Published : 16 Apr 2020 12:43 pm

Updated : 20 Apr 2020 11:35 am

 

Published : 16 Apr 2020 12:43 PM
Last Updated : 20 Apr 2020 11:35 AM

குழந்தைமையை நெருங்குவோம்: 1- கரோனா நாட்களின் பெரிய பரிசளிப்போம்

kuzhandhaimaiyai-virumbuvom-1-lets-gift-the-children-with-best-memories

"நாம் வாழ்நாளெல்லாம் யாருக்காக ஓட விரும்புகின்றோமோ அவர்களுடன் திணற திணற சில வாரங்கள். அவற்றினை வரமான நாட்களாக மாற்றியமைப்போம். நினைவுகளைப் பரிசாக அளிப்போம். நினைவுகளை விட பெரிய பரிசுகளை நம் குழந்தைகளுக்கு கொடுத்திட முடியாது"

குழந்தைகளுக்கு வீட்டிற்குள் அடைந்திருப்பது மிகவும் சிரமம் தான். அதுவும் தங்கள் நண்பர்களைப் பார்க்க முடியாமல், வெளியே பூங்காக்களிலும், தெருவிலும் விளையாடமுடியாமல் இருக்கும் போது இன்னும் சிரமப்படுவார்கள். இதற்கு இடையில் குழந்தைகளுக்கு ஸ்க்ரீன் நேரத்தை குறையுங்கள், டிவி மெளபைல் கூடவே கூடாதுன்னு ஒரு பக்கம் தொடர்ச்சியான அறிவுரைகள்.


என்ன செய்வது என்று நிச்சயம் எல்லா பெற்றோர்களும் குழம்பி இருக்கின்றார்கள். இது வழக்கமான கோடை விடுமுறை அல்ல. இன்னும் சொல்லப்போனால் விடுமுறையும் அல்ல.

வருடா வருடமும் கோடை விடுமுறை விட்டுவிட்டாலே குழந்தைகளை என்ன செய்வது? என்ன ஸ்பெஷல் வகுப்பில் சேர்ப்பது என்ன, எப்படி சமாளிப்பது? என்று கேள்விகள் துளைத்துக்கொண்டே இருக்கும். இந்த கோடை விடுமுறை அப்படி அல்ல. நாம் கட்டாயமாக அவர்களுடனே இருக்கின்றோம். ஒவ்வொரு வீடும் பூட்டப்பட்டுள்ளது. தெருக்கள் வெரிச்சோடி கிடக்கின்றன. கிட்டத்தட்ட இப்போது தான் பெரும்பாலான நேரங்களில் வீடாக இருந்தவை இல்லமாக இருக்கின்றன.

வழக்கமான நாட்களில் அவசர அவசரமாக எழுந்து, பள்ளிக்கு கிளப்பி, அலுவலகத்திற்கு தாயாராகி, அலைச்சலுடன் வீடு திரும்பி, எழுது எழுது என வீட்டுப்பாடங்களை எழுத வைத்து, பக்கத்துவீட்டில் என்ன ஸ்பெஷல் வகுப்பில் சேர்த்திருக்கின்றார்கள் என்று பார்த்து அதிலேயே நம் குழந்தையையும் சேர்த்து நிற்க, அமர்ந்து பேச, முகம் பார்க்க நேரமில்லாத ஒரு இறுக்கமான வீடுகளாக இருந்தவை தற்சமயம் இல்லமாகி உள்ளது.

ஒரு வித பதற்றம் இருக்கின்றது எனில் நிச்சயம் பதட்டம் இருக்கின்றது. ஆனால் குழந்தைகளுக்கு அதனைப்பற்றிய கவலை இல்லை. அவர்களைப்பொறுத்த வரையில் வழக்கமான கோடைவிடுமுறை ஆனால் 24 மணி நேரமும் கூடவே இரண்டு பெற்றோர்களும் இருக்கின்றார்கள்.

இது ஒரு பேரிடர் காலம். நாமும் நம்முடைய குழந்தைப்பருவத்தில் நிறைய இடர்களை சந்தித்து இருப்போம். அது இயற்கை இடராகவும் இருக்கலாம்.யோசித்துப்பாருங்கள் வாழ்வில் பார்த்த கொடூரமான புயல், அடர் மழை, வெள்ளம், அச்சப்பட்ட நடுநடுங்கும் இடி, படாரென வெட்டிய மின்னல். இப்படி நினைத்துப்பார்த்தால் அன்றைய நொடி பயங்கரமாக இருந்திருக்கலாம் ஆனால் இன்று அவை நினைவுகள். ஒரு புன் சிரிப்புடனும் சொல்ல ஏகப்பட விஷயங்கள் அதில் இருக்கும்.

உலகம் முழுக்கவே அறிஞர்கள் ஒத்துக்கொண்ட விஷயம் ஒன்று, ஒரு குழந்தையின் முதல் பத்து- பதினைந்து வருடத்தில் அவர்களுக்கு நிகழும் நிகழ்வுகள், சந்திக்கும் பிரச்சினைகள், மகிழ்வான தருணங்களே அவர்களின் வாழ்க்கைகான அடித்தளம். அதுவே ஆதாரம். அதுவே அவர்கள் பின்னாளில் சாதித்தவைகளின் ஆணி வேர். அது கல்வியைப் பற்றி குறிப்பிடவில்லை. கல்வியும் அடக்கம் தான். ஆனால் இன்னபிறவையும் தான் இது பெரும்பாலும். நண்பர்கள், பள்ளியில் விளையாட்டுகள், கோடை விடுமுறைகள், சின்னச் சின்ன சண்டைகள், குடும்ப விழாக்கள், திருவிழாக்கள், முதல் முயற்சிகள், கொஞ்சம் கள்ளத்தனங்கள் இப்படி இப்படி ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக ஏதேதோ நினைவுகள் இருக்கும்.

ஆம். இந்த கரோனா கால வீடடங்கினையும் நாம் அவர்களின் நினைவுகளாக மாற்றிட வேண்டும். குடும்பச்சூழல் ஒவ்வொரு வாசற்படிக்கும் வெவ்வேறு வகையாகத்தான் இருக்கும். அந்தந்த வாசற்படிகளுக்கு ஏற்றவாறு எதிர்கொள்ளல் அவசியம். அவர்களுக்கு இந்த நாட்களை அவர்கள் வளர்ந்ததும் தங்கள் பிள்ளைகளிடம் “அப்ப கொரோணான்னு ஒரு ஆட்கொள்ளி வந்தது.. அப்ப நம்ம வீட்ல..” என்று அழகிய நினைவு கூறலாக அமைய வேண்டும்.

முதலில் ஒன்றினை அகற்றிவிட்டாலே அது அவர்களின் நாட்களை நினைவு மிகுந்த நாட்களாக மாற்றிவிடும். “சும்மா இருக்க விடுதல்”. அவர்களை சும்மா இருக்கவிட்டாலே அவர்களாகவே அவர்களுக்கான மகிழ்ச்சியினை கட்டமைத்துக்கொள்வார்கள். ஏதாச்சும் எபக்டிவா செய்யணும், இந்த நாட்களை வீணாக்கிடக்கூடாது என்ற நினைப்பினை அகற்றிவிடலாம். அது திணிப்பாக முடிந்துவிடும். குட்டிக் குட்டி முயற்சிகளை மேற்கொள்ளலாம். அவைகளுக்கு அவர்கள் எப்போது சலித்துக்கொள்கின்றார்களோ அப்போது அதனை நிறுத்திவிடலாம்.

நாம் வாழ்நாளெல்லாம் யாருக்காக ஓட விரும்புகின்றோமோ அவர்களுடன் திணற திணற சில வாரங்கள். அவற்றினை வரமான நாட்களாக மாற்றியமைப்போம். நினைவுகளை பரிசாக அளிப்போம். நினைவுகளை விட பெரிய பரிசுகளை நம் குழந்தைகளுக்கு கொடுத்திட முடியாது.

- விழியன்

(சிறார்களுக்கான எழுத்தாளர்)

தவறவிடாதீர்!கரோனா ஊரடங்குகரோனா வைரஸ்குழந்தைகள்குழந்தைகளை நெருங்குவோம்குழந்தைகள் வளர்ப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x