

குழந்தைகள் நம்மை எப்படி புரிந்துகொள்வார்கள்? நேர்மையான அக்கறையான மனம் திறந்த உரையாடல்கள் மூலம் தான் அது சாத்தியமாகும். நிச்சயம் வீட்டில் அடைபட்டு கிடக்கும் இந்த தருணங்கள் அதற்கான நல்ல வாய்ப்பு. பொக்கிஷம். பயன்படுத்திக்கொள்வோம்.
குழந்தை கருவில் உருவானது முதலே பெரிய காதுகளை இரண்டு பெற்றோர்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் பேச ஆரம்பித்ததும் அந்த மழலை மொழியினை வெகு சில காலமே ரசிக்கின்றோம். அதுவும் பள்ளிகளில் அடியெடுத்து வைக்கும் வரையில் தான் பெரும்பாலும் அவர்களோடு பேசுகின்றோம். அதன் பின்னர் பேசுவதும் குறைந்துவிடுகின்றது. கேட்பதும் குறைந்துவிடுன்றது.
எழுந்திடு, படி, தயாராகு, சாப்பிடு, டிவி பார்க்காதே என்பவை பேசுவதிலோ கேட்பதிலேயோ அடங்கிடாது. இவை உரையாடல்கள் அல்ல. பேச்சுக்கள் அல்ல. அவை வார்த்தைகள் மட்டுமே.
அவர்களின் கனவுகள், பயங்கள், விருப்புகள், வெறுப்புகள், குட்டி ஆசைகள், கோபங்கள், கேள்விகள், குழப்பங்கள் என அவர்களுக்குள் இருக்கும் ஏராளமான விஷயங்கள் எப்போது தான் நாம் அறியப்போகின்றோம்? எல்லாவற்றையும் அறிந்துகொள்ளவேண்டிய அவசியம் நிச்சயம் இல்லை. ஆனால் அதனை நோக்கி நடக்கவும் நாம் யோசிப்பதில்லை.
வெறும் பள்ளி மட்டுமே எல்லாவற்றையும் கொடுத்துவிடும் என்று ஆழமாக நம்புகின்றோம். கல்வி ஓர் ஆயுதம் ஆனால் அதே சமயம் அது ஒரு கருவி. அந்த கருவியினை எப்படி எங்கே செலுத்துவது என்று வழிநடத்துவது ஒவ்வொரு பெற்றொரின் கடமை. அதற்கு முதலில் அவர்களை இன்னும் நெருங்குவதில் மூலமே சாத்தியமாகும்.
அதே சமயம், குழந்தை வளர்ப்பு என்பது குழந்தைகளின் உலகினைப் புரிந்துகொண்டு அவர்களின் உலகில் நுழைவது அல்ல. அவர்களின் உலகினைப் புரிந்துகொண்டு விலகி நிற்பதே.
ஒவ்வொரு வயதிலும் அவர்களிடம் நம் நெருக்கமும் கவனிப்பும் மாறிக்கொண்டே இருக்கும். அவர்களுக்கென்று தனி உலகம் உருவாக உருவாக நாம் விலகிக்கொண்டே இருக்கவேண்டும். மூன்று வயது குழந்தை 24 மணி நேரமும் நம்மோடு இருக்கும். அவர்கள் தூங்கும் நேரம் தவிர்த்து நம் கண்பார்வையிலேயே இருப்பார்கள்.
பள்ளிக்கு சென்றதும் அந்த நேரம் குறையும். அவர்கள் வளர வளர இன்னும் சுருங்கிக்கொண்டே போகும். இது நிதர்சனம். அதே போல வெவ்வேறு காலகட்டத்திலும் நம் அனுகுமுறை மாறும். அவர்களை கக்கத்திலேயே வைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. வளர வளர அவர்களுக்கு முன்னே சென்று வழிகாட்ட வேண்டும், அருகினில் விரல்பிடித்து நடக்க வேண்டும், தக்க சமயத்தில் அவர்களை முன்னே விட்டு ரசிக்க வேண்டும்.
இந்த படிநிலைகளை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே நிறைய சிக்கல்களை உருவாக்குகின்றது. எட்டாம் வகுப்பு பயிலும் குழந்தை தனக்கென ஒரு உலகம் வைத்துக்கொள்ள விரும்பும், தனியாக சிலவற்றினை செய்ய முயலும், அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் என்று எண்ணுவார்கள்.
அவர்களின் மீது இருக்கும் பிடிப்பினை மெல்ல தளர்த்தல் அவசியம். அவர்கள் அப்போது தான் ஒரு சுதந்திரத்தன்மையை உணர்வார்கள். அவர்கள் அதற்காக ஏங்குவார்கள். மாறாக மூன்று வயது குழந்தை ஒரு பிடிப்பினை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் மாறாக இருப்பதும் சிக்கலை உருவாக்கிடும்.
மற்றும் ஒரு கேள்வி எழும், நெருக்கமாக இருக்க வேண்டுமா அல்லது விலகி இருக்க வேண்டுமா? கிடைக்கும் சில நிமிடங்களினை நெருக்கமாக்கி கொள்ள வேண்டும். அந்த நேரங்களிலும் என்ன படித்தாய் என்று கல்வி அறிவிற்குள்ளே பயணிப்பது ஒரு வித சலிப்பினையும் ஏற்படுத்திவிடும். உண்மையில் அவர்களிடம் பேசிக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. கடத்த வேண்டியவைகள் ஏராளமாக உள்ளன, அகற்ற வேண்டியவைகளும் அதற்கு மேல் இருக்கும்.
இவை எல்லாவற்றிற்கும் உரையாடல் உதவும். அது ஓர் அற்புதமான கலை. எந்த விதமான சிக்கலும் பிரச்சனையும் உரையாடல்கள் மூலம் வேறு பரிமாணம் எடுக்கும். இதனை ஆழமாக நம்புங்கள்.
பல சமயங்களில் அனுசரணையான உரையாடல்கள் பலத்தினைக் கூட்டும். நம்பிக்கையை கொடுக்கும். எது நடந்தாலும் தாங்கிப்பிடித்துக்கொள்ள அன்பான பெற்றோர்கள் இருக்கின்றார்கள் என்ற உத்வேகத்தினை கொடுக்கும். நாமும் அதற்கு ஏற்றார்போல உரையாட வேண்டும்.
நம்மை மாற்றிக்கொள்ள இதுவே தக்க தருணம். நாம் நடிக்கக்கூடாது. அவர்கள் மிக எளிதாக நம் நடிப்பினை கண்டுபிடித்துவிடுவார்கள். அவர்கள் நம் குழந்தைகள், அவர்களிடம் நாம் நடித்திட வேண்டாம். நேர்மையான அனுகுமுறையே அவர்களும் விரும்புவார்கள்.
நம்மை எப்படி புரிந்துகொள்வார்கள்? நேர்மையான அக்கரையான மனம் திறந்த உரையாடல்கள் மூலம் தான் அது சாத்தியமாகும். நிச்சயம் வீட்டில் அடைபட்டு கிடக்கும் இந்த தருணங்கள் அதற்கான நல்ல வாய்ப்பு. பொக்கிஷம். பயன்படுத்திக்கொள்வோம்.
-விழியன் (சிறார்களுக்கான எழுத்தாளர்)