Published : 22 Apr 2020 05:17 PM
Last Updated : 22 Apr 2020 05:17 PM

திருட்டு மீனுக்கு டேஸ்ட் அதிகம்: வாளையாறு மீன்களை வளைக்கும் மக்கள்; சுவாரஸ்யப் பின்னணி

தமிழக பகுதியில் வாளையாறு அணையில் மீன்பிடிக்கும் ஒருவர்.

‘திருட்டு மீனுக்கு சுவை அதிகம். அதிலும் கரோனா காலத்தில் இப்படிப் பிடிக்கும் கெண்டை மீன் ருசியோ ருசி!’ என சிலாகிக்கும் இடமாக கேரள எல்லையில் உள்ள வாளையாறு அணை மாறியிருக்கிறது.

கோவை - கொச்சின் சாலையில் தமிழக - கேரள எல்லையின் முக்கியக் கேந்திரமாக விளங்குவது வாளையாறு. இங்குள்ள வாளையாறு அணை இப்பகுதியில் மிகவும் பிரசித்தம். இந்த அணை கேரளப் பகுதியில் இருந்தாலும், அதன் நீர்த்தேக்கம் முழுக்க தமிழகப் பகுதிகளில்தான் பெருமளவு நீண்டு கிடக்கிறது. இங்கே மீன் பிடிக்கும் உரிமையை கேரள அரசின் மீன்வளத்துறை, அங்குள்ள குத்தகைதாரர்களுக்கு விட்டுள்ளது.

இதனால் அணையில் இதர ஆட்கள் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகப் பகுதிகளான மதுக்கரை தொடங்கி, நவக்கரை, மாவூத்தம்பதி, புதுப்பதி, சின்னாம்பதி மக்கள் கரோனா ஊரடங்கு சமயத்தில் கால நேரம் இல்லாமல் கூடிவிடுகிறார்கள். மீன்களைப் பிடிப்பதற்காக ஆளாளுக்கு அணை நீரில் வலை விரித்தும் விடுகிறார்கள்.

பெரிய மீன் கிடைக்காவிட்டாலும் சிறு மீன்கள் இவர்களுக்குக் கிடைத்து விடுகிறது. அவற்றை யாராவது விலைக்கு கேட்டால் நூறு ரூபாய்க்கு குத்துமதிப்பாக அள்ளிக் கொடுக்கிறார்கள். இந்த மீன்களை வாங்குவதற்கென்றே ஒரு கூட்டம் காத்துக் கிடக்கிறது.

இதுகுறித்து மீன்பிடிகாரர் ஒருவரிடம் பேசிய போது, ‘‘மழைக் காலங்களில் இங்கிருந்து இன்னும் 3- 4 கிலோ மீட்டருக்கு அணையில் தண்ணி தேங்கி நிற்கும். அந்தக் கரையிலதான் எங்க வீடு. வீட்டு வாசல்லயே தண்ணி நிற்கும். வலையே வீச வேண்டியதில்லை. காலடியிலயே மீன்கள் வந்து துள்ளும். அதுக்காகவே வலையைத் தயாரிச்சு வச்சு மீன் பிடிக்க ஆரம்பிச்சோம். இப்படி கோடையில தண்ணி வத்திக் கிடக்கும்போது எங்களுக்கு மீன் பிடிக்கிற வழக்கமில்லை. மீறிப் பிடிச்சா, இது தமிழகப் பகுதியே ஆனாலும் அங்குள்ளவங்க புகார் செஞ்சா இங்கே வந்து பிடிச்சுக்குவாங்க.

இப்ப வேற வழியில்லை. கரோனா, கரோனான்னு ஊரெல்லாம் பூட்டி வச்சுட்டாங்க. எங்கேயும் போறதுக்கும் வழியில்லை. பிழைப்புக்கும் வகையில்லை. வீட்ல வலை கிடக்குது. நாங்களும் சும்மாதானே இருக்கோம். பொழுது போகாம வலைய விரிக்கிறோம். பெரும்பாலும் ஜிலேபி கெண்டைகள்தான் கிடைக்குது. பெரிய மீனுக எல்லாம் ஆழத்துக்குப் போயிருச்சு. அப்படியே அந்த பெரிய மீனு கிடைச்சு புடிச்சா நம்மளை கேரளாக்காரங்க உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க. அதனால பார்த்துப் பார்த்து பயந்து பயந்து இந்த மீனையும் பிடிக்கிறோம். திருட்டு மாங்காய், திருட்டுக் கொய்யா மாதிரி இந்த திருட்டு மீனுக்கும் டேஸ்ட் அதிகம். வாங்கிட்டுப் போய் சமைச்சுத் தின்னு பாருங்க தெரியும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x