

கரோனா ஊரடங்கால் கையில் பணம் இல்லாமல் கர்ப்பிணி மனைவியுடன் தவித்த இளைஞருக்கு தேனி விஜய் ரசிகர் மன்றம் உதவியுள்ளது.
உலகையே புரட்டிப் போட்ட கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மே3-ம் தேதியைக் கடந்து ஊடங்கு நீடிக்கப்பட வாய்ப்பும் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், 144 தடை உத்தரவு காரணமாக பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தேனியில் வசிக்கும் இஸ்லாமிய காதல் தம்பதியையும் வறுமை விட்டு வைக்கவில்லை.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த காதல் தம்பதிகளான அமீன் மற்றும் கண்சுலாபீவி தான் இவர்கள். பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்து வந்த இவர்களின், காதலுக்கு பெற்றோர்கள் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்தனர். 9 வருடக் காதல் கை கூடியது.
அமீன் தேனியில் உள்ள ஒரு பிரபல சலூனில் பணிபுரிந்து வருகிறார். தன் காதல் மனைவியுடன் கடந்த ஜனவரி மாதம் நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் ஒரு சிறிய வீட்டில் வாடகைக்கு குடியேறினார். தேனிக்கு குடிபெயர்ந்த ஒன்றரை மாதத்திலேயே கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மத்திய அரசு அறிவித்தது.
இதனால் பணிக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. கைவசம் இருந்த பணத்தையும், வாடகை வீட்டிற்கான முன் பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கியதால் தற்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட்டது.
மேலும் 5 மாத கர்ப்பிணியான தன் காதல் மனைவிக்கு மருத்துவச் செலவிற்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் இருந்து தேனிக்கு குடிபெயர்ந்து அதன் காரணமாக ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளை மாற்றம் செய்யாததால் அரசு சார்பாக வழங்கப்பட்ட கரோனா நிதி மற்றும் ரேசன் பொருட்களும் அமீனால் பெறமுடியவில்லை.
சொந்த ஊருக்கு செல்லலாம் என்று பார்த்தாலும், கர்ப்பிணி மனைவியை அழைத்துக்கொண்டு அவ்வளவு தூரம் செல்வது ஆபத்தானது என்பதால், வீட்டிலேயே அமீன் முடங்கிப்போனார்.
கரோனோ ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடும் காதல் தம்பதிகளின் நிலை குறித்து தேனி விஜய் ரசிகர் மன்றத்திற்கு தகவல் கிடைத்தது.
உடனே, விஜய் ரசிகர் மன்றத்தினர், நேரடியாக அமீன் வீட்டிற்கு சென்றுள்ளனர். மனைவி கர்ப்பம் தரித்ததால் மருத்துவச் செலவுக்கு மட்டும் பணம் கிடைத்தால் கூட போதும் என தெரிவித்துள்ளனர் அமின். இதுகுறித்து விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர், நடிகர் விஜய் கவனத்திற்கு இது குறித்து தொடர்புகொண்டு கூறியுள்ளார்.
உதவி கேட்ட 2 மணி நேரத்திலே மருத்துவச் செலவிற்காக 5 ஆயிரம் பணத்தை நடிகர் விஜய் அனுப்பியுள்ளார். அப்பணம், அமீன் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் விஜய் மக்கள் மன்றம் சார்பாக விரைவில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
காதல் திருமணத்தால், சொந்த ஊரை விட்டு பிழைப்பு தேடி தேனி வந்த காதல் தம்பதியருக்கு, எவ்வித யோசனையும் இன்றி உதவிக்கரம் நீட்டியுள்ள நடிகர் விஜய் மற்றும் தேனி மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் செயல் பாராட்டுதலுக்குரியது.