Last Updated : 25 Apr, 2020 03:48 PM

 

Published : 25 Apr 2020 03:48 PM
Last Updated : 25 Apr 2020 03:48 PM

பசியால் தவிப்போரை தேடிச்சென்று உணவளிக்கும் சுசீந்தரம் இளைஞர்கள்: ஊரடங்கில் தினமும் 250 பேருக்கு மதிய உணவு வழங்கி உன்னத சேவை

சுசீந்திரத்தில் ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து ஒரு மாதத்திற்கு மேலாக பசியால் தவிப்போரை தேடிச் சென்று உணவளித்து வருகின்றனர் இளைஞர்கள் சிலர்.

தினமும் 250 பேருக்கு மேல் உணவு விநியோகம் செய்யும் இந்த உன்னத பணியை பொதுநல ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

கரோனா பாதிப்பால் கடைபிடிக்கப்பட்டு வரும் ஊரடங்கால் வீட்டில் பொதுமக்கள் முடங்கியுள்ளனர். அதே நேரம் சாலையோரம், பொது இடங்களில் சுற்றி வரும் முதியவர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

இதைப்போல் கரோனா ஒழிப்பிற்கான அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டு வரும் அரசு, மற்றும் தனியார் ஊழியர்கள் பலரும் வழக்கம்போல் பசியாற முடியாமல் சிரமம் அடைவதை காணமுடிகிறது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநராட்சி சார்பிலும், பிற பகுதிகளில் உள்ளாட்சி அமைப்பு, பொதுநல ஆர்வலர்கள் மூலம் உணவு விநியோகம் செய்து வருகின்றனர். அம்மா உணவகம் மூலமும் ஆதரவற்றோர், மற்றும் ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இவற்றிற்கு மத்தியில் சுசீந்திரத்தில் சேவாபாரதி மூலம் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தங்களது சொந்த செலவிலும், பொதுமக்கள் வழங்கும் காய்கறி, அரிசியை கொண்டும் தினமும் உணவு சமைத்து ஏழைகள், மற்றும் உணவின்றி தவிப்போருக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

மதிய உணவு கிடைக்காமல் சிரமம் அடைவோரை முறையாக கண்டுபிடித்து பார்சல் மூலம் சுசீந்திரம், மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று விநியோகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தினமும் 250 பேர் முதல் 270 பேர் வரை இதுபோன்று மதிய உணவு வழங்கி வருகின்றனர். இதுகுறித்து உணவு தயார் செய்து விநியோகம் செய்துவரும் சுசீந்திரம் சேவாபாரதியை சேர்ந்த சிவா கூறுகையில், “ஊரடங்கால் வீட்டிற்குள் அனைவரும் முடங்கிய நிலையில் ஆதரவற்றோர் மட்டுமின்றி நமக்காக பணியாற்றும் சுகாதாரப்பணியாளர்கள், காவல்துறையினர், மின் ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என ஏராளமானோர் தினமும் உரிய நேரத்தில் உணவு இன்றி தவிப்பதை ஊரடங்கு அமலான முதல் நாளிலே பார்த்தோம்.

இதனால் சேவா பாரதி மூலம் தினமும் பசித்தோருக்கு உணவு வழங்க முடிவெடுத்து மார்ச் 26ம் தேதி முதல் உணவு விநியோகித்து வருகிறோம். 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ரூ.500, ரூ.1000 என சேர்த்து சொந்த செலவில் உணவு பொருட்களை வாங்குகிறோம். அரிசி, பருப்பு, காய்கறி போன்ற பொருட்களை யார் கொடுத்தாலும் பெற்று அவற்றையும் உணவிற்கு பயன்படுத்துகிறோம்.

காலையில் உணவு தயார் செய்யும் பணியை தொடங்கி மதியம் 12 மணிக்கும் சமையலை முடித்து விடுகிறோம். சாம்பார்சாதம், கூட்டாஞ்சோறு, தயிர்சாதம் என ஒவ்வொரு நாளும் விதவிதமான உணவை சமைத்து நேரடியாக வருவோருக்கு உணவு வழங்குவதுடன், ஆதரவற்றோர், மற்றும் கரோனா பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களையும் இருக்கும் இடத்திலே சென்று வழங்கி வருகிறோம்.

இந்த சேவை எங்களுக்கு மன நிறைவை தருகிறது. ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாக உணவு வழங்கியுள்ள நிலையில் ஊரடங்கு முடியும் வரை இப்பணியை தொடரவுள்ளோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x