Last Updated : 17 Apr, 2020 09:42 PM

 

Published : 17 Apr 2020 09:42 PM
Last Updated : 17 Apr 2020 09:42 PM

இடம் பொருள் இலக்கியம்: வாசிப்பின் சுகானுபவம்! 

கரோனா தொற்றுக்குப் பயந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் இந்நாட்களில் வாசிப்பு அனுபவம்தான் நிமிஷங்களை பயனுள்ளதாக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் நேற்று வாசித்த புத்தகம் கொடுத்த சுகானுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். வாசித்த புத்தகத்தில் இருந்து அள்ள முடிந்த ரசனைக்குரிய கருத்துகளை அள்ளி மற்ற வாசகர்களுக்கு வாரி வழங்குவதில் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.

‘நாளை மற்றுமொரு நாளே’என்று ஜி.நாகராஜன் சொல்லியதைப் போல ‘இதுவும் மற்ற கவிதைப் புத்தகத்தைப் போலதான்’ என்று சாதாரணமாக நினைக்க வைக்கிற புத்தகமல்ல இது. ஆண்டன் பெனி எழுதிய ‘மகளதிகாரம்’ என்கிற புத்தகம்தான் அது.

வீடு முழுக்க மனிதர்கள் இருப்பார்கள். தாய், தந்தை, பாட்டன், பாட்டி, அண்ணன், தம்பி, தமக்கை, தங்கை என உறவுகளால் வீடு நிறைந்திருந்தாலும்… அந்த நிறைநிலை திருப்தி அளிக்கவில்லை ஆண்டன் பெனிக்கு. இந்தப் புத்தகத்தில் அவர் கவிதையில் சொல்கிறார்.

‘மகளின்

பாதங்களால்

நிறைகிறது வீடு’– என்று.

ஆம்… இந்தப் புத்தகம் மகளால் நிறைகிறது.

மகள் வாசனையடிக்கும் இத்தொகுப்பை வாசிக்கிற ஒவ்வொரு மனசிலும் தந்தைமையை நடவு செய்யத் தவறவில்லை கவிஞர். ஆண் குழந்தை மட்டுமே கொண்டுள்ள என்னைப் போன்ற தகப்பன்சாமிகளை எல்லாம் தன் மீது பொறாமை கொள்ள வைக்கிறார் ஆண்டன் பெனி.

வெறும் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸை தன் உள்ளொளியாகக் கொண்ட கவிதைகள் என்று இக்கவிதைகளை சொல்லிவிட்டு நகர்ந்து கொண்டுவிட முடியாது. படிப்போரின் நெஞ்ச வயல்களில் பாசப்பயிரை பாக்டாம்பாஸ் போடாமலே விளைய வைப்பவை.

‘வாழ்வை முழுமையாக்குகிறாள்’ என்று தொடங்குகிற தனது முன்னுரையில் –

‘நீ மகளாகப் பிறந்து

அழுத சத்தத்தில்

நான் தகப்பனாகப் பிறந்தேன்’

என்ற உணர்வில் தொடங்கியது மகளதிகாரத்திற்கான என் பயணம்… என்று இந்த கவிதைகளை நெய்வதற்கான ஆரம்பப் புள்ளியைத் தொட்டுக்காட்டுகிறார்.

‘மகள் வரையும்

கோலம் முடியும் வரை

நம்பிக்கையோடு காத்திருக்கின்றன

சில தெய்வங்கள்

கோலத்திலேயே வாழ்ந்துவிட’- என்று இவர் எழுதுகிறபோது இவரது எல்லா விரல்களுமே மோதிர விரல்களாகிவிட்டனவோ!

உலக நாடுகளிடையே நாடோடியாய் திரிந்து… பல்வேறு மக்கள் திரளைச் சந்தித்த ஆந்த்ரபோலாஜிஸ்ட் பிரிகார்ட் மோரன் என்கிற பிரெஞ்சுக்காரர் நான்கு மாதங்கள் புதுச்சேரியிலும் சென்னைப் பட்டினத்திலும் புழங்கிவிட்டுத் திரும்பியவர. ‘உலகின் நாலாத் திசைகளிலும் இப்போது சுற்றித்திரிந்துவிட்டு திரும்பியிருக்கிறேன். உறவின் அழகியலை (பியூட்டி ஆஃப் ரிலேஷன்ஷிப்) நான் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடத்தில்தான் கற்றுக்கொண்டேன்’என்று எழுதினார். நான் நினைக்கிறேன்… பிரிகார்ட் மோரன் இங்கு வந்திருந்தபோது ஆண்டன் பெனியைக் குறுக்காக எங்கேனும் சந்தித்திருப்பாரோ என்று.

நான் சிறுவயதாக இருக்கும்போது எங்கள் அம்மாச்சிக் கிழவி ‘பொய் சாப்பாடு’ என்று ஒரு விளையாட்டைக் குழந்தைகளிடத்தில் அரங்கேற்றுவாள். ஒரு குழந்தையிடம் கை விரல்களை நீட்டச் சொல்வாள். அந்தக் குழந்தை தனது பிஞ்சுக் கரத்தை நீட்டும். அந்தப் பஞ்சுமிட்டாய் கரத்தை தனது உள்ளங்கையில் ஏந்திக்கொள்கிற அம்மாச்சி, அக்குழந்தையின் சுண்டு விரலைத் தொட்டு இதுதான் பருப்பு சோறாம் என்று சொல்லி… அதிலிருந்து சோறு எடுத்து சாப்பிடுவது மாதிரி பாசாங்கு காட்டுவாள்.

அப்படியே.. மோதிர விரலை குழம்பு சோறு, நடுவிரலை ரசஞ்சோறு, ஆட்காட்டி விரலை பாயாசம், கட்டை விரலை மோர் சோறு என்று சொல்லி அமுதருந்துவாள். அம்மாச்சியின் முகம் அன்பின் சந்நிதானமாய் தெரியும். இரு கரம் கூப்பத் தோன்றும். அதேபோல ஆண்டன் பெனியும் ஒரு கவிதையில் நம்மை இருகரம் கூப்ப வைக்கிறார் அம்மாச்சியைப் போலவே.

அந்தக் கவிதை இந்தக் கவிதை:

‘குவளை நீர் முழுவதும்

சிந்திவிட்டாலும்

மகள் கொண்டு வந்ததில்

என் தாகம் தீர்ந்தது’

இன்னொரு கவிதையில் –

‘மகள் வரைய வரைய

பறவைகள் பறந்துகொண்டே இருந்தால்

எப்போது முடிப்பதாம்

இந்த ஓவியத்தை’ என்றெழுதும்போது – கவிதையின் கிராஃப்ட் வாசிப்பவரின் மனவெளியில் சித்திர ஒளியை ஏற்றி வைத்துவிட்டுப் போகிறது.

ஆண்டன் பெனியின் இக்கவிதைகள் – பத்தடி நாதஸ்வரமாய் நீ…ண்…டு நாத நதியை உற்பத்தி செய்கின்றன. அது மட்டுமல்ல; நாதஸ்வரத்தில் நூல் கயிறுகளில் தொங்கும் சீவாளிகளாக… இவரது மொழி அசைந்தாடுகிறது.

‘ஓடி வந்து இறுகக் கட்டிக்கொள்வாள் மகள்

இறக்கிவிடும்போதெல்லாம்

ஒரு தகப்பன்

மகளைப் பிரசவிப்பதைப் போல

உணர்கிறேன்’

‘ஆண் நன்று பெண் இனிது’ என்பான் பாரதி. ஆண் நன்று என்பதற்கு இக்கவிதையில் புதுவிளக்கம் அளிக்கிறார் ஆண்டன் பெனி. உணர்தலும் உணர்தல் நிமித்தமாய் விரிகிறது இக்கவிதை.

‘ஜன்னலில் குழந்தைகளாவோம்…

குழந்தைகளிடத்தில் ஜன்னலாவோம்’என்பது மாதிரி தன் மகளிடத்தில் கவிஞர் ஜன்னலான பல தருணங்களை இத்தொகுப்பு முழுவதும் தூவியிருக்கிறார்.

‘என் காதில்

ரகசியம் சொல்கிறாள் மகள்

எனக்கும் கேட்டுவிடாதவாறு’

- என்கிற கவிதைக்குள் பச்சை நிற மையில் கையெழுத்திடுகிறது மகளதிகாரம்.

‘என் மோதிர விரலுக்கு

அடுத்து இருப்பது

மகள் விரல்’

இந்தக் கவிதைகளை வாசிக்க எனதருமை வலம்புரிஜான் இல்லையே என்கிற சின்ன சோகம் என்னுள் படர்கிறது. இக்கவிதைகளை உருகி உருகி வாசித்து… ‘இந்தக் கவிதைகளை தொடர்ந்து நீங்கள் வாசித்தால் இந்த நாள் மாத்திரமல்ல… வருடத்தின் எல்லா நாட்களும் இனிய நாளே’ என வாழ்த்துக் குடை விரித்திருப்பார்.

‘வீட்டின்

பூஜை அறையில்

கைகூப்பி நிற்கிறாள் மகள்

இருக்கக்கூடும்

கடவுளுக்கும் சில வேண்டுதல்கள்’ என்ற கவிதை சந்நிதியில் இறைந்து கிடக்கின்றன கடவுளின் பிரார்த்தனைகள்.

இத்தொகுப்பில் என்னை மூழ்கடித்த பெருவெள்ளம் என்று ஒரு கவிதையைச் சொல்வேன்.

அது இது:

‘ஒற்றை மணிக்கொலுசுதான்

மகள் விளையாட விளையாட

கோயில் பிரகாரமாகிவிடுகிறது

வீடு’

ஆண்டன் பெனிக்கு பரிசாக… பெருசாக… அன்பைத் தவிர வேறேன்ன தந்துவிட முடியும் என்னால்!

வெளியீடு:

‘தமிழ் அலை’

80/24பி. பார்த்தசாரதி தெரு,

தேனாம்பேட்டை,

சென்னை – 86.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x