Published : 29 Apr 2020 06:58 PM
Last Updated : 29 Apr 2020 06:58 PM

கரோனா நிவாரணத்திலும் கோஷ்டி அரசியல்!- கண்டுகொள்வாரா ஸ்டாலின்?

கரோனா காலத்திலும் முதல்வர் பழனிசாமியையும், அதிமுக அரசையும் கேள்விகளால் துளைத்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். நேரம் வாய்க்கும்போது எளிய மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கிவருகிறார். ஆனால், இந்தச் சூழலிலும் திமுகவினர் மத்தியில் கோஷ்டி அரசியல் ஆங்காங்கே கொடிகட்டிப் பறக்கிறது.

2006-லிருந்து கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு ஏற்பட்ட தோல்விக்குச் சிகரம் வைத்தது போல கோவை மாவட்டமே இருக்க, இதைச் சரிசெய்ய கோவை மாநகர், புறநகர் என கோவை திமுக இரண்டாகப் பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதிலும் சுரத்தில்லாமல் போக, கோவை மாநகர் வடக்கு, தெற்கு, கோவை புறநகர் வடக்கு, தெற்கு என நான்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அவற்றுக்குச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இருந்தாலும் கோவை மாவட்ட திமுக என்னவோ சோபிக்கவில்லை.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளில் சிங்காநல்லூர் தொகுதியில் மட்டுமே வென்றது திமுக. கோவை முன்னாள் துணை மேயர் கார்த்தி இதன் எம்எல்ஏ ஆனார். ஆக, இப்போது கோவைக்கு திமுகவுக்கு இருக்கிற ஒரே எம்எல்ஏ கார்த்தி மட்டும்தான். சமீபத்தில் நடந்த சூலூர் இடைத்தேர்தலில் பொங்கலூர் பழனிசாமிக்கு சீட் கொடுத்தும் பார்த்தார் ஸ்டாலின். அவருக்குத் தோல்வியே மிஞ்சியது. அதன் பிறகு கோவை கட்சி மாவட்டங்கள் மறுபடியும் மாற்றியமைக்கப்பட்டன.

இதையடுத்து, கோவை மாநகர் வடக்கு, தெற்கு என்றிருந்தது, கோவை மாநகர் கிழக்கு, மேற்கு என்று மாறியது. இதன்படி கோவை மாநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரின் கீழ் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 72 வார்டுகள் வந்தன. கிழக்கு மாவட்டச் செயலாளராக சிங்காநல்லூர் எம்எல்ஏ கார்த்தி நியமிக்கப்பட்டார். இதன் விளைவு, இங்கே உள்ள வார்டுகளில் எல்லாம் முன்னாள் மா.செ.க்களான வீரகோபால், பொங்கலூர் பழனிசாமி கோஷ்டிகளுடன் எம்எல்ஏ கார்த்தியின் கோஷ்டி ஆட்களும் உள்ளடி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, மாநகராட்சிக்குத் தேர்தல் நடந்தால் யார் கவுன்சிலர் வேட்பாளர் என்பதில் கோஷ்டிகளுக்குள் போட்டா போட்டியே நடக்கிறது. தவிர கட்சித் தேர்தல் நடந்தால் அதில் வீரகோபால், கார்த்தி, பொங்கலூர் அணி என்று முஷ்டி கட்டி நிற்கிறார்கள். இப்போது மாநகராட்சிக்கு உள்ளாட்சி மன்றத் தேர்தலும் வரவில்லை. கட்சிக்கு மாவட்டச் செயலாளர் தேர்தலும் வரவில்லை. மாறாக கரோனா வந்துவிட்டது.

அனைத்து மட்டத்திலும் கட்சி நிர்வாகிகள் ஏழை எளிய மக்களுக்குக்கான கரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபடுங்கள் என உத்தரவு பிறப்பித்துள்ளார் ஸ்டாலின். ஆனால், இவர்களோ கரோனா நிவாரணப் பணி என்ற பெயரில் கோஷ்டி அரசியலில் ஈடுபடுவதாக திமுகவினரே புலம்புகிறார்கள்.

இதுகுறித்து கோவை மாநகர இளைஞர் அணி பொறுப்பாளர் ஒருவர் கூறும்போது, “72 வார்டுகளுக்கான மாவட்டச் செயலாளர்தான் எம்எல்ஏ கார்த்தி. ஆனால், அவர் தனது தொகுதிக்குள் வரும் 22 வார்டுகளுக்கு மட்டும்தான் நிவாரண உதவி கொடுக்கப்போகிறார். அதுவும் அந்தந்த வார்டு செயலாளர்கள் நிவாரணப் பொருட்களைச் சேகரம் செய்து வைத்திருந்து, அவற்றை மக்களுக்குக் கொடுக்க வரச்சொன்னால் செல்கிறார். ஆனால், மாவட்ட எல்லைக்குட்பட்ட மற்ற வார்டு செயலாளர்கள் அழைத்தால் போவதில்லை. நீங்களே யாரையாவது வைத்துக் கொடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார். இதனால் ஒவ்வொரு வார்டிலும் கோஷ்டி அரசியல் கொடி கட்டிப் பறக்கிறது.

இதன் உச்சகட்டமாக, ‘இவர் மாவட்டச் செயலாளரா, சிங்காநல்லூர் தொகுதிக்கு மட்டும் பகுதிச் செயலாளரா?’ என்று வீரகோபாலின் ஆதரவாளர் ஒருவர் ஃபேஸ்புக்கில் போட்டு, வாட்ஸ் அப்பில் பரப்பிவிட்டார். இவர் பொதுமுடக்கம் அமலுக்கு வந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குத் தினமும் 1,000 பேருக்கு உணவு வழங்கியவர். இதைப் பார்த்த கார்த்தியின் ஆதரவாளர் ஒருவர் கபசுரக் குடிநீர் வழங்குவதாகச் சொல்லி சிலருக்குக் கொடுத்து அதை ஃபேஸ்புக்கில் போட்டு வருகிறார்.

இதில் வேதனை என்னவென்றால் இதே பகுதியில் ஒரு வார்டு செயலாளர் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். எந்த வேலையும் இல்லை. பொதுமுடக்கத்தால் அவர் வறுமையால் தவித்து வருகிறார். அவருக்கு ஒரு படி அரிசி கொடுக்க ஆளில்லை. அவரிடம் ஏதாவது உதவி வேணுமா என்று கேட்கக்கூட யாருக்கும் தோன்றவில்லை. இதுபோல கோவை மாநகரத்தில் கணக்கு எடுத்தால் வறுமையில் உள்ள மூத்த கட்சிக்காரர்கள் மட்டும் நூற்றுக்கணக்கில் இருப்பார்கள்.

மறைந்த சி.டி. தண்டபாணி, மு.ராமநாதன் போன்ற தலைவர்களுக்கும், அவர்களுடன் நெருக்கமாக இருந்த பொங்கலூர் பழனிசாமி, வீரகோபால் போன்றவர்களுக்கும்தான் அதுபோன்ற மூத்த கட்சிக்காரர்களைத் தெரியும். இப்போதுள்ள மாவட்டச் செயலாளர்கள் நால்வரும் இவர்களையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. இதைத் தலைமைக்கு எடுத்துச் சொல்லவும் ஆளில்லை” என்று வருத்தப்பட்டுச் சொன்னார்.

அதிமுக அரசுடன் அனுதினமும் அரசியல் யுத்தம் நடத்திக்கொண்டிருக்கும் ஸ்டாலின், இதுபோன்ற கோஷ்டி யுத்தங்களையும் கொஞ்சம் கவனித்தால் கழகத்துக்கு நல்லது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x