

குழந்தைகள் பெரும்பாலும் எப்போது ஒரு விஷயத்தினை விட்டு ஓடிவிடுவார்கள் என்றால் அது அவர்களுக்கு அதீத அறிவுரை வழங்கும்போது தான். சுதந்திரம் இருக்கும் சமயமெல்லாம் அவர்கள் மிக ஆர்வமாக கற்றுக்கொள்வார்கள்.
அரிசி எந்த மரத்தில் விளைகின்றது என்று குழந்தைகள் கேட்கின்றார்கள் என்று சொன்ன காலம் எல்லாம் தற்சமயம் கிடையாது. அவர்கள் எல்லாவற்றையும் அறிந்துகொள்ள முற்படுகின்றார்கள், தீவிரமாக ஆராய்ச்சி செய்கின்றார்கள். தங்களுடைய நண்பர்களிடம் கலந்து ஆலோசிக்கின்றார்கள். நாம் வேலை வழிகாட்டுவதும் தூண்டிவிடுவதும் மட்டுமே.
இந்த வீடடடங்கு காலத்தில் என்ன செய்வது ஏது செய்வது என கேட்கும்போதெல்லாம் பசங்களை சமைக்க உதவி செய்ய வைக்கலாம். மிக முக்கியமாக உலகம் முழுக்க இருக்கும் பிரதான பிரச்சினை உணவினை வீணக்குதல் தான். சில நிறுவனங்களில் ஒவ்வொரு நாளும் மதியம் எவ்வளவு கிலோ உணவுப்பொருட்கள் வீணாக்கப்பட்டது என்று எழுதி வைப்பார்கள். அதாவது கண்ணால் ஒரு விஷயத்தினை பார்த்தால் அதன் பின்னர் அதில் இருந்து விடுபடத் தோன்றும். அடுத்த முறை வீணாக்கமாட்டோம் என்பதற்காகவே இது செய்யப்படுகின்றது.
வீட்டில் இதனை தொடங்க வேண்டும். எடை போட்டு எழுதி வைப்பதா? இல்ல ஆரம்பிக்க வேண்டிய இடம் தாங்கள் சாப்பிட்ட தட்டுகளை அவர்களே கழுவ ஆரம்பிப்பதில் தொடங்கலாம். ஏற்கெனவே பல இல்லங்களில் இந்த பழக்கம் இருக்கலாம். ஆனால் இதனை தொடங்க இந்த காலகட்டம் நிச்சயம் உதவும்.
குழந்தைகள் பெரும்பாலும் எப்போது ஒரு விஷயத்தினை விட்டு ஓடிவிடுவார்கள் என்றால் அது அவர்களுக்கு அதீத அறிவுரை வழங்கும்போது தான். சுதந்திரம் இருக்கும் சமயமெல்லாம் அவர்கள் மிக ஆர்வமாக கற்றுக்கொள்வார்கள். பாத்திரம் கழுவ ஆரம்பித்ததும் உடனே அது இப்படி இல்ல இப்படின்னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு சின்ன மாற்றம் மட்டுமே நம்மிடம் நடக்க வேண்டும். தவறுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம். சுத்தமாக கழுவவில்லை என அவர்களை திட்டவோ உடனடியாக செய்து காட்டவோ தேவையில்லை.
ஒரு வாரத்திற்கு அப்படியே போகட்டும். பின்னர் மெல்ல ஒரே ஒரு திருத்தத்தினை மேற்கொள்ள செய்து காட்டலாம். அப்படியே செய்து முடித்ததும் ஒரு சின்ன பாராட்டு.
இதில் சில நுட்பமான விஷயங்கள் அடங்கியுள்ளன. பாத்திரம் கழுவும் போது கசடுகளை அவர்களே தான் அகற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் எவ்வளவு கசடுகளை குப்பைத்தொட்டியில் போடுகின்றார்கள் என்பதனை கவனிப்பார்கள். (அதி முக்கியமான குறிப்பு – நாமும் உணவினை வீணாக்குவதை முதலில் நிறுத்த வேண்டும், அவர்களை சாக்காக வைத்து இது நிகழ்ந்தால் இன்னும் மகிழ்ச்சியே). மெல்ல மெல்ல அவர்கள் வீணாக்குவதைக் குறைப்பார்கள்.
அங்கிருந்து மெல்ல குட்டி குட்டி உதவிகளில் ஆரம்பிக்கலாம். காய்கறி நறுக்குவது. எப்படி நறுக்கினால் உணவு வீணாகும் என்ற பேச ஆரம்பிக்கலாம்.
வழக்கமாக வெட்டும் பாணியில் இருந்து அவர்களின் ஆலோசனைப்படி மாற்றி அமைக்கலாம். ஒரு வேளைக்கு எவ்வளவு அரிசி அதன் அளவீடு என்ன என்பதனை அவர்களுக்கு காட்டலாம். அங்கே சின்னச் சின்ன கணக்குகளை அவர்களிடம் இருந்து வாங்கலாம். அரை ஆழாக்கு 2 நபர்களுக்கு என்றால் நான்கு நபர்களுக்கு எவ்வளவு போடுவாய் என அவர்களை அளந்து நீரில் ஊற வைக்கச்சொல்லலாம். பின்னர் இருபது நிமிடங்கள் அரிசி ஊற வேண்டும். நேரம் பார்த்துவிட்டு அப்பாவுக்கு / அம்மாவுக்கு அலர்ட் கொடு எனச் சொல்லலாம்.
இவை எல்லாமே குட்டிக்குட்டி வழிகாட்டுதல்களே. மெல்ல மெல்ல சமையலறைக்குள் இருக்கும் பொருட்களின் பெயர்கள், எங்கு எங்கு என்ன இருக்கு (அவர்களை ஒவ்வொரு டப்பாவிலும் குட்டி குட்டி லேபிள் தயாரித்து அதில் அவர்களே எழுதியும் ஒட்டவும் வைக்கலாம் – இரண்டு மூன்று நாட்கள் இந்த வேலை ஓடும்), எவ்வளவு கொள்ளளவு என்பதைப் பற்றி பேசலாம்.
இவை அனைத்தும் வீட்டில் இருக்கும் குழந்தையின் வயதினைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால் சர்வ நிச்சயமாக இதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பாகுபாடு கூடாது.
மிகவும் முக்கியமாக இவை செய்யும் போதெல்லாம், எந்த முயற்சியினை மேற்கொள்ளும்போதும் அசாத்திய பொறுமை தேவை. கரோனாவிற்கு நன்றி சொல்லிவிட்டு (அந்தப் பொறுமையைக் கொடுத்தமைக்காக) இதனை ஆரம்பிக்கலாம்.
மேலும் எதையும் நிர்பந்திக்காமல் வெகு இயல்பாக நிகழும்படி பார்த்துக்கொள்ளுதல் நலம். கற்கும்போது சில சமயம் பொருட்கள் வீணாகலாம், சிந்தலாம் ஆனால் புதிதாக ஒன்றினை கற்கும்போது இது மிகச் சாதாரணமானது. அப்படி கற்கும்போது தான் ஆழமாக எந்த ஒரு விஷயமும் உள்ளிறங்கும்.
வாருங்கள் மெல்ல கைப்பிடித்து அழைத்துச் செல்வோம் அங்கே இன்னும் பற்பல ஆச்சரியங்களை அவர்கள் நமக்கு கொடுக்கக் காத்திருக்கின்றார்கள்.
- விழியன் (சிறார்களுக்கான எழுத்தாளர்)