம் நடக்கவராது. நாம, நடிக்கணும்னு ப்ளான் பண்ணி, கத்துக்கிட்டு நடிக்க வரலியே!


அந்தப் பாட்டுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன். இதுல நமக்கு சப்போர்ட் யாருன்னா சரத்பாபு அண்ணன் தான். அவர்தான் ஹீரோ. அண்ணனும் ஆடமாட்டார். அழுகை அழுகை அழுகை... அந்தப் பாட்டு எடுத்து முடிக்கறதுக்குள்ளே அப்படியொரு அழுகை. எம்.என்.ராஜம் அத்தை திட்டினாங்க. ‘எதையும் கத்துக்காம நடிக்க வந்திருக்கியே’னு! தேவராஜ் அங்கிள்தான் ‘விடுறா... உனக்கு என்ன வருதோ அதைச் செய். மாஸ்டர், இந்தப் பொண்ணுக்கு என்ன ஸ்டெப் வருதோ அதை மட்டும் செய்யவிடுங்க’ன்னு சொன்னாரு.


ஆனா, சினிமாதான் வாழ்க்கைன்னு வர்றவங்க எல்லாரும் எல்லாத்தையும் கத்துக்கணும். அதெல்லாம் ரொம்ப முக்கியம்’’ என்றார் வடிவுக்கரசி.


- நினைவுகள் தொடரும்


வடிவுக்கரசியின் முழு வீடியோ பேட்டியைக் காண :


தவறவிடாதீர்!’’ எம்.என்.ராஜம் திட்டினாங்க; எனக்கும் டான்ஸ் வரலை; சரத்பாபு அண்ணனும் டான்ஸ் ஆடலை’’ - நடிகை வடிவுக்கரசி பிரத்யேகப் பேட்டிவடிவுக்கரசிRewindwithramjiகன்னிப்பருவத்திலேபாக்யராஜ்ராஜேஷ்விஜயகாந்த்கண்ணில் தெரியும் கதைகள்ஷோபாஸ்ரீப்ரியாசரத்பாபுதேவராஜ் - மோகன்ஏணிப்படிகள்சிவகுமார்பி.மாதவன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x