Published : 21 Apr 2020 10:33 am

Updated : 21 Apr 2020 10:36 am

 

Published : 21 Apr 2020 10:33 AM
Last Updated : 21 Apr 2020 10:36 AM

குழந்தைமையை நெருங்குவோம்: 6- மென் தருணங்கள் மலரச் செய்வோம்

kuzhanthaimayai-nerunguvom-6

வேகமான தினசரி வாழ்க்கையில் இந்த மென் தருணங்களை நாம் தவற விட நிறைய வாய்ப்புகள் உள்ளன. கொஞ்சம் இதனைப் பற்றிய விழிப்பு அவசியம். இந்த சுவையை சுவைத்துவிட்டால் குழந்தைகளே மீண்டும் மீண்டும் அங்கே அழைத்துச் செல்வார்கள்.

சில சமயம் எதையும் சிந்திக்காமல் இருக்கும்போதோ அவை அற்புத தருணங்களாக மாறிவிடும். நம்மில் பெரும்பாலோனோர் நீண்ட சிறப்பான இலக்குகளை வைத்திருப்போம். அதனை நோக்கி வீறுநடை போடுவோம். ஆனால், போகும் வழியெங்கும் அந்த பயணத்தை ரசித்திடாமல் வெறும் இலக்கினை மட்டுமே கண்கள் செல்வதால் ஒருவித விரைப்புத்தன்மையுடனே பயணிக்கின்றோம். போகும் வழியெங்கும் ஏராளமான மென்மையான தருணங்கள் நிரம்பியுள்ளன. மிக முக்கியமாக குழந்தை வளர்ப்பில்.

ஒரு மாலை வேளை. தினமும் மகனும், மகளும் மொட்டை மாடிக்குச் சென்று ஓடிப்பழகுகின்றார்கள். தெருவில் சைக்கிள் ஓட்ட பழக முடியாது என்பதால் மகன் சைக்கிள் ஓட்ட பயில்கின்றான். அலுவலக வேலைகளை ஓரமாக வைத்துவிட்டு விடாப்பிடியாக மாடிக்கு அழைத்துச்செல்கின்றான்.

அன்றைய அதிகாலையில் தான் (4.30 – 5.00 மணி வாக்கில்) நானும் அவனும் வானத்தில் நிலாவும் மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பதை பார்க்கின்றோம். அவனுக்கு அதில் அத்தனை மகிழ்ச்சி. “அப்பா, அந்த ஸ்டார்ஸ் மினுக் மினுக்ன்னு மின்னவே இல்லப்பா” என்கின்றான். பின்னர் அவனுக்கு கோள்கள் மின்னாது அவை எங்கிருந்து ஒளி பெருகின்றன என விளக்கினேன். கற்றல் மிகவும் மகிழ்வான தருணத்தில் உள்ளே ஆழமாக இறங்கும். அக்கா கொஞ்சம் தாமதமாக எழுந்து வந்ததும் “நாங்க வானத்தில ஸ்டிரெயிட்டா பார்த்தோமே பவ் சிக் பவ்” என்று வெறுப்பேற்றினான். என்னை ஏன் எழுப்பவில்லை என்று அக்காளும் அழுதாள்.

மாலை மாடிக்கு சென்றதும் “இப்ப இன்னும் கொஞ்ச நேரத்தில பாருங்க அப்படியே ப்ளட் (flood) மாதிரி பறவைங்க வரும்” என்றனர் இருவரும். காலையில் இரை தேடி கிழக்கில் இருந்து மேற்கிற்கும் மாலையில் தங்கள் வீடுகளுக்கு மேற்கு நோக்கியும் வரும் என்றனர். “அது காலை ஒரு மாதிரி வெச்சிக்கும்பா” என்று கூறினார்கள். குட்டி கூட்டம் ஆங்கில வி வடிவத்தில் வந்தபோது சுட்டிக்காடினார்கள். பின்னர் வீட்டினைச் சுற்றி எத்தனைப்பேர் பட்டம் விடுகின்றனர் என்று எண்ணினார்கள். சின்ன வயதில் பட்டம் விட்டதினை நினைவு கூர்ந்தார்கள். பட்டம் எப்படி செய்யவேண்டும் என்று பேசிக்கொண்டோம். அவரவர் சின்ன வயது (அப்பா, அம்மா, தாத்தா பாட்டி) பட்டம் விட்ட நினைவுகளை பகிர்ந்தோம்.

விசில் அடிக்கத்தெரியுமா என்று ஒரு விசில் அடித்துக்காட்டினேன். பின்னர் மூவருக்கும் விசில் அடிப்பது எப்படி என்று விளக்கினேன். முதலில் வாயினைக் குவித்து காற்றைவிடச் சொன்னேன். பின்னர் எப்படி நாவினை மடித்து விரல்களை அழுத்தி சத்தம் எழுப்பவேண்டும் என விளக்கினேன். ஒரு கால்மணி நேரம் பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றன. பின்னர் ஒரு வாயில் இருந்து விசில் போன்ற ஒரு சத்தம் எழுந்தது. அவ்வளவு மகிழ்ச்சி பொங்கியது. ஹே ஹே ஹே. ஆமாம் புதிகாக கற்றுக்கொண்டால் இவ்வளவு மகிழ்ச்சி நிச்சயம் நிரம்பும்.

மெல்ல இருட்ட ஆரம்பிக்கவும் பாய் போட்டு அமர்ந்து வானை நோட்டமிட ஆரம்பித்தோம். வியாழனை (வீனஸ்) கண்டுபிடித்தோம். ஓரியன் மற்றும் க்ரேட் பியர் ஆகிய இரண்டு கான்ஸ்டலேஷன்கள் எங்கே வரும் என்று தேடினோம்.

கரும் நீலத்தில் இருந்து கருப்புக்கு மாறிய வானத்தில் ஒரு நொடிப்பொழுதில் ஏராளமான நட்சத்திரங்கள் முகம் காட்டுவது குறுகுறுவென இருந்தது. ஒவ்வொருவரும் ஒரே ஒரு நட்சத்திரம் பார்ப்பது எனவும் அங்கிருந்து அருகே தெரியும் குட்டி நட்சத்திரங்களை பார்க்கவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. நேர் கோட்டில் மூன்று மூன்றாக எங்கே இருக்கின்றது என ஆராய்ந்தோம். நிலா ஏன் இன்னும் வரல என்ற கேள்வி எழுந்தது.

வேகமான தினசரி வாழ்க்கையில் இந்த மென் தருணங்களை நாம் தவற விட நிறைய வாய்ப்புகள் உள்ளன. கொஞ்சம் இதனைப் பற்றிய விழிப்பு அவசியம். இந்த சுவையை சுவைத்துவிட்டால் குழந்தைகளே மீண்டும் மீண்டும் அங்கே அழைத்துச் செல்வார்கள்.

வெறும் அந்த நிமிடங்களை அவை லகுவாக்குவதோடு மட்டுமல்லாமல் அவை குடும்பத்திற்குள் ஒரு அபாரமான நெருக்கத்தினை அது கண்ணுக்கு தெரியாமல் பிண்ணிவிடும். அதற்காக தானே நாம் எல்லோரும் ஏங்குகின்றோம். அது கொடுக்கும் நம்பிக்கையும் உற்சாகமும் நீண்ட நெடிய ஓட்டத்திற்கும் இலக்கினை நோக்கிய பயணத்திற்கும் இன்னும் கம்பீரமாக நடைபோட உதவிடும்.

என்ன செய்யவேண்டும்? எதுவுமே செய்ய வேண்டாம். வெகு இயல்பாக அது தானாக அவை மலரும்.

-விழியன் (சிறார்களுக்கான எழுத்தாளர்)

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

குழந்தைமையை நெருங்குவோம்மென் தருணங்கள்ஊரடங்குகரோனா ஊரடங்குகரோனா வைரஸ்கொரோனா வைரஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author