Published : 20 Apr 2020 04:36 PM
Last Updated : 20 Apr 2020 04:36 PM

சமூக விலக்கல் என்பது கரோனாவுக்கு எதிராக உழைப்பவர்களை விலக்குவதா?- இந்த மனித விரோத கொடூரத்துக்கு வைப்போம் முற்றுப்புள்ளி

ஒவ்வொரு பெரிய கொள்ளைநோய், இயற்கை பேரிடர், போர் போன்ற தீமைகள் வரும்போது மனிதகுலம் தன் ஒற்றுமையின் வலுவின் மூலம் மீண்டு வந்திருப்பதுதான் வரலாறு நமக்கு கற்பிக்கும் மிகப்பெரிய பாடமாகும்.

கரோனா நோய் நாம் சாதாரணமாக நினைப்பது போன்றதல்ல, அது நம்முடனேயே இருக்கப்போகும் ஒன்று. மருந்து கண்டுபிடித்தாலும் வாக்சைன் கண்டுபிடித்தாலும் கரோனா என்பது ஒரு புதிய எதார்த்தம், ஒரு புதிய இயல்புநிலையாக மாறிவிடும் என்றுதான் நிபுணர்கள் கருதுகின்றனர், இதோடு நிற்கப்போவதில்லை இன்னும் கூட சுற்றுச்சூழல் அதிர்ச்சிகள் நம் மனித குலத்துக்கு சவாலாக இருக்கும் என்றே விஞ்ஞானிகள், சமூகவியல்வாதிகள் ஆகியோர் நம்மை எச்சரிக்கின்றனர்.

மனிதன் விலங்கா? சமூக விலங்கா அல்ல சமூக மனிதனா?

கரோனாவுக்கு எதிரான போர் என்று முழங்குகிறோம் ஆனால் போருக்கு சரணடைதல், பேச்சுவார்த்தைகள் போன்ற தீர்வு உண்டு ஆனால் கரோனாவுக்கு எதிராக துப்பாக்கிகள் தோட்டாக்கள், எவுகணைகள் இல்லை, இதற்கு எதிரான போரில் இருப்பவர்கள் நம்மைப் போன்ற மனிதர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ,துப்புரவுப் பணியாளர்களே.

இதற்கு மனித குலம் முன்னெப்போதையும் விடவும் ஒருவருக்கொருவர் கரம் கோர்த்து ஒருவருக்கொருவர் உதவி புரிந்து இணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பும், தீர்வும் கூட.

மனிதன் என்பவன் சமூக விலங்கு என்றே தத்துவவாதிகள் கூறிவந்துள்ளனர், சமூக விலங்கு என்றால் சுயநலமிகள் தங்கள் மதம், சாதி, வர்க்கம் சார்ந்து ஒன்றிணைவது என்று வைத்துக் கொண்டால் சமூக மனிதன் என்ற நிலைக்கு உயர்த்திக் கொள்வதன் மூலம் மனித குலம் வெறுப்பின்றி வித்தியாசங்களை மறந்து நெருக்கடி காலக்கட்டங்களில் ஒருவருக்கொருவர் அரவணைப்புடன் இருப்பதுதான் லட்சியம். ஆனால் அப்படி இருக்கிறோமா என்பதுதான் இப்போதுள்ள கேள்வி.

தொடர்ந்து கரோனா பாதிப்படைந்தோருக்காக உழைக்கும் மருத்துவர்கள், மருத்துவ உதவிப்பணியாளர்கள், செவிலியர்கள், தூய்மை-துப்புரவுப் பணியாளர்களை நாடு முழுதும் மக்கள் தாக்கி வருவதும், அவர்களை அடித்து உதைத்து துன்புறுத்துவதும், கரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்கள் மட்டுமல்லாது கரோனா பாதிப்பில் சேவை செய்து கரோனாவுக்கு உயிர்த்தியாகம் செய்யும் மருத்துவர்களின் உடலைப் புதைக்கக் கூட எதிர்ப்புத் தெரிவித்து ஆம்புலன்ஸ்களை உடைத்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துது போன்ற சம்பவங்கள் மனிதத் தன்மையையும் மனிதர்கள் என்ற உன்னதப்பிறப்பையும் கேவலப்படுத்துவதாகும்.

கரோனா பாதித்தவர்களின் சடலம் கூட நம் உயிருக்கு ஆபத்து என்ற அச்சம் நமக்கு இருக்கும் போது, கரோனா பாதித்த நோயாளிகளுக்கு தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து அவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர், செவிலியர்கள் இராப்பகலாக உழைக்கின்றனர், எதார்த்தம் புரியாமல் லாக்-டவுனை முறையாக கடைபிடிக்காமல் விடுமுறையைப் போல கொண்டாடும் சிலருக்கு இது புரிய வாய்ப்பில்லை. கரோனா பாதித்தவர்களின் உடல்களே நமக்கு அச்சமூட்டுகின்றன என்றால் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், ஏழைகளுக்கு உணவளிக்கும் சமூக சேவகர்கள் இவர்களெல்லாம் அஞ்சினால் கரோனாவினால் இந்நேரம் உலகமே சுடுகாடாகத்தான் ஆகியிருக்கும்.

கரோனாவினால் பலியான சென்னை மருத்துவர் உடலுக்கு நேர்ந்த அவமானம்!

சென்னையில் பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். நேற்றிரவு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடலைப் புதைக்க அண்ணாநகர் எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் வேலங்காடு மயானத்திற்கு கொண்டு வந்தனர். அப்பகுதி அருகே உள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சிலர், மருத்துவர் உடலை இங்கே கொண்டு வரக்கூடாது, திருப்பி எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறித் தகராறில் ஈடுபட்டனர்.

உடன் வந்த பணியாளர்கள் எடுத்துச் சொல்லியும் கேட்காமல் கற்களாலும், கட்டைகளாலும் ஆம்புலன்ஸைத் தாக்கினர். இதனால் ஆம்புலன்ஸின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுநர் ஆனந்துக்கும் (30) அவருடன் வந்த மற்றொரு பணியாளர் தாமோதரனுக்கும் (28) மண்டை உடைந்தது.

ரத்தம் சொட்டச் சொட்ட அவர்களிடம் தப்பித்து பிரேதத்துடன் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்குத் திரும்பிச் சென்றனர். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் தலையிலும் தையல் போடப்பட்டு கட்டுப் போடப்பட்டது.

இருவரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பிரேதத்தை அடக்கம் செய்யக்கூடாது என்று தகராறு செய்தவர்களில் 20 ஆண்கள் 5 பெண்கள் அடங்குவர், பெண்கள் தாய்மையின் குறியீடு ஆனால் இங்கு புரிதல் இல்லாமல் வன்முறையின் குறியீடாக மாறியுள்ளது வேதனை.

பிரேதத்துடன் இருந்த 2 நபர்களுக்கும் தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வந்த காரணத்தால் இருவரும் சேர்ந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரேதத்துடன் வேளாங்காடு கல்லறையிலிருந்து மருத்துவமனைக்கு திரும்பி பாதிக்கப்பட்ட இருவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இதில் காவல்த்துறையினரும் மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரேதத்தை இரவு 01.00 மணியளவில் வேளாங்காடு கல்லறைக்கு கொண்டு வந்து அடக்கம் செய்துவிட்டு 01.40 மணியளவில் பிரேதத்தை அடக்கம் செய்து விட்டு திரும்பி சென்றார்கள்.

கரோனா நோயாளிகளுக்காக உழைத்த அந்த மருத்துவர் என்ன பாவம் செய்தார்? அவரது உடலையும் கூட வெறுக்கும் நம் மனநிலையின் தன்மை என்ன? இந்த இடத்தில் அந்த மருத்துவருக்கு மக்கள் செய்தது ஆத்ம துரோகமாகும்.

ஏற்கெனவே இன்னொரு மருத்துவருக்கு இதே சம்பவம் நடந்துள்ளது. நாடு முழுதும் மருத்துவர்கள் தாக்கப்படுவது, மருத்துவ ஊழியர்களை தாக்குவது, கரோனாவினால் உயிரிழந்தவர்களை புதைக்க தடைபோடுவது புதைக்க வருபவர்களை அடித்து உதைப்பது போன்ற சம்பவங்கள் நம் சமூகத்தில் ஏற்கெனவே இருக்கும் வெறுப்புணர்வையும் பிரிவினை மனோ நிலையையும் கரோனா காலத்தில் ஒன்று சேர்ப்பதற்குப் பதிலாக மேலும் உக்கிரமாக்கவே செய்கின்றன. இந்த மருத்துவர் சமூகத்தின் சாதாரண பின்னணியிலிருந்து வந்தவர் 1996ம் ஆண்டு சென்னைக்கு கையில் காசு இல்லாமல் வந்தவர்தான். சுயமாகச் சம்பாதித்து முன்னுக்கு வந்தவர். அனைத்து விதமான நோயாளிகளையும் அவர் அன்பாக நடத்துபவர் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். அப்படித்தான் இவரிடம் ஒரு வெளிநாட்டு கரோனா நோயாளி சிகிச்சை பெற்றார், இந்த மருத்துவருக்கு கரோனா தொற்றியது. உயிர்த்தியாகம் செய்தார். அவர் உடலைப்புதைக்கத்தான் இவ்வளவு வெறுப்புணர்வு.

டெங்கு காய்ச்சலால் மறைந்த மருத்துவர் உடலுக்கும் இதே அவமானம்

இதற்கு முன்னர் ஆந்திரா மருத்துவர் ஒருவர உடலைப் புதைப்பதற்கும் எதிர்ப்பு வலுத்தது, ஈரோட்டில் நேற்று ஈரோடு நம்பியூரிலும் மரணமடைந்த 17 வயதுச் சிறுவனின் உடலைப் புதைக்கவிடாமல் தகராறு செய்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் மரணமடைந்த சிறுமுகையைச் சேர்ந்த மருத்துவரின் உடல் அடக்கத்தையும் அப்பகுதி மக்கள் எதிர்த்துப் போராடும் நிலையைத்தான் நம் சமூகம், அரசியல், நம் பண்பாடு வளர்த்துள்ளது. இந்த மருத்துவர் பெயர் ஜெயமோகன், பழங்குடியினர் நலனுக்காகவே தனது நாட்களைக் கழித்த இளம் மருத்துவர். 2007-ப் பிளஸ் 2 தேர்வு எழுதி 1,179 மதிப்பெண்களுடன் மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றார். இதற்காக அப்போதைய முதல்வர் கருணாநிதி கையால் பாராட்டுப் பத்திரம் பெற்றவர்.

பழங்குடி கிராமத்தில் பணியாற்றத் தொடங்கினார். கடந்த 4 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தின் கோவை, நீலகிரி எல்லைகளில் உள்ள தெங்குமரஹாடா பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். போதிய மருத்துவ விழிப்புணர்வு இல்லாத பழங்குடிகளைத் தேடிச் சென்று வைத்தியம் பார்த்தவர் ஜெயமோகன்.

சில நாட்களாக உடல்நிலை சரியில்லாத நிலையிலும், தொடர்ந்து பழங்குடிகளுக்குப் பணியாற்றி வந்துள்ளார். சாதாரணக் காய்ச்சல்தானே என்று தன்னைக் கவனிக்க மறந்துவிட்டார். நிலைமை மோசமாக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கரோனா வந்திருக்குமோ என்று சோதனை செய்யப்பட்ட சூழலில், டெங்கு காய்ச்சலின் அபாயகட்டத்தில் இருந்தார் ஜெயமோகன். தொடர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் ரத்த அணுக்கள் குறைந்ததாலும் இதயச் செயலிழப்பாலும் மருத்துவர் ஜெயமோகன் உயிரிழந்தார். இவரது உடலைப் புதைக்கவும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் இந்தச் செயல்கள் மக்களின் அறியாமையை அறிவிக்கின்றன. பிரதமர் சொன்னால் கைத்தட்டுகிறோம், விளக்கு அணைக்கிறோம் விளக்கை ஏற்றுகிறோம் ஆனால் உயிர்க்காகும் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்யவே எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். ஒரு பிணத்தால் நோய் தொற்றும் என்று அஞ்சி புதைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அவ்வளவு பேர் கூடுவதால் கரோனா வைரஸ் பரவல் ஆபத்தில்லையா? வெறுப்புணர்வும், அச்சமும் நம் அறிவுக்கண்களைக் கட்டிப்போடுகின்றன.

கரோனா லாக் டவுன், ஊரடங்கு போன்ற உத்தரவுகளை மீறி தெருவில் சுற்றும் மக்கள், கரோனா சமூக விலகலில்தான் குறையும் என்ற அறிவியலையும் நம்பவில்லை, இறந்தவர்களிடமிருந்து வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பில்லை என்ற அறிவியலையும் நம்பவில்லை என்றே தெரிகிறது.

மத்திய அரசு, மாநில அரசுகள், மாநகராட்சிகள் மக்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நிச்சயம் இது போன்ற வெறுப்புணர்வு தூண்டுதலின் பேரில்தான் நடப்பதாக இருக்கும், யார் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இங்கு மட்டுமல்ல அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்பாக கரோனா பணியில் மருத்துவமனையில் ஈடுபட்டிருந்த மருத்துவர் ஒருவர் மீது கரோனா நோயாளி ஒருவர் எதையோ கொண்டு எறிய அது அவர் முகத்தைத் தாக்கியது, கடைசியில் அந்த மருத்துவரே கரோனா தொற்றுக்கு பலியானது அங்கு இந்திய-அமெரிக்க மருத்துவ சங்கத்தினரிடையேயும் அங்குள்ள இந்தியச் சமூகத்தினரிடையேயும் பெரும் வேதனையையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்கள், சமூக ஊழியர்கள் தங்கள் கதவை அடைத்து விட்டால் நாம் எங்கு செல்வது? நம்மில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் நம் குடும்பத்தினரே நம்மை அன்னியப்படுத்தி விடுவதைத்தான் பார்ப்போம், நம் மனைவி, மக்கள் அனைவரும் நம்மை ஒதுக்கும்போது நமக்காக உழைப்பது மருத்துவர்கள்தானே? அவர்களும் கதவை அடைத்து விட்டால் உலகமே இந்நேரம் சுடுகாடாகியிருக்கும்.

அப்படிப்பட்ட மருத்துவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதை இதுதானா? கனவிலும் இந்தக் கொடுமையை நாம் யாருக்கும் நினைக்கலாகாது.

நம்மால் நெருக்கடி காலங்களில் சமூக ஊழியம் செய்ய முடியாவிட்டாலும் ஊழியம் செய்பவர்களை அவமானப்படுத்துதை தவிர்க்க வேண்டும். அதுவும் ஊழியம் செய்து உயிர்த்தியாகம் செய்பவர்களுக்கு அவமானம் இழைப்பது என்பது கடவுளுக்கு இழைக்கும் துரோகமாகும்.

எந்த நெருக்கடி காலம் என்றாலும் இன்னொருவரை வெறுப்பதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளை மனம் முன் கூட்டியே தன்னிலே உருவாக்கிக் கொள்கிறது, அந்த சந்தர்ப்பம் வரும்போது அதைச் சாக்காக வைத்து வன்முறையில் ஈடுபடுகிறது. பிரச்சினை எங்கு உள்ளது? சூழ்நிலைமைகளில் அல்ல, நம் மனதில்தான் தீமை உள்ளது. தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பது நமது முதுமொழி.

நாம் நம்மை ஆத்ம பரிசோதனை செய்யும் காலம் இதுதான். நெருக்கடியிலிருந்துதான் மனித குலம் அன்பு உள்ளிட்ட உயர்ந்த லட்சியங்களை உருவாக்கிக் கொண்டுள்ளது. உயர்ந்த லட்சியங்களை வரலாறாக மாற்றுவதுதான் உண்மையான வரலாறு, போரும் வெற்றியும் மட்டுமே வரலாறல்ல. எப்போது மாறப்போகிறோம், இப்போது மாறாவிட்டால் எப்போதும் இல்லை மாற்றம்.. மாறுவோம், மாற்றுவோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x