Last Updated : 26 Apr, 2020 10:37 AM

 

Published : 26 Apr 2020 10:37 AM
Last Updated : 26 Apr 2020 10:37 AM

’காதலிக்க நேரமில்லை’ - நீங்கள் எத்தனைமுறை பார்த்திருக்கிறீர்கள்?

‘போன மாசம் ஒரு படம் பாத்தோமே... அது என்ன படம்?’ என்று படத்தின் பெயரையோ, நடிகரின் பெயரையோ, டைரக்டரின் பெயரையோ மறந்துவிட்டுக் கேட்போம். அப்படியெனில் கதையை? அதைவிட்டுத் தள்ளுங்கள்.

ஆனால் மொத்தக் கதையும் நமக்கு அத்துபடி.‘இந்தப் படம் பாத்துட்டீங்களா?’ என்று ஏதேனும் படம் குறித்துக் கேட்பதில் தவறில்லை. ஆனால் , ‘இந்தப் படத்தைப் பாத்திருக்கீங்களா?’ என்று கேட்டால் சுள்ளென்று கோபமாகிவிடுவார்கள். அந்தக் கேள்வியை அப்படிக் கேட்காமல், ‘எத்தனை தடவை பாத்தீங்க’ என்று கேளுங்கள். குதூகலமாகி, குஷியாக பதில் சொல்லுவார்கள். அந்தப் படம்... காதலிக்க நேரமில்லை.

1964ம் ஆண்டில் வந்த படம். கிட்டத்தட்ட, 56 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் இன்றைக்கும் புத்தம் புதிய காப்பியாக, நம் மனசுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது காதலிக்க நேரமில்லை.

1959ம் வருடம் ’கல்யாணப் பரிசு’ படத்தை முதன் முதலாக இயக்கிய ஸ்ரீதர், 60ம் வருடத்தில் ’மீண்ட சொர்க்கம்’ படத்தையும் ’விடிவெள்ளி’யையும் இயக்கினார். 61ம் வருடம் ’தேன் நிலவு’ படத்தைத் தந்தார். 62ம் வருடத்தில், ’நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தையும் ’போலீஸ்காரன் மகளையும்’ வழங்கினார். 63ம் ஆண்டு ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தைக் கொடுத்தார். 64ம் வருடத்தில், ’கல்யாணப்பரிசு’, ’விடிவெள்ளி’, ’மீண்ட சொர்க்கம்’, ’தேன்நிலவு’, ’நெஞ்சில் ஓர் ஆலயம்’, ’போலீஸ்காரன் மகள்’, ’நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய படங்கள் எப்படியான வெற்றிகளை அவருக்குத் தந்ததோ... அதையெல்லாம் விட பன்மடங்கு வெற்றியை, வசூலை, பெயரை, புகழை, ரசிகர்களை அவருக்குக்கொடுக்கும் வகையிலான படத்தைத் தந்தார். அதுதான் ’காதலிக்க நேரமில்லை’.

நகைச்சுவைக்காகவே எடுக்கப்பட்ட முதல்படம் இதுதான் என்பார்கள். நகைச்சுவையும் காதலும் சேர்த்துச் செய்த கலவையாக வந்த படமும் இதுவே என்பார்கள். ஒரு நகைச்சுவை ப்ளஸ் காதல் படம் ஈஸ்ட்மென் கலரில் வெளியான முதல் படமும் இதுதான் என்பார்கள். இந்த நிமிடம் வரை, தமிழ் சினிமாவின் முதன்மையான நகைச்சுவைப் படம் என்று கொண்டாடிக்கொண்டிருப்பதும் இந்தப் படத்தைத்தான்.

எல்லோருக்கும் தெரிந்த முத்துராமன் இருக்கிறார். எல்லோருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக ரவிச்சந்திரனை அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர். எல்லோர் இதயங்களிலும் நெருங்கியிருக்கும் நாகேஷ் ... சொல்லவா வேண்டும். ஆனால் படத்தின் டைட்டிலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா? டி.எஸ்.பாலையா. நடிப்பில் மகா அசுரனான பாலையாவை, ஸ்ரீதர் அளவுக்கு சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இயக்குநர்கள் மிகவும் குறைவுதான் என்றுதான் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட படத்தின் நாயகனும் பாலையாதான்!

கலர் படம். அப்படியொரு கலர் படம். டைட்டில் முடிந்ததும் வருகிற ’என்ன பார்வை... உந்தன் பார்வை...’ பாடலில், கேமிராவின் பார்வையே நம்மை பிரமிக்க வைக்கும். அந்தக் கால மெரீனாவும் டிரைவர் சீட்டுக்கு எதிரில் முத்துராமனின் முகமும் தெரியும்படியான காட்சி அமைத்தலும் கனகச்சிதம். கவிதை போல் பண்ணியிருப்பார். அப்படித்தான், ’உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா’ பாட்டிலும் கூட, காரின் சக்கரத்தில், காஞ்சனாவும் ராஜஸ்ரீயும் தெரிவார்கள். ஸ்ரீதரின் வலதுகரமாகவும் இந்தியாவின் மிக முக்கிய ஒளிப்பதிவு மேதையுமான ஏ.வின்சென்ட்டின் கண் ஜாலம், கை காலம் அவையெல்லாம்!

பாலையா, காஞ்சனா, ராஜஸ்ரீ, நாகேஷ், ரவிச்சந்திரன், அவரின் தந்தை, முத்துராமன், அவரின் தந்தை (வி.எஸ்.ராகவன்), அவரின் தாயார், பாலையாவின் மேனேஜர், மேனேஜரின் மகள் சச்சு, ஆழியாறு, பொள்ளாச்சி, ஊட்டி... அவ்வளவுதான் கதாபாத்திரங்கள். இடங்கள். அவர்களைக் கொண்டுதான் அதைக்கொண்டுதான் மொத்த ஆட்டமும் போட்டிருப்பார் ஸ்ரீதர்.

’விஸ்வநாதன் வேலை வேண்டும்’ பாட்டு, அந்தக் கால ஸ்டைலின் ஆரம்பம். தங்கப்பன் மாஸ்டர்தான் டான்ஸ். அப்போது அவருக்கு உதவியாளர் சுந்தரம் மாஸ்டர். பிறகு பல வருடங்கள் கழித்து, தங்கப்பன் மாஸ்டருக்கு அஸிஸ்டெண்டாக சேர்ந்தவர் கமல் என்பது கொசுறுத் தகவல்.

பாடல் மொத்தமும் கண்ணதாசன். ஒரு பாட்டு தேன், இன்னொரு பாட்டு அல்வா, அடுத்த பாட்டு மைசூர்பா, இன்னொரு பாட்டு பாஸந்தி. எல்லாப் பாட்டுகளும் ஹிட்டு. விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் மெல்லிசை மன்னர்களானது இந்தப் படத்தில் இருந்துதான் என்று சொல்லுவார்கள். டைட்டிலிலும் அப்படித்தான் வரும். பிறகு படத்தின் சில்வர் ஜூப்ளிக்குப் பிறகு விழா எடுத்த போது, அவர்களுக்கு மெல்லிசை மன்னர்கள் பட்டத்தை வழங்கியதாகச் சொல்வார்கள்.

காஞ்சனாவுக்கு அறிமுகப்படம். அவரைக் காதலிக்கும் முத்துராமன், அவருடைய நண்பன் ரவிச்சந்திரன், பாலையாவின் மற்றொரு மகளான ராஜஸ்ரீயைக் காதலிக்க, நண்பனின் காதலுக்காக அப்பா வேஷம், பணக்கார வேஷம் போடுகிறார் முத்துராமன். பணக்காரர், எஸ்டேட் முதலாளியாக பாலையா. பாலையாவைத் தவிர, வேறு யாரும் இந்தக் கேரக்டரைச் செய்திருக்கவே முடியாது. காதலிக்க நேரமில்லை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்ததற்கு, பாலையாவின் நடிப்பும் பலம் சேர்த்தது.

* இங்கிலீஷ் படம் மட்டும்தான் பாப்போம்.

*பணத்திமிர். இந்தப் பணக்கார வர்க்கத் திமிரை ஒடுக்கறதுக்காகவே ஒரு படம் எடுக்கிறேன்.

* பெட்ரோலுக்கு காசு வாங்கிட்டு, கம்பெனி கார்ல வரக்கூடாது.

* கம்பெனி டிரஸ்ஸை எடுத்துட்டு வீட்டுக்குப் போகக் கூடாது.

*யார் கேட்டாலும் படிச்சது அஞ்சாவதுன்னு சொல்லக்கூடாது. கான்வென்ட்டுன்னு சொல்லணும், அப்பதான் கம்பெனிக்கு மரியாதை.

* பணம் இருக்கட்டும் சார். கலைக்காக சேவை செய்ய ஆசைப்படுறேன்.

* அதை இப்ப சொல்லாதே. உன்னை வைச்சு படம் எடுத்து ஓட்டாண்டியாகி, அடுத்த படம் எடுக்க உங்கிட்ட வருவான் பாரு. அப்ப சொல்லு.

* அசோகர்... உங்க மகருங்களா.

அடேங்கப்பா... இன்னும் சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

முத்துராமன் போனில் பேசிச் சிரிப்பார். போனை வைப்பார். பக்கத்தில் உள்ள பாலையாவும் சிரிப்பார். சம்பந்தி எதுக்குச் சிரிச்சீங்க என்பார். அவரு ஹாஸ்யமா ஏதோ சொன்னார் என்பார் முத்துராமன். ஹாஸ்யமாவா... என்று இன்னும் பலமாகச் சிரிப்பார் பாலையா. பலேய்யா!

இயக்குநர் தாதா மிராஸி தெரியும்தானே. ’புதிய பறவை’யெல்லாம் இயக்கினாரே. அவர் கதை சொல்லும் ஸ்டைலை வைத்துதான், பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் சீன் எடுக்கப்பட்டது என்பார்கள். அந்தக் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் சிரிக்கலாம். ரசிக்கலாம். வியக்கலாம்.

இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது முடியாது என்று சொல்லிவிட்டாராம் சச்சு. கதாநாயகியாக நடிப்பதுதான் லட்சியம். நகைச்சுவை நடிகையாக வேண்டாமே என்றாராம். ஆனால் ஸ்ரீதர், கதை குறித்தும் கேரக்டர் குறித்தும் விவரமாகச் சொல்லவே ஒத்துக்கொண்டார். ‘நான் நடிக்க ஒத்துக்கிட்டதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. இதுதான் நான் நடிச்ச முதல் கலர்படம்’ என்று சொல்லிப் பூரிக்கிறார் சச்சு. ‘மலரென்று முகமொன்று சிரிக்கட்டும்’ பாடலுக்கு சச்சுவும் நாகேஷும் அப்படியொரு ஆட்டம் போட்டிருப்பார்கள். மிகப்பெரிய கதாநாயகியாக வந்திருக்கவேண்டியவர் என்று இப்போது இந்தப் படத்தைப் பார்த்தாலும் சச்சுவின் நடிப்பையும் அழகையும் கண்டு பிரமிப்போம்.

ஸ்ரீதரும் கோபுவும் இணைந்து கதை வசனம் எழுதியிருப்பார்கள். காமெடி படத்துல லாஜிக்கெல்லாம் பாக்கக்கூடாது என்று இன்றைக்கு சப்பைக்கட்டு கட்டுகிறோம். ஆனால், காமெடிக்கதைதான் என்றபோதிலும் லாஜிக்கை எந்த இடத்திலும் மீறியிருக்க மாட்டார் ஸ்ரீதர்.

ஸ்ரீதர் வந்த பிறகுதான் டைரக்டர்கள் பக்கம் ரசிகர்களின் கவனம் போயிற்று. ஸ்ரீதர் வந்த பிறகுதான், முக்கோணக் காதல் கதை என்பது உருவாயிற்று. ஸ்ரீதர் வந்த பிறகுதான், பேச்சு வழக்கு ஸ்டைலில், தமிழ் சினிமாவின் வசனங்கள் வரத்தொடங்கின. அதில் முழு முதல் கலர் காமெடி, காதல் ’காதலிக்க நேரமில்லை’க்கு வெகு நிச்சயமாக தனித்த இடம் உண்டு.

பல முறை பார்த்திருக்கிறேன். பதினெட்டு வருடங்களுக்கு முன்பு புத்தம் புதிய காப்பி என்று வெளியிட்ட போது, முதல் நாள் இரவுக்காட்சி, அடுத்த நாள் இரவுக்காட்சி, மூன்றாம் நாள் இரவுக்காட்சி என்று பார்த்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. டிவியில் ஒளிபரப்பும் போதெல்லாம் வேறு எந்தவேலையோ போன் பேசுவதோ இல்லாமல், ரசித்துச் சிரித்து, பார்க்கிறவர்கள் எத்தனையோ பேர் உண்டு.

கதை, கதையை விரிவாக்குகிற திரைக்கதை, அந்தத் திரைக்கதைக்கு வலு சேர்க்கிற வசனங்கள், பாடல்கள், பாலையாவும் நாகேஷூம் உடல்மொழியாலும் வசன உச்சரிப்புகளாலும் தனிக்கவனம் ஈர்த்த அசகாயத்தனம், முத்துராமனின் யதார்த்த நடிப்பு, காஞ்சனா, ராஜஸ்ரீயின் அழகு ப்ளஸ் நடிப்பு, அந்த சச்சுவின் அப்பாவின் அப்பாவித்தனம் (நாளைக்கே கல்யாணமா? எனக்குப் பட்டுச்சட்டை வாங்கணும், வேட்டி வாங்கணும்), ரவிச்சந்திரனின் இளமைத்துள்ளல், சச்சுவின் அழகு, கேமிரா, இசை, இயக்கம் என்று இன்னும் எத்தனை நூற்றாண்டுளானாலும் ’காதலிக்க நேரமில்லை’யை... நெஞ்சம் மறக்கவே மறக்காது! முக்கியமாக, இயக்குநர்களுக்கு மிகப்பெரிய அந்தஸ்தையும் கெளரவத்தையும் மரியாதையையும் தேடித்தந்த மகாபடைப்பாளி புதுமை இயக்குநர் ஸ்ரீதருக்கு ராயல் சல்யூட்.

ஆமாம்... காதலிக்க நேரமில்லை படத்தை நீங்கள் எத்தனை முறை பார்த்திருக்கிறீர்கள், ஞாபகம் இருக்கிறதா?


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x