Published : 16 Apr 2020 06:11 PM
Last Updated : 16 Apr 2020 06:11 PM

ஊரடங்கிலும் ஓயாது உழைக்கும் தன்னார்வலர்கள்: கரோனா களத்தில் சந்திக்கும் சவால்கள்!

தன்னார்வலர்கள் குழு, கயல்விழி

மனித இனத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கரோனா வைரஸுக்கு எதிராக ஒரு படையே செயலாற்றி வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகிய அனைவரும் கரோனாவுக்கு எதிராக யுத்தத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் பணி பாராட்டத்தக்கது என்றாலும் அது அவர்களின் கடமையாக இருக்கிறது. அவர்கள் படித்த படிப்புக்கு, செய்யும் தொழிலுக்கான தார்மீகப் பொறுப்பு அது.

இவர்களைத் தாண்டி எந்தவிதக் கட்டாயமோ, யாரின் வற்புறுத்தலோ இல்லாமல், ஊதியம் பெறாமல், பிரதிபலன் எதிர்பாராமல் கரோனா அச்சுறுத்தலை மீறி, களத்தில் நின்று கடமையாற்றுபவர்கள் தன்னார்வலர்கள். சேவை என்பதை மட்டுமே மனதில் வைத்து, உடல் ஆரோக்கியம், உறவுகள், பொழுதுபோக்கு ஆகியவற்றைத் தள்ளிவைத்துவிட்டுப் பணியாற்றி வருகிறார்கள்.

அவர்களின் பணி எப்படி இருக்கிறது, என்னென்ன சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்?

மூணு சம்பளம் குடுக்கறாங்களா தம்பி?
தமிழகத்திலேயே அதிகம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று ஈரோடு. மாற்றுத்திறனாளி ஆசிரியராக இருந்தாலும் அதே மாவட்டத்தில் தைரியத்துடனும் மனிதநேயத்துடனும் தன்னார்வலராகப் பணியாற்றி வருகிறார் லோகநாதன். கைக்குழந்தைக்கு அப்பாவான இவருக்கு, வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்துவிட எல்லாக் காரணங்களும் உண்டு. ஆனால் சமூகத்துக்குத் தொண்டாற்ற இதுவே சரியாத தருணம் எனக் களத்தில் நிற்கிறார் லோகநாதன்.

காலணி அணியாமல் களத்துக்குச் செல்லக்கூடாது என்று காவல்துறை தடை விதித்துவிட, சொந்தக் காசில் பெட்ரோல் போட்டு தனது வாகனம் வழியாகவே தன்னார்வலப் பணி செய்கிறார். உள்ளத்தில் ஊனமின்றி உயர்ந்து நிற்கும் லோகநாதன் தனது அனுபவங்களைப் பகிரும்போது, ஈரோட்டில் கமலா நகரில் பணி செய்கிறேன். வீடுகளுக்கிடையே தனிமனித விலகலை மக்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்கிறோம்.

பைக்கிலேயே பணி செய்யும் ஆசிரியர் லோகநாதன்.

அத்துடன் முதியவர்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுக்காக மருந்து உட்கொள்பவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோரின் விவரங்களைச் சேகரிக்கிறோம். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை, மருத்துவர்கள், செவிலியர்களுடன் நேரடியாகவே வீட்டுக்கே வந்து அளிக்கிறோம். கை கழுவுவது, மாஸ்க் அணிவது, 3 மீட்டர் இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவற்றையும் மக்களுக்குக் கற்பிக்கிறோம்.

படிக்காத சிலர், ''மூணு சம்பளம் குடுக்கறாங்களா தம்பி?'' என்று கேட்டிருக்கின்றனர். ''இதற்கு எந்தச் சம்பளமும் கிடையாதுங்கம்மா, ஆர்வத்துலதான் செய்யறேன்!'' என்று சொல்லியிருக்கிறேன். உதவி கிடைக்காத சிலர், கோபப்பட்டுக் கத்தி இருக்கின்றனர். அவர்களின் சூழல் புரிந்து தேவையான உதவிகளைச் செய்ய முயற்சி செய்திருக்கிறோம் என்கிறார் லோகநாதன்.

கரூரைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோரும் தன்னார்வலருமான செல்வக்குமார், அதிகாரத்தில் இருப்பவர்கள் எங்களின் வார்த்தைகளை மதிப்பதில்லை என்று வருத்தப்படுகிறார்.

கரூர், திருமாநிலையூர் அருகே காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி, மக்களிடையே தனிமனித விலகலை உறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வரும் அவர் கூறும்போது, ''திருச்சி டிஐஜி தன்னார்வலர்கள் தேவை என்று போட்டிருந்த ஃபேஸ்புக் பதிவைப் பார்த்து, பணியாற்ற முடிவெடுத்தோம். ரோட்டரி கிளப் மூலம் காவல் நிலையத்தை அணுகினோம். எங்களின் விவரங்களைப் பெற்றுக்கொண்டு, பேட்ச் அளித்தனர். தற்போது அரசுடன் இணைந்து தன்னார்வலராகப் பணியாற்றி வருகிறோம்.

தன்னார்வலர்களை மதிக்காத நிலை

அதிகார மையத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் எங்களை மதிப்பதே கிடையாது. வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களின் வாகனங்களை நிறுத்துவதே இல்லை. லேசாக கையை அசைத்துவிட்டுச் செல்கின்றனர். இது அங்கிருக்கும் பொதுமக்கள் இடையிலும் சுணக்கத்தை ஏற்படுத்துகிறது.

காரில் செல்பவர்களை விசாரிக்கும் செல்வக்குமார்

வண்டியை நிறுத்திக் கேட்டால், ''அதான் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கோமே, பாத்தா தெரியாதா?'' என்று எதிர்க்கேள்வி கேட்கின்றனர். 'ஸ்டிக்கர் யார் வேண்டுமானாலும் ஒட்டலாமே; ஐடியைக் காண்பியுங்கள்' என்றால், ''என்னைக் கேள்வி கேட்க, நீ யார்?'' என்கின்றனர். இதனால் சக மக்கள் ரியாக்ட் செய்யும் விதமும் உடனே மாறிவிடுகிறது.

சார்ந்துள்ள சமூகத்தைத் தாண்டிவந்துதான் பணியாற்றுகிறோம். குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்து வீடுகள் பெரும்பாலும் எங்களை உற்சாகப்படுத்துவதில்லை, எச்சரிக்கின்றனர். ''உனக்கு கரோனா வந்துவிட்டால், இந்த ஏரியாவே தனிமைப்படுத்தப் பட்டுவிடும்'' என்று வீட்டில் பயப்படுகின்றனர். இவை அனைத்தையும் மீறித்தான் வெளியில் வருகிறோம்.

பொதுமக்கள் ஆதரவு, குடும்ப ஆதரவு இல்லாமல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் களத்தில் நிற்கிறோம். வீதிக்கு வரும் மக்கள் எங்களின் நிலை உணர்ந்தாவது வீட்டில் இருக்க வேண்டும்'' என்கிறார் செல்வக்குமார்.

தமிழகத்தில் கரோனாவால் முதல் மரணம் நிகழ்ந்தது மதுரையில். அங்கு தன்னார்வலர்களாகப் பணியாற்றி வரும் படிக்கட்டுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிஷோர் தங்களின் அனுபவங்களைப் பகிர்கிறார்.

''இல்லாதவர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அன்றாடப் பொருட்களை வாங்கிக் கொடுக்கிறோம். கைகளில் பொருட்களோடு தேவையுள்ளவர்களின் இடத்துக்குச் செல்லும்போது பிரச்சினை இல்லை. ஆனால் கொடுத்துவிட்டுத் திரும்பும்போது காவல்துறையினர் விடுவதில்லை. அடையாள அட்டையைக் காண்பித்தாலும் அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை. கடுமையாக நடந்துகொள்கின்றனர்.

பிரச்சினையாகும் போக்குவரத்து
அதேபோல இரு சக்கர வாகனங்களில் ஒற்றை ஆளாகப் பொருட்களை எடுத்துச் செல்வதும் சிரமமாக உள்ளது. பின்னால் ஒருவர் அமர்ந்து பிடித்துக்கொள்ள காவல்துறை அனுமதி அளிப்பதில்லை.

இதுவரை யாருக்கும் பணமாக உதவி செய்ததில்லை. கடந்த இரண்டு நாட்களாக, நண்பர்களிடம் பணத்தைப் பெற்று தேவை உள்ளவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பிவிடுகிறோம். போலீஸ் கெடுபிடியாலும் தனிமனித விலகலைக் கடைப்பிடிக்கவும் வீட்டில் இருந்தே பணியாற்ற முடிவெடுத்துள்ளோம்.

பணத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் பொருட்களை வாங்கி, அதற்கான ரசீதைப் புகைப்படம் எடுத்து அனுப்பச் சொல்கிறோம். வங்கி, ஏடிஎம் வசதி இல்லாதவர்களுக்கு அரசு அனுமதி உள்ள தன்னார்வல நண்பர்கள் உதவியுடன் பொருட்களை வாங்கிக் கொடுக்கிறோம்'' என்கிறார் கிஷோர்.

9 மாதக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, தினந்தோறும் களத்துக்குச் சென்று தன்னார்வத்துடன் பணி செய்துவருகிறார் மதுரையைச் சேர்ந்த கயல்விழி.

''தேசிய காசநோய் தடுப்பு மையத்தில் களப் பணியாளராகப் பணியாற்றி வருகிறேன். சுகாதாரப் பார்வையாளராக களப்பணி அதிகமாக இருக்கும். காசநோய் மருந்துகளை வீட்டுக்கு வீடு கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும். அப்படியே தன்னார்வப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். அரசு ஊழியர்கள் செல்லாத இடங்களுக்குக் கூட நாங்கள் செல்கிறோம்.

கரோனா குறித்து விழிப்புணர்வே இல்லை

மதுரையில் தத்தனேரி மயானம் அருகே ஒரு சேரிப்பகுதி உள்ளது. அங்கே யாருக்கும் எந்த உதவியும் கிடைப்பதில்லை. பணம் இருப்பவர்கள்கூட அரசின் 1000 ரூபாயை வாங்குகின்றனர். ஆனால் தேவையுள்ள பலருக்கு அரசின் ரேஷன் அரிசி உட்பட எந்த நிவாரணப் பொருட்களும் கிடைப்பதில்லை. அவர்களிடம் ரேஷன், ஆதார் என எந்த அடையாள அட்டைகளும் இல்லை; கரோனா குறித்து எந்தவொரு விழிப்புணர்வும் இல்லை.

சில நாட்களுக்கு முன்னால் நண்பர்கள் 300 முகக்கவசங்களைக் கொடுத்திருந்தார்கள். போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்குக் கொடுக்க முடிவெடுத்து, கொண்டு சென்றேன். செய்தியறிந்த அவர்கள் உடனடியாக என்னைச் சுற்றி வளைத்துவிட்டனர். தனிமனித இடைவெளியைப் பின்பற்றச் சொல்லும் நிலையில் சுற்றிலும் நூற்றுக்கணக்கானோர் நின்றது நமது நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியது'' என்கிறார் கயல்விழி.

பாப்பாவைத் தூக்கிக் கொஞ்ச முடியாது

''கூட்டுக் குடும்பமா இருக்கோம். கணவர் சப்போர்ட் இருக்கறதால என்னால இந்தப் பணியில ஈடுபட முடியுது. வேலை முடிச்சுட்டு நைட்டு வீட்டுக்கு வர்றப்போ, விளையாடிட்டு இருக்கற பாப்பா எல்லாத்தையும் விட்டுட்டு என்கிட்ட தவழ்ந்து வந்து காலைப் பிடிச்சுப்பா. தூக்கிக்க சொல்லி அழுவா, ஆனா முடியாது. அப்போதான் மனசு வலிக்கும்.

காலைல தாய்ப்பால் கொடுத்துட்டுப் போனா, நைட்டு குளிச்சிட்டு வந்துதான் கொடுக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவா இருக்கும்னு தெரியும். அதுக்கேத்த மாதிரி உணவு எடுத்துக்கறேன். நம்ம பாப்பா மாதிரியே எத்தனையோ குழந்தைக தெருவுல ஆபத்துல இருக்காங்கன்னு நினைச்சுட்டுதான் ஒவ்வொரு நாளும் கிளம்புவேன்'' என்கிறார் கயல்.

பிரதிபலன் எதிர்பாராமல் கரோனா தடுப்புப் பணியில் சளைக்காது கடமையாற்றும் தன்னார்வலர்களுக்காவாவது வீட்டிலேயே இருப்போம், கரோனாவை ஒழிப்போம்.

- க.சே.ரமணி பிரபா தேவி | தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x