Last Updated : 21 Apr, 2020 04:17 PM

 

Published : 21 Apr 2020 04:17 PM
Last Updated : 21 Apr 2020 04:17 PM

எம்ஜிஆரின் முழு லவ் சப்ஜெக்ட்... ’அன்பே வா!’ ;   மனதை அள்ளும் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’

இப்படியொரு துள்ளத்துடிக்கிற காதல் கதை என்பது, தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. எம்.ஜி.ஆருக்குப் புதிது. எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்குப் புதிது. எம்.ஜி.ஆர் எனும் வசூல் சக்கரவர்த்தியாகக் கொண்டிருந்த தமிழ் சினிமா உலகுக்குப் புதிது.

சினிமா உலகில், எம்.ஜி.ஆர். ஃபார்முலாவை நம்பி, இன்றைக்கும் கதை பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அந்த விகிதங்களைக் காக்டெயிலாக்கி, எம்ஜிஆராகிவிட எத்தனையோபேர் ஆசைப்பட்டிருக்கிறார்கள். அவ்வளவு ஏன்... எம்.ஜி.ஆரே கூட, தன்னுடைய ஃபார்முலாவில் இருந்து எள்முனையளவு கூட விலகி வந்ததே இல்லை. அதை நம்பி அவர் இருந்தார். அவரை நம்பி, தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் இருந்தார்கள்.

ஆனால் அவரை முழுமாதிரியாகவும் முன்மாதிரியாகவும் வேறுமாதிரிக் காட்டியெடுக்கிற துணிச்சல், ஏவிஎம்முக்கு மட்டுமே இருந்தது. திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர்களை வைத்துப் படமெடுத்த பிரமாண்ட நிறுவனம் ஏவிஎம். இந்த நிறுவனத்தில் நடித்தாலே, அவர்கள் கொடி உயர ஆரம்பித்துவிடும். சிவாஜியை வைத்தும் ஜெமினியை வைத்தும் ஜெய்சங்கரை வைத்தும் எஸ்.எஸ்.ஆரை வைத்தும் ரவிச்சந்திரனை வைத்தும் என படங்கள் எடுத்த ஏவிஎம்... முதன்முறையாக எம்ஜிஆரைக் கொண்டு எடுத்த படம்தான் அன்பே வா.

ஆமாம்... புகழ்பெற்ற ஏவிஎம் நிறுவனத்தில் எம்ஜிஆர் நடித்த முதல்படம் அன்பே வா. ஒரே படமும் இதுதான். 1966ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தைத்திருநாளில், பொங்கல் நன்னாளில் ரிலீசாகி, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் இது.

ஈஸ்ட்மென் கலர். சிம்லா லொகேஷன். அபிநய சரஸ்வதி சரோஜாதேவி. நாகேஷ், மனோரமா, டி.ஆர்.ராமச்சந்திரன், அசோகன் என்று அருமை அருமையான நடிகர்கள். பழைய டிரெண்டில் இருந்து சற்றே விலகி, புதுமையான இசைச்சேர்க்கையில் ஜாலம் காட்டினார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

வெளிப்புறப் படப்பிடிப்பு. அதுவும் சிம்லாவில் இந்த அளவுக்கு எவரும் படமாக்காத நிலை. கண்ணுக்கு குளுமையான காட்சிகள். கதையை விட்டு மீறாத காட்சிகள் என ஓர் படத்துக்கு என்ன நியாயம் சேர்க்கமுடியுமோ அவை அனைத்தையும் சேர்த்துக்கொண்டு, வித்தை காட்டியிருப்பார் இயக்குநர் ஏ.சி.திருலோகச்சந்தர். ஏவிஎம்மின் அந்தக்கால எஸ்.பி.முத்துராமன். அதாவது ஏவிஎம்மின் செல்லப்பிள்ளை.

ஜே.பி. எனும் மிகப்பெரிய தொழிலதிபர். செல்வச் சீமான். உழைத்துக்கொண்டே இருக்கும் அவரின் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு தேவையாக இருக்க, எவரிடமும் சொல்லாமல், சிம்லாவில் தன் பங்களாவுக்கு ஓய்வெடுக்க வருகிறார். அங்கே வேலைக்காரராக இருக்கும் நாகேஷ், எம்ஜிஆரை அதுவரை பார்த்ததே இல்லை. ‘இங்கெல்லாம் தங்கணும்னா கூட காசாகும். வாடகை அதிகமாகும்’ என்று சொல்ல, கடும் கோபமாகும் எம்ஜிஆர், அடக்கிக் கொண்டு, பணத்தைக் கொடுத்து, அங்கே தன் பங்களாவிலேயே வாடகைக்கு இருக்கிறார். அங்கே சரோஜாதேவியின் குடும்பமும் வாடகைக்கு வர... அங்கிருந்து தொடங்குகிறது கதையும், மோதலும், காதலும்!

எம்ஜிஆர் படத்தில் ஏழெட்டு வில்லனெல்லாம் இருப்பார்கள். இங்கே ஈகோதான் வில்லன். ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்வதுதான் வில்லத்தனம். அவரை இவரும் இவரை அவரும் என காதலித்தாலும் சொல்லாமல் சொல்லாமல் விழுங்கி, முட்டிக்கொள்கிற, மோதிக்கொள்கிற குணம்தான் வில்லன். அதை ரசிக்க ரசிக்க எடுத்திருப்பதுதான் திரைக்கதையின் விளையாட்டு.

ஒவ்வொரு நடிகருக்கும் பாடி லாங்வேஜ் என்று உண்டு. நமக்கே கூட இருக்கிறது. அதுவரை எம்ஜிஆருக்கென இருந்துவந்த பாடிலாங்வேஜ்களையெல்லாம் பயன்படுத்தாமல், புதுமாதிரியான உடல் பாஷையை செய்ததில்தான், அன்பே வா படம் எம்ஜிஆர் படங்களில் மறக்க முடியாத படமாக, தனித்துவமான படமாக இன்றைக்கும் இருக்கிறது.

’புதிய வானம் புதிய பூமி’ என்கிற பாடல், இப்போது கேட்டாலும் அந்த கருப்புசிகப்பு கோடு போட்ட கோட்டும், சூட்கேஸூம் தொப்பியும் நினைவுக்கு வந்துவிடும். தவிர படம் முழுக்கவே அவரின் காஸ்ட்யூம்கள், தனியே நம்மை ஈர்த்து நம்முடன் பேசிக்கொண்டிருக்கும். அழகன் எம்ஜிஆர், அன்பே வா.. வில் இன்னும் அழகனாகியிருப்பார். சரோஜாதேவியும்தான். ‘லவ் பேர்ட்ஸ் லவ்பேர்ட்ஸ்’ பாடலும் அதற்கு சரோஜாதேவியின் அபிநயங்களும் பின்னே இருந்துகொண்டு எம்ஜிஆரின் சேஷ்டைகளும் எப்போதும் ரசிக்கலாம்; ருசிக்கலாம்; கொறிக்கலாம்.

எம்ஜிஆரும் சரோஜாதேவியும் இருந்தாலும் படத்தை தடதடவென நகர்த்திக்கொண்டு போவது நாகேஷூம் மனோரமாவும்தான். அதிலும் நாகேஷ் காமெடி, தனி ரகம். அவரின் டாப்டென் காமெடிகளில் அன்பே வாவும் ஒன்று.

’குடியிருந்தகோயில்’ படத்தில் ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு...’ பாட்டுக்கு ஆடவே முடியாது என்று எம்ஜிஆர் சொன்னதாகச் சொல்லுவார்கள். ‘அதுவும் எல்.விஜயலட்சுமி பிரமாதமான டான்ஸர். அவங்க கூட நான் ஆடினா நல்லாவே இருக்காது’ என்று மறுத்துவிட்டாராம். ‘முடியும், பண்ணுங்க. சின்னச் சின்ன ஸ்டெப்ஸ்தான். பாத்துக்கலாம்’ என்று இயக்குநர் கே.சங்கர் சொல்லி, நடிக்க வைத்ததாகச் சொல்லுவார்கள். அவரும் அந்தப் பாட்டுக்கு மெர்சல் பண்ணியிருப்பார். ‘ஏய் நாடோடி... போகவேண்டும் ஓடோடி...’ என்ற பாடல் தொடங்கி முடியும்வரைக்கும், எம்ஜிஆருக்கு, எம்ஜிஆரின் ஆட்டத்துக்கு கைத்தட்டலும் விசிலும் கிடைத்துக்கொண்டே இருந்தது. பின்னிப் பெடலெடுத்திருப்பார் எம்ஜிஆர்.

மொத்தப் பாடல்களும் வாலி எழுதியிருந்தார். ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’, உள்ளம் என்றொரு கோயிலிலே...’ என்று ஒவ்வொன்றும் ரகம் பிரித்து அசத்தலாகத் தந்திருப்பார். முக்கியமாக... ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாட்டுதான். எம்ஜிஆர், சரோஜாதேவி, அவர்களின் காஸ்ட்யூம், அந்த சாரட் வண்டி, முக்கியமாய் அந்தக் குதிரை என எல்லாமே அழகு. பேரழகு.

ஏவிஎம் படம் என்றாலே அசோகன் இருப்பார். அதைவிட நிச்சயமாகச் சொல்லவேண்டியது... அசத்தலாகக் காத்திருக்கும் அவருக்கே அவருக்கான கேரக்டர். இதிலும் அப்படித்தான். சேகர் என்றொரு கேரக்டரில் இதிலும் ரொம்ப டீசண்டாக, யதார்த்தமாக நடித்திருப்பார். ஒருகட்டத்தில், உறவுக்கார சரோஜாதேவியின் காதலையும் நண்பர் எம்ஜிஆரின் காதலையும் அறிந்து புரிந்து உணர்ந்து, விட்டுக்கொடுக்கும் இடம் அற்புதமான காட்சி. படத்தில் இயல்பாய் வந்து போகும் ஒரு சண்டைக்காட்சியும் உண்டு. டி.ஆர்.ராமச்சந்திரனும் டி.பி. முத்துலட்சுமியும் தன் டிரேட் மார்க் நடிப்பால் அசத்தியிருப்பார்கள்.

‘பணத்துக்காகத்தான் காதலா, சாதாரண ஆள் என்றால் காதல் இல்லையா என்பது போன்ற சின்னச்சின்ன சந்தேகங்களும் அதனால் ஏற்படும் சண்டைகளும் படத்துக்கு இன்னும் இன்னும் சுவாரஸ்யம் சேர்க்கின்றன. எதிர்பார்ப்பு ஏற்படுத்துகின்றன.

எம்எஸ்வியின் அற்புதமான இசை, ஆரூர்தாஸின் பளிச் பொளேர் ஜிலீர் வசனங்கள், பி.என்.சுந்தரம் மற்றும் மாருதிராவின் அட்டகாசமான ஒளிப்பதிவு, எம்ஜிஆர், சரோஜாதேவியின் காம்பினேஷன் நடிப்பு, நாகேஷ் சரவெடி காமெடி என்பவற்றால்... அந்த சிம்லாவே இன்னும் ஜில்லாகிப் போனது.

அன்பே வா... மறக்கவே முடியாத எம்ஜிஆர் படம். எம்ஜிஆரின் மறக்கவே முடியாத காதல் படம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x