குழந்தைமையை நெருங்குவோம்: 2- பெற்றோர் மூச்சு விட்டுக்கொள்ள வேண்டிய தருணமிது

குழந்தைமையை நெருங்குவோம்: 2- பெற்றோர் மூச்சு விட்டுக்கொள்ள வேண்டிய தருணமிது
Updated on
3 min read

இளையராஜாவின் இசைக்கு இடையே இருக்கும் மவுனத்துக்கு நிகரான மவுனமான நொடிகள் பெற்றோர்களுக்கும் அவசியம். அது வாழ்வின் மீது குழந்தைகளின் மீது ,நிச்சயம் ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்தும்.

இது ஒரு போர்க்காலம் தான். நிகழ்வது மருத்துவப் போர். எந்த ஒரு போருக்கான காரணமும் குழந்தைகளுக்குப் புரிவதில்லை. அதுபோலவே தான் கரோனா யுத்தமும் குழந்தைகளுக்குப் புரிவதற்கில்லை. நாம் ஏன் வீட்டில் இருக்கின்றோம்? அப்பாவும், அம்மாவும் எப்படி இவ்வளவு நாட்கள் தொடர்ச்சியாக வீட்டிலேயே இருக்கின்றார்கள்? எனக் குழந்தைகளுக்குப் புரியாமலேயே நடக்கிறது. வெளியே என்ன நடக்கின்றது என்பதனை குட்டிக்குழந்தைகளுக்கு விளக்காமல் அவர்களைப் பத்திரமாகவும் அதே சமயம் மகிழ்வாகவும் வைத்திருக்க வேண்டியது ஒவ்வொரு பொறுப்பான பெற்றோர்களின் கடமையாகும்.

எனது மூத்த மகள் குழலி (11) மனைவியின் வயிற்றில் வளர்ந்துகொண்டிருந்தாள். ஒரு மாதகாலம் தனியாக லண்டனுக்கு பயணம் செய்ய வேண்டி இருந்தது. தனியாக இருக்கும்போது நிறைய படிக்கலாம் என ஏகப்பட்ட புத்தகங்களை எடுத்துக்கொண்டு விமானம் ஏறினேன்.

விமானத்தில் “லைப் இஸ் ப்யூட்டிபில்” (Life is Beautiful) திரைப்படத்தைப் பார்த்தேன். தனியான அந்தப் பயணம் முழுக்க அழுதுகொண்டே இருந்தேன். அந்தத் திரைப்படம் குழந்தை வளர்ப்பில் எனக்கு ஒரு மிகப்பெரிய திறப்பு. போர் முகாம் ஒன்றில் தந்தை தன் மகனை எப்படி வளர்க்கின்றார் என்பதே அத்திரைப்படத்தின் மையம். முகாமில் இருந்தாலும் விளையாட்டு விளையாடுகின்றோம் என்று தன் குழந்தையைக் கையாள்வார். என்ன நடக்கின்றது வெளியே எனத் தெரியாமல் குழந்தையும் சந்தோஷமாக இருப்பான். குழந்தை வளர்ப்பு பற்றி பலப்பல படிப்பினைகளை அத்திரைப்படம் கொடுத்தது. புத்தகங்கள் எதையும் வாசிக்காமல் நிறைய குழந்தை வளர்ப்பு சம்பந்தமாக வாசிக்க ஆரம்பித்தேன்.

அந்தத் தந்தையைப் போலவே இப்போது நாம் நம் குழந்தைகளுடன் வீட்டில் அடைபட்டுக் கிடக்கின்றோம். இத்தனை காலம் இவை வீடாக மட்டுமே இருந்தது கொஞ்சம் அதனை இல்லமாக மாற்றுவோம். சிரிப்பொலியாலும் பேச்சு சத்தத்தாலும் மூலை முடுக்குகள் நிரம்பட்டும். சில வருடங்களுக்குப் பின்னர் இந்நாட்கள் அவர்களுக்கு அழகிய நினைவுகளாக மாறி இருக்கும். இருக்க வேண்டும்.

தினசரி நாட்களில் முயலாததை, முயல முடியாததை ஒவ்வொரு வீட்டு சூழலுக்கு ஏற்ப செய்ய முயலலாம். இது, அது என பட்டியலிட விரும்பவில்லை.

இந்த காலகட்டத்தில், மற்றொரு மிக முக்கியமான விஷயம் உள்ளது. பெற்றோருக்கான நேரம். இங்கே, இரண்டு வகையான பெற்றோர்கள் இருக்கின்றார்கள். குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துவிட்டோம், வகுப்புகளில் போட்டுவிட்டோம் அவ்வளவு தான் தங்கள் பணி என்று இருப்பவர்கள்.

மற்றொரு வகையறா 24 மணி நேரமும் அவர்களை ரேடாரில் வைத்துக்கொண்டு என்ன செய்கிறார்கள், யார் நண்பர்கள், யாருடன் பேசுகிறார்கள், என்ன கற்கின்றானர், என்ன சாப்பிடுகின்றனர், அடுத்து என்ன செய்வது என சதாசர்வகாலமும் தங்களைத் தாங்களே அழுத்திக்கொள்பவர்கள்.

முதல் வகையினரும் மற்ற சமயங்களில் தங்கள் அலுவலக வேலைகளிலும், வீட்டு வேலைகளிலும் மூழ்கிவிடுகின்றவர்கள் தான். தங்களுக்காக ஒருபோதும் நேரம் ஒதுக்கிக்கொள்வதே கிடையாது.

கணவன் – மனைவியாக அவர்களுக்குத் தனிமை அவசியம். குடும்பம், குழந்தைகளைத் தவிர்த்து பேச ஏராளமான விஷயம் உள்ளது. ஆனால் இவை இரண்டில் மட்டுமே முடங்கிவிடுகின்றது. ஏன் சினிமா பார்ப்பதும் குழந்தைகள் சினிமாவில் நின்றுவிடுகிறது. இந்த கரோனா காலத்தில் மட்டுமல்ல மற்ற நேரங்களிலும் இது அவசியம். அதற்கான திறப்பினை அவர்களே தான் தேட முனைய வேண்டும். ஒரு வழி நிச்சயம் கிடைக்கும். சினிமா என்பது ஒர் உதாரணம் தான், எது மகிழ்ச்சி தரும் என அவரவரே தீர்மானிக்க வேண்டும்.

இந்த வீட்டடைப்பு காலத்தில் நிச்சயம் திணறுவோம். அதை போட்டு உடைப்பது, இதனை நகர்த்துவது, வரவேற்பறையை மாற்றியமைப்பது, குழந்தைகளின் குறுஞ் சண்டைகள் என. வெளியே செல்லாததால் பெற்றோர் இருவருக்குமே அழுத்தம் அதிகமாக இருக்கும். மூச்சு விட்டுக்கொள்ளுதல் மிக அவசியம். அது ஓட்டத்திற்கும் அவசியம். அந்த இடைவெளி இன்னும் உற்சாகம் கொடுக்கும்.

இளையராஜாவின் இசையைப் பற்றி குறிப்பிடும்போது மறைந்த எழுத்தாளர் முகில் அடிக்கடி இப்படிச் சொல்வார்: "அவர் இசை ஏன் இன்னும் பெருவாரியான மக்களுக்கு நெருக்கமாக இருக்கின்றது எனில் அவர் பாடலில் நிலவும் மவுனம். உங்களுக்கு பிடித்தமான அவரின் பாடல்களை கேட்டால் ஒரு குட்டி மெளனம் ஒவ்வொரு பாடலிலும் இருக்கும். அந்த மவுனத்தில் தான் நாம் இசையை ரசிக்க ஆரம்பிக்கின்றோம்" என்பார்.

புகைப்படத்திற்கும் அதனைக் குறிப்பிடலாம். மவுனங்கள் (space) நிரம்பிய புகைப்படங்களால் மீதமிருக்கும் இடங்களும் பொருட்களும் இன்னும் நெருக்கமாகும்.

ஆம் அதே போன்ற மவுனமான நொடிகள் பெற்றோர்களுக்கும் அவசியம். அது வாழ்வின் மீது குழந்தைகளின் மீது நிச்சயம் ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்தும்.

இந்த மூச்சுவிடும் காலம் அவசியம். தனக்காகவும் தன்னை வலுப்படுத்திக்கொள்ளவும் உதவும்.

-விழியன்

(சிறார் எழுத்தாளர்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in