Last Updated : 24 Apr, 2020 11:37 AM

Published : 24 Apr 2020 11:37 AM
Last Updated : 24 Apr 2020 11:37 AM

குழந்தைமையை நெருங்குவோம்: 8- குடும்ப சபை நடத்துவோம்

குழந்தைகள் பெற்றோர் மீது விமர்சனம் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும். ஒரு வகையில் ஜனநாயக நாட்டின் பிரஜைகளை உருவாக்கும் முயற்சி இது.

சட்டசபை, கிராமசபை கேள்விப்பட்டதுண்டு அதென்ன குடும்ப சபை! உங்கள் ஊகம் சரியே குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை அசைபோடவும், திட்டமிடவுமே இந்த சபை. கிராம சபையில் என்னென்ன செய்கின்றார்களோ அவை அனைத்தையுமே இந்த குடும்ப சபையில் நிறைவேற்றலாம்.

உதாரணத்துக்கு, நாங்கள் வளரும்போது எங்கள் வீட்டில் இந்தப் பழக்கம் இருந்தது. சபை நடவடிக்கை, தினமும் காலையில் ஒன்றாக உண்பதில் ஆரம்பிக்கும். கல்லூரியின் நிகழ்வுகளை, பள்ளி நிகழ்வுகளை, அப்பாவின் அடுத்த சில வாரப் பயணங்கள் பற்றி எல்லாம் பேசுவோம். மெல்ல அது வேறு ஒரு உருவம் கொண்டது. குடும்ப அசம்ப்ளி (குடும்ப சபை என நாம் சொல்வோம்).

குடும்ப சபையில் என்னென்ன செய்யலாம்?

மாதம் ஒரு ஞாயிறு இதனை கூட்டலாம். அவசியம் எல்லோரும் ஒன்றாக அமர வேண்டும். அந்த ஒரு மாதத்தின் செலவுகளை யார் செலவு செய்கின்றார்களோ அவர்கள் ஒப்படைக்க வேண்டும். இது பட்ஜெட் பற்றிய புரிதலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். குட்டிக் குழந்தைகளுக்கு இது புரியாமல் போகலாம். ஐந்து அல்லது ஆறு வயதினருக்கு மேல் மெல்ல புரியும். இந்த தொடர் பயிற்சி குழந்தைகளுக்கு வீட்டின் பொருளாதார சூழலை நன்கு உணர்த்தும். எது அவசியம், எது அத்தியாவசியம் என்பதனை புரிந்துகொள்ள உதவும்.

அதே போல அடுத்த மாதத்திற்கான பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய வேண்டும். ஏதேனும் புதிய பொருள் / செலவு எனில் முன்னரே தெரிவிக்க வேண்டும். இது குழந்தைகளிட்த்தே நல்ல திட்டமிடும் திறனினை உருவாக்கும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கு சில இலக்குகள் இருக்கும். அது எங்குமே எழுதப்படாமல் வெறும் பேச்சிலேயே இருக்கும். அவை அனைத்தையும் பட்டியலிட வேண்டும். அவை சின்ன பொருளில் ஆரம்பித்து வீடு வரை கூட செல்லலாம். வாகனம், குழந்தைகளுக்கு சைக்கிள், டிவி, பள்ளி கட்டணம் இப்படி அனைத்தும்.

அதே போல மிக முக்கியமாக எல்லோருடைய ஆரோக்யம் பற்றிய உரையாடலும் அவசியம். வீட்டில் பெரியவர்களுக்கு இருக்கும் உடல் சிக்கல், நோய், மருந்து , அளவுகள் இவை அனைத்தும் எல்லோருக்கும் தெரியவேண்டும். நாம் நினைக்கும் எல்லா புதிய விஷயங்களையும் இந்த சபையின் மூலம் முயற்சி செய்யலாம்.

ஒரு மாதத்தில் வாசித்த புத்தகங்கள், படிக்க விரும்பிய புத்தகங்கள், பார்த்த புதிய படம் மீதான விமர்சனம், சுவாரஸ்யமான சம்பவங்கள், படிப்பினைகள், இவை எல்லாவற்றையும் பேசலாம்.

இந்த குடும்ப சபைகள் நமக்கு (பெற்றோர்களுக்கு) நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுக்கும். ஜனநாயகத்தன்மையை குடும்பத்தில் பரவச் செய்யும். குழந்தைகளின் ஆளுமைத்திறனை வெகுவாக வளரச்செய்யும். வீட்டின் சூழலை இலகுவாக்கும் மேலும் அபாரமான நெருக்கத்தினையும் ஏற்படுத்தும். யார் எங்கே தடம்புரண்டாலும் மீண்டுவிடலாம், தன் குடும்பம் இருக்கின்றது என்ற பலத்தினை ஒவ்வொருவருக்கும் கொடுக்கும்.

இந்த வீடடங்கு காலத்தில் கிட்டத்தட்ட தினமும் குடும்ப சபையினை கூட்டலாம். ஒரு மாதிரி பிக் பாஸ் வீட்டிற்கும் அடைபட்டு இருப்பதைப்போல ஒரு விளையாட்டாக விளையாடலாம்.

தினமும் என்ன சமையல் என பட்டியலிடலாம். என்னென்ன காய்கறிகள், மளிகைப்பொருட்கள் இருக்கின்றன என்பதனை ஸ்டாக் எடுத்து பட்டியலிடலாம். அடுத்த முறை யார் வெளியே செல்வது எதெல்லாம் அவசியமாக வாங்க வேண்டும் என்று குழந்தைகளை குறித்துவைக்கச் சொல்லலாம்.

தினமும் வேலைகளை யார் யார் என்ன செய்வது என்று பேசி முடிவெடுக்கலாம். சில சமயம் விளையாட்டு போல சீட்டு குலுக்கியும் செய்யலாம். அது வீட்டின் சூழலை கொஞ்சம் இலகுவாக்கும்.

விமர்சனங்களுக்கும் குடும்ப சபைகள் பழகும். விமர்சனம் என்றாலே எதிர்மறையான விஷயம் இல்லை என்பதனை குழந்தைகள் புரிந்துகொள்வார்கள். உதாரணத்திற்கு ஒரு குழந்தை நீண்ட நேரம் தொலைக்காட்சியில் மூழ்கி இருப்பதை சுட்டிக்காட்டுவதால் அது எதிர்மறை அல்ல, வேறு எங்கு நேரத்தை பயனுள்ளதாக செலவழிக்கலாம் அல்லது சும்மா இருந்தால் இன்னும் நல்லது என்பதனைக் சபையில் தெரிவிக்கலாம்.

குழந்தைகளும் பெற்றோர் மீது விமர்சனம் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும். ஒரு வகையில் ஜனநாயக நாட்டின் பிரஜைகளை உருவாக்கும் முயற்சி இவை அனைத்தும்.

திட்டவட்டமான சட்டதிட்டங்களில் இன்றி ஒரு மகிழ்வான போக்கில் இதனை நடைமுறைப்படுத்தினால் பல விஷயங்களை பிற்காலத்தில் அறுவடை செய்யலாம்.

- விழியன்

(சிறார்களுக்கான எழுத்தாளர்)

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x