Last Updated : 29 Apr, 2020 09:01 AM

 

Published : 29 Apr 2020 09:01 AM
Last Updated : 29 Apr 2020 09:01 AM

கலகல ‘கலாட்டா கல்யாணம்’; சிவாஜியும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல்படம்! 

கல்யாணம் என்றால் கலகலப்பும் இருக்கும். கலாட்டாவும் நிகழத்தான் செய்யும். ‘உங்க பெண்ணைக் கொடுங்க’ என்று கல்யாணம் பண்ணிக்கொள்ள வந்த இளைஞனுக்கு சுமத்துகிற மிகப்பெரிய வேலைதான் கல்யாண கலாட்டா. அதுதான் கலாட்டா கல்யாணம்.

1965ம் ஆண்டு. யுத்த நிதி திரட்டும் பணி. தமிழகத்தில் தீவிரமாக இருந்தது. அவசரம் அவசரமாக, ஒரு காமெடி டிராமா பண்ணிக்கொடுத்தார் சித்ராலயா கோபு. சிவாஜிகணேசன் நடித்துக்கொடுத்தார். நாடகம் ஹிட்டானது. யுத்தத்துக்கும் நல்ல நிதி கிடைத்தது. பிறகு ஆற அமர சிவாஜி யோசித்துவிட்டு, ‘கோபு, இந்தக் கதை நல்லாருக்கே. கொஞ்சம் நல்லாவே டெவலப் பண்ணு. படம் பண்ணிடுவோம்’ என்று உற்சாகப்படுத்த, அதன்படியே கதை, திரைக்கதையாக்கப்பட்டது. சினிமாவாகவும் எடுக்கப்பட்டது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதுதான் கலாட்டா கல்யாணத்தின், பெண்பார்க்கும் படலம் போலான விஷயம்!

1965ம் ஆண்டு நாடகமாகப் போட்டார்கள். 1968ம் ஆண்டு, ஏப்ரல் 12ம் தேதி படமாக வெளியிட்டார்கள். ஆமாம்... ஏப்ரல் 12ம் தேதி 1968ம் வருடம் ரிலீஸ் ஆனது. கலாட்டா கல்யாணம். கிட்டத்தட்ட படம் அரை செஞ்சுரி போட்டாச்சு. கிட்டத்தட்ட 52 வருடங்களாகிவிட்டன. இன்னும் எட்டு வருடங்களில், கலாட்டா கல்யாணத்துக்கு அறுபதாம் கல்யாணம்.

ராம்குமார் பிலிம்ஸ் எனும் பெயரில், சிவாஜிகணேசன் தயாரித்த படம் இது. சி.வி.ராஜேந்திரன் இயக்கினார். நான்கு பெண்களைப் பெற்ற தந்தை. இந்த நான்கு பெண்களை ஒரு பெண்ணைக் காதலிக்கிற ஹீரோ, நேராக தந்தையிடம் வந்து பெண் கேட்கிறார். காதலைச் சொல்கிறார். விருப்பத்தைத் தெரிவிக்கிறார்.

அந்தத் தந்தையோ, ’நாலு பொண்ணுங்களுக்கும் ஒரே சமயத்துல கல்யாணம் பண்றதுன்னு வேண்டிக்கிட்டேன். அவங்களுக்கெல்லாம் மாப்பிள்ளை பாரு. உன் லவ்வுக்கு ஓகே சொல்றேன்’ என்று கண்டீஷனும் தலையில் குண்டுமாகத் தூக்கிப் போடுகிறார்.

ஆனால் நாலும் நாலு திசை. மூத்த பெண் கிழக்கு என்றால், கடைசிப் பெண் மேற்கு. ‘என்னடா இது வம்பாப் போச்சு’ என்று கல்யாண மாப்பிள்ளை பிடிக்கும் களத்திற்குள் ஹீரோ இறங்குகிறார். அதன் பிறகு நடக்கிற ரகளைகளும் ரவுசுகளும் தில்லாலங்கடிகளும் உட்டாலக்கடிகளும்தான் கதை. கலாட்டா கதை. கலாட்டா கல்யாணத்தின் கதை.

1965ம் ஆண்டு வெளியான ’வெண்ணிற ஆடை’தான் ஜெயலலிதாவுக்கு முதல்படம். ’ஆயிரத்தில் ஒருவன்’ படம்தான், எம்ஜிஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல்படம் இது. ’கன்னித்தாய்’, ’முகராசி’, ’தனிப்பிறவி’, ’சந்திரோதயம்’ என்று தொடர்ந்து எம்ஜிஆருடனும் ’குமரிப்பெண்’ என்று ரவிச்சந்திரனுடம் ’யார் நீ’ முதலான படங்களில் ஜெய்சங்கருடனும் நடித்தார்.

பிறகு 68ம் ஆண்டு, சிவாஜிகணேசனுடன் நடித்த ’கலாட்டா கல்யாணம்’தான் இருவரும் முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்தபடம். ஸ்ரீதரிடம் பணியாற்றிய சி.வி.ராஜேந்திரன் முதன்முதலாக இயக்கிய படம். ஸ்ரீதர் - கோபு கதை எழுதியிருக்க, திரைக்கதையும் வசனமும் கோபு எழுதியிருக்க, சி.வி.ராஜேந்திரன் இயக்கியிருந்தார்.

மூத்த பெண்ணாக மனோரமா. இரண்டாவது பெண் ஜெயலலிதா. மூன்றாவது பெண் ஜோதிலட்சுமி. நான்காவது சச்சு. இதில் மூத்த பெண்ணுக்கு ஆண்கள் என்றாலே வெறுப்பு. கல்யாணமே வேண்டாம் என்கிறார். மூன்றாவது பெண் ஜோதிலட்சுமியோ, ஏற்கெனவே ஏவி.எம்.ராஜனை காதலித்து, அவரால் கைவிடப்பட்டு, அவரைத்தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். கடைசி பெண் சச்சு, சினிமா பைத்தியம். சினிமாவில் நடிக்கிற ஆசையில் சுற்றித் திரிகிறார். இந்த அத்தனை கவலைகளும் சிவாஜியின் தலையில். ஆனால் கவலைகள் களேபரங்களாக, களேபரங்கள் அனைத்தும் கலாட்டாக்களாக, ரசனையும் ரகளையுமாகப் போய்க்கொண்டிருக்கும் திரைக்கதைதான் படத்தின் ஆகப்பெரிய பலம்.

நான்கு மகள்களுக்கு அப்பாவாக தங்கவேலு. அவரின் மச்சினனாக சோ. சிவாஜியின் நண்பனாக நாகேஷ். இது போதாதா கலாட்டாவுக்கு! சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மாமாவை வாரிவிட்டுக்கொண்டே இருப்பார் சோ. சமயம் கிடைக்கும்போதெல்லாம் சிவாஜியுடன் மல்லுக்கு நின்று, அல்லுசில்லு பெயர்ந்து அசடு வழிந்துகொண்டே இருப்பார் நாகேஷ்.

ஏவி.எம்.ராஜன் வேறொரு பெண்ணுடன் கூத்தடிக்க, அதில் இருந்து அவரைக் கழற்றிவிட ஒரு நாடகம் போடுவார்கள் சிவாஜியும் நாகேஷும். அதில் சிவாஜியே மாட்டிக்கொள்ள, அதன் பிறகு உண்மை புரிந்து கொஞ்சி காதல் புரிவார் ஜெயலலிதா.

ஆண்களையே பிடிக்காத மனோரமாவை மனம் மாற்ற, நாகேஷைக் கொண்டு மடை மாற்ற முயற்சிப்பார் சிவாஜி. நாகேஷின் தற்கொலை நாடகம் ஓரளவு ஒர்க் அவுட்டாகும். அதேசமயத்தில், ஏன் ஆண்களைப் பிடிக்காது என்பதற்கு கல்லூரிக்காலத்தில் நடந்த விஷயத்தைச் சொல்லி மனோரமா குமுறுவார். அந்த ஜம்புவை மன்னிப்பு கேட்க வைக்கிறேன் என்று சொல்லி, ஜம்பு வீட்டுக்குச் சென்று அவரிடம் அடி உதையும் வாங்கி, தெறிக்க ஓடிவருவார்கள் சிவாஜியும் நாகேஷும்!

அடுத்த கட்டமாக, ஜம்பு வீட்டில் இருக்கும் குழந்தையை, நாகேஷ் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார். அதன் பிறகு, கலாட்டா களேபரமாகிப் போகும். போதாக்குறைக்கு, ‘குழந்தை பிறந்தது முதல் எங்களுக்கு நேரம் சரியில்லை. நாங்களே கொன்றுவிடலாம் என்றிருந்தோம். நீங்களே குழந்தையை வைத்துக்கொள்ளுங்கள்’ என்று பாழடைந்த கோயில் மண்டபத்தில் சீட்டு வைக்க, சிவாஜி அண்ட் கோ நொந்து நூலாகி, நூலும் அந்து அவலாகிப் போவதெல்லாம் தனி காமெடி.

ஒருவழியாக, மனோரமா கொஞ்சம்கொஞ்சமாக மனம் மாறுவார். ஏவி.எம்.ராஜனை மடக்கி, திசை திருப்ப அவரும் ஒருவழியாக ஜோதிலட்சுமி பக்கம் வந்துவிடுவார். நடிகையாகும் ஆசை கொண்ட சச்சுவுக்கு என்ன செய்வது என்று விழி பிதுங்கியிருக்கும் வேளையில், ஜவுளிக்கடை ஓணர் வி.கோபாலகிருஷ்ணன் கண்ணில் பட, அவ்வளவுதான். மடக்கிப் பிடித்து கண்டீஷன்களையெல்லாம் சொல்லுவார்கள் சிவாஜியும் நாகேஷும். அவரும் சம்மதிக்க, எல்லோரையும் பிடித்துவிட்ட, எல்லோருக்கும் மாப்பிள்ளை கிடைத்துவிட்ட சூழ்நிலை ஒருபக்கம்...

நாலு பெண்கள் இருந்தும் தாய்மாமன் சோவை யாருமே கட்டிக்கொள்ள விரும்பாத நிலை. யதார்த்தமாய் சோ, ஒரு பெண்ணை சந்திக்க, அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளக் கேட்பார் சோ. அவரும் சம்மதம் சொல்லுவார். அந்தப் பெண், குழந்தையை எடுத்துவந்த வீட்டில் வேலை செய்வார்.

சிவாஜி வீட்டில் உள்ள குழந்தை இதுதான் என்கிற விவரம் சோவுக்குத் தெரியவர, அங்கே குழந்தைப் பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வரும்.

ஒருவழியாக, கல்யாணத்துக்கு எல்லாம் தயாராகிக் கொண்டிருக்க, வி.கோபாலகிருஷ்ணனிடம் இருந்து போன் வரும். மாட்டிக்கிட்டிருக்கேன் சார் என்று இடத்தைச் சொல்லுவார். அங்கே போனால், சிவாஜியின் அப்பாவை, ‘கொன்னுட்டுத் தப்ப பாக்கறியா. ஒழுங்கா பணம் கொடு’ என்று ஒரு கூட்டம் மிரட்டும். அங்கே புகுந்து, சிவாஜி, நாகேஷ், ஏவி.எம்.ராஜன், எல்லோருமாகச் சேர்ந்து சண்டை போட்டு, அப்பாவையும் காப்பாற்றி, கல்யாணமும் செய்துகொள்ள... கலாட்டாவாய் ஆரம்பித்து கலகலப்பாக நடந்தேறும் கல்யாணத்துடன் சுபம் கார்டு போடப்படும்.

படம் தொடங்கியது முதல் முடிவு வரை, சிரிப்பு சிரிப்பு சிரிப்புதான். கலகலவென ஓடிக்கொண்டிருக்கும் படத்தை, பி.என்.சுந்தரம் பளிச்சென்று ஒளிப்பதிவு செய்திருப்பார்.

‘இந்தா பாரு விசு. அந்தப் பொண்ணு முதமுதல்ல நம்ம கூட ஜோடி சேருது. பாட்டெல்லாம் அதுக்குத் தகுந்தாப்ல பின்னிடணும். வாலி... உனக்கும்தான் சொல்றேன். நல்லா எழுது’ என்று சிவாஜி ஜாலியாய்ச் சொல்ல... உடனே படத்தின் தொடக்கப் பாடலாக, ‘வந்த இடம்... நீ நல்ல இடம்...’ என்று வாலி எழுத, எம்.எஸ்.வி.யின் மெட்டுகள் ஒவ்வொன்றும் கலகல லகலக மொட்டுகள். ’மெல்ல வரும் காற்று’ என்றொரு டூயட் பாடல், பட்டையைக் கிளப்பும்.

’அப்பப்பா நான் அப்பனல்லடா...’ என்றொரு பாடல். ’எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்’ என்றொரு குரூப் பாடல். எல்லாப் பாட்டுகளுமே ஹிட். படம் அதைவிட சூப்பர் ஹிட். சிவாஜி அவ்வளவு இளமையாக, துள்ளலுடன் ஸ்டைலாக இருப்பார். ஜெயலலிதாவும் அப்படித்தான்.

காதல், கல்யாணம் செய்துகொள்ள தரகர் போல் மாப்பிள்ளை பிடிக்கும் வேலை, ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு வகை, காதல், டிராமா, காமெடி என ரகளை கட்டி, புகுந்துபுறப்பட்ட கலாட்டா கல்யாணம், ஆல் டைம் காமெடி கலாட்டா!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x