

மதுரை பொறியாளர் ஒருவர் சிரே (C-ray) கதிர்வீச்சை கொண்டு ‘இசட்பாக்ஸ்’ இ-சானிடைசர் கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.
முகக்கவசம், கையுறைகளில் உள்ள கிருமிகளை அழித்து மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தவும், ரூபாய் நோட்டுகள், பைக் சாவி மற்றும் மளிகைப்பொருட்கள் வழியாக ‘கரோனா’ வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் மதுரை பொறியாளர் ஒருவர் சிரே (C-ray) கதிர்வீச்சை கொண்டு ‘இசட்பாக்ஸ்’ இ-சானிடைசர் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
மதுரை அய்யர் பங்களாவை சேர்ந்தவர் பொறியாளர் ஆர்.சுந்தரேஸ்வரன்(36). இவர் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிகிறார். படிக்கிற காலத்திலே சிறுசிறு கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளார்.
தற்போது ‘கரோனா’ ஊரடங்கால் மக்கள் வீட்டிற்குள் முடங்கிப்போய் உள்ளனர். அவர்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மட்டுமே வீடுகளை விட்டு வெளியே செல்கின்றனர். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வரும்போது எந்த ஒரு பொருள் வழியாகவும் ‘கரோனா’ வைரஸ் வர வாய்ப்புள்ளது. அதனால், மக்கள் அச்சத்துடனே வாழுகின்றனர்.
அந்த அச்சத்தைப்போக்கி ஒரு முறை பயன்படுத்திய பொருட்களை அதில் உள்ள கிருமிகளை நீக்க மீண்டும் பயன்படுத்துவதற்காக பொறியாளர் ஆர்.சுந்தரேஸ்வரன் சி-ரே (C-ray) கதிர்வீச்சை கொண்டு ‘இசட் பாக்ஸ்’ என்ற இ- சானிடைசர் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இவரது இந்த ‘இசட் பாக்ஸ்’ எலக்ட்ரானிக் இ-சானிடைசர் பெட்டிக்குள் அன்றாடம் பயன்படுத்தும் எந்த ஒரு பொருளையும் போட்டால் 20 நிமிடங்களில் அதில் ‘கரோனா’ வைரஸ் உள்ளிட்ட எந்த கிருமிகளையும் அழித்துவிடும்.
அதனால், அச்சமில்லாமலும், ‘கரோனா’ தொற்று இல்லாமலும் இருக்கலாம் என்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருட்கள், பால், காய்கறி வாங்குவதற்கு மக்கள் வெளியே செல்கிறார்கள். அப்போது கடைகளில் சில்லறை பணம், காசு கொடுப்பார்கள். ஏடிஎம்-களில் பணம் எடுக்கிறோம்.
பலரின் கைப்பட்ட அந்தப் பணத்தை, சில்லறைக் காசுகளை நாம் வீடடிற்குள் எடுத்து வருகிறோம். அந்த ரூபாய் நோட்டில், சில்லறை காசுகளில் கூட வைரஸ் இருக்க வாய்ப்புள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை என்னுடைய ‘இசட் பாக்ஸ்’ எலக்ட்ரானிக் இ- சானிடைசர் பெட்டிக்குள் வைத்தால் அதில் உள்ள கிருமிகளை 20 நிமிடங்களில் அதில் உள்ள சிரே கதிர்வீச்சு அழித்துவிடும்.
அதுபோல், சாப்பாடு பார்சல், பைக், கார் சாவிகளையும், அன்றாடம் பயன்படுத்தும் முககவசங்களையும், கையுறைகளை இந்த பாக்ஸ்சில் போட்டால் அதில் ஓட்டியிருக்கும் கிருமிகள் அழிந்துவிடும்.
தற்போது முகக் கவசங்களுக்காகவும், கையுறை வாங்குவதற்காகவும் மக்கள் இந்த பொருளாதார நெருக்கடியிலும் அதிகம் செலவு செய்கின்றனர். வைரஸ் தொற்று அபாயத்தால் அவற்றை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த முடியவில்லை. புதிதாக வாங்க வேண்டிய உள்ளது.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த முககவசங்களையும், கையுறைகளையும் இந்த பாக்ஸ்சில் போட்டால் மறுசுழற்சி செய்து பல முறை பயன்படுத்தலாம். தென்கொரியா,ஐரோப்பா நாடுகளில் தற்போது இதே போன்ற எலக்ட்ரானிக்ஸ் சானிடைசர் கருவிகள் மக்கள் அதிகளவு பயன்படுத்துகின்றனர்.
அந்த நாடுகளில் இந்த கருவிகள் வணிக ரீதியாக விற்பனைக்கும் வந்துள்ளது. இந்தியாவில் நான் கண்டுபிடித்த இந்த எலக்ட்ரனிக் இ- சானிடைசர் புதுசு. இந்த பாக்ஸில் பயன்படுத்தும் சிரே (C-ray)கதிர் சூரிய ஒளியில் 0.001 சதவீதம் உள்ளது. ஆனால், நான் ஒரு எலக்ட்ரிக்கல் சர்கியூட்டை வைத்து, ‘இசட் பாக்ஸ்’ கருவிக்குள் இந்த சிரே (C-ray) கதிர் உருவாக்குகிறேன்.
‘கரோனா’ வைரஸ் மட்டுமில்லாது நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள பல்வேறு நுண்ணுயிர்களை நான் கண்டுபிடித்த இந்த எலக்ட்ரானிக் இ- சானிடைசர் அழிக்கும். என்னுடைய இந்த மாதிரியை எங்கள் ஆய்வகத்தில் பரிசோதனை முறையில் பயன்படுத்த பலமுறை நிரூபித்துள்ளோம். இதை உருவாக்க ரூ.5 ஆயிரம் எனக்கு செலவாகியுள்ளது.
இதற்கான உதிரிபாங்கள் நமது நாட்டிலே எளிதாக கிடைக்கின்றன.
‘கரோனா’ தொற்றைத் தடுக்க தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் உதவி செய்தால் என சேவை அடிப்படையில் பொதுமக்களுக்கு இந்த ‘இசட் பாக்ஸ்’ கருவியை உருவாக்கி கொடுக்க ஆர்வமாக உள்ளேன். கடைசி வரை எல்லா கிருமிகளை கொல்லக்கூடிய பாக்ஸ் என்பதால் இந்த கருவிக்கு ‘இசட்’ பாக்ஸ் என பெயர் வைத்துள்ளோம்," என்றார்.