

’இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டால், ‘எத்தனை தடவை பார்த்திருக்கிறேன் என்று கேளுங்கள்’ என்று தமிழ் ரசிகர்கள் உற்சாகத்துடன் கேட்பார்கள். படம் பிடித்துப் போகலாம். ஆனால் படத்தில் இந்தக் காட்சி பிடிக்கலை, அந்தக் காட்சி சரியில்லை என்று சொல்ல, எல்லாப் படங்களிலும் எக்கச்சக்க காட்சிகள் உண்டு. ஆனால், ‘ஒவ்வொரு சீனும் அவ்ளோ பிரமாதமா எடுக்கப்பட்டிருக்கும்’ என்று எல்லோரும் ஒருமித்த குரலில் சொல்வார்கள். அந்தப் படம் ‘தில்லானா மோகனாம்பாள்’.
டிவியில் ஒரு படத்தைத் திரையிட்டால், ’எத்தனை தடவைதான் போடுவாங்களோ? போனமாசம்தான் போட்டாங்க. பாத்தோம். சேனலை திருப்பு சேனலை திருப்பு’ என்று மற்ற படங்களைத் திரையிட்டால் சொல்வார்கள். ஆனால் ‘தில்லானா மோகனாம்பாள்’ இவற்றுக்கெல்லாம் விதிவிலக்கு.
நேற்றைக்குப் போடும்போதும் பார்த்தார்கள். இன்றைக்குப் போட்டாலும் பார்ப்பார்கள். நாளைக்கே ஒளிபரப்பினாலும் மீண்டும் ஆர்வத்துடன் பார்ப்பார்கள். அதுதான் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் மேஜிக் திரைக்கதை.
புதிதாக ரிலீஸாகும் படங்கள் கூட அப்படியொரு தாக்கத்தை நிகழ்த்தாது. ஆனால் இந்தப் படம் நமக்குள் ஒவ்வொரு முறையும் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். இத்தனைக்கும் படம் வெளியாகி 52 வருடங்களாகின்றன. இதுவும் அளப்பரிய சாதனைதான்! அப்படியெனில், 52 வருடங்களுக்கு முன்பு, படம் ரிலீஸானபோது இன்னும் எப்படியெல்லாம் குதூகலித்திருப்பார்கள் ரசிகர்கள்.
’தில்லானா மோகனாம்பாள்’ நிகழ்த்திய சாதனையைப் போல், தமிழ் சினிமாவில் வேறு ஏதேனுமொரு படம் இதற்கு நிகராக நிகழ்த்தியிருக்குமா என்பது சந்தேகம்தான். ஒருநாவல் எப்படி சினிமாவாக மாற்றப்படவேண்டும், ஒரு சினிமா எந்தவகையிலான திரைக்கதையுடன் இருக்கவேண்டும் என்பதற்கெல்லாம் டிக்ஷனரி, என்சைக்ளோபீடியா எல்லாமே ‘தில்லானா மோகனாம்பாள்’தான்! இந்த ரசவாதத்தைச் செய்த முதல் சூத்திரதாரி... கொத்தமங்கலம் சுப்பு. கதையின் கர்த்தா இவர்.
ஆனந்த விகடனில் இவர் இந்தக் கதையை தொடராக எழுதியபோதே, வாசகர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டு உட்கார்ந்துகொண்டாள் ’மோகனாம்பாள்’. கதை சொல்வதில் மன்னர் இவர். அதனால்தான் இவர் எழுதிய ‘சந்திரலேகா’ கூட இன்றைக்கும் பிரம்மாண்டத்தால் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
நடனமே உயிரென வாழ்ந்து வரும் நாயகி. நாகஸ்வரமே மூச்சென வாழ்ந்து வரும் நாயகன். இருவருக்கும் காதலுக்குள் நடக்கிற மோதலும், மோதலுக்குள்ளேயே வளர்கிற காதலும், இறுதியில் இருவரும் ஒன்றுசேருவதும்தான் கதை. இதை ஒரு தொடர்கதையாக எழுதவும் அந்தத் தொடரை, சினிமாவாக மாற்றுவதும் லேசுப்பட்ட விஷயமல்ல.
’’பந்தநல்லூர் ஜெயலட்சுமி. மயிலாடுதுறை அருகில் உள்ளது இந்த ஊர். நாட்டியக்கலைஞர் இவர். இவரைக் கொண்டுதான் மோகனாம்பாள் கேரக்டரை உருவாக்கினாராம் கொத்தமங்கலம் சுப்பு. நாதஸ்வரக் கலைஞர் சிக்கல் சண்முகசுந்தரத்தின் பாடி லாங்வேஜெல்லாம் திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் பிள்ளையை வைத்து உருவாக்கப்பட்டதாம். ஆனாலும் மோகனாம்பாளையும் சிக்கல் சண்முகசுந்தரத்தையும் எங்கோ வாழ்ந்த ஜீவன்களாகத்தான் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்!
அவர்களை மட்டுமா? வைத்தியையும் ஜில்ஜில் ரமாமணியையும் சிங்கபுரம் மைனரையும் மதன்பூர் மகாராஜாவையும் கூட ரசிகர்கள் மறக்கவில்லை. மறக்கவும் முடியாது. கொத்தமங்கலம் சுப்பு ஒரு ஜாம்பவான். ஏ.பி.நாகராஜன் மற்றொரு ஜாம்பவான். அவரின் கதாபாத்திரங்களுக்கும் கதைக்கும் இவர் மெருகூட்டினார். சிவாஜியும் பத்மினியும் நாகேஷும் மனோரமாவும் உயிரூட்டினார்கள்!
அதனால்தான், சிக்கல் சண்முகசுந்தரம், மோகனாம்பாள், அவரின் அம்மா வடிவு, வைத்தி, ஜில்ஜில் ரமாமணி எல்லோரும் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், நம் மனங்களில்!
இன்னொரு முறை எடுக்கவே எடுக்கமுடியாத படங்களில் மிக மிக முக்கியமான, முதன்மையான படம்... ‘தில்லானா மோகனாம்பாள்’. அதனால்தான் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் தமிழ் மக்கள்!