Published : 15 Apr 2020 01:13 PM
Last Updated : 15 Apr 2020 01:13 PM

மருத்துவர்களின் மனக் குமுறல்கள்: 5- கரோனா கற்றுத்தந்த பாடம்!

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் உழைத்துவரும் நிலையில், இந்தச் சூழலைக்கூடப் பயன்படுத்தி முறைகேடுகளும் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கின்றன.

“இந்த நேரத்தில், சுகாதார ஆய்வாளர்களின் பணி மிக முக்கியம். எனவே, 350 சுகாதார ஆய்வாளர்களைப் பணிக்கு எடுத்து, மாவட்டத்திற்கு 15 பேர் வீதம் அனுப்பியுள்ளார்கள். இதிலும் எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்பது போல் ஒரு பணியிடத்துக்கு ரூ. 5 லட்சம் வீதம் ரூ. 17.5 கோடி விளையாடியிருக்கிறது” என்று மனம் வெதும்பினார் ஒரு மருத்துவர்.

பீதியில் நோயாளிகள்

முன்பு சாதாரணமாக ஒரு கிளினிக் அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுமார் 50 முதல் 100 நோயாளிகள் வருவார்கள். இப்போது 10 பேர் வருவதே அபூர்வமாகிவிட்டது. மற்ற நோயாளிகளும்கூட எங்கே மருத்துவமனைக்குப் போனால் கரோனா வைரஸ் தங்களுக்கும் தொற்றிக்கொள்ளுமோ என்று அஞ்சுகிறார்கள். ‘மருத்துவமனைக்குச் சென்றால், ஒருவேளை எனக்கும் கரோனா என்று சொல்லி கரோனா மையத்திற்கு அனுப்பி விடுவார்களோ? அப்படிச் சென்றுவிட்டால் நம் குடும்பத்தின் கதி என்ன?’ எனும் எண்ணமே இந்த பீதிக்குக் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இன்றைக்குத் தமிழகத்தின் பல இடங்களிலும் பொது சுகாதாரத் துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்படும் பணிகள் நடக்கவே செய்கின்றன. எனினும், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலோ, இஎஸ்ஐ கரோனா மையங்களிலோ, ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ கிருமி நாசினி தெளிக்கப்படுவதில்லை என்பதையும் மருத்துவர்கள் ஆதங்கத்துடன் பதிவு செய்கிறார்கள்.

ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா?
“கரோனா பீதியும் இந்த ஊரடங்கு உத்தரவும் எப்போதுதான் முடிவுக்கு வரும்? இயல்பு வாழ்க்கைக்கு எப்போது திரும்புவது? இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக இருக்குமோ?” என்று ஒரு அரசுப் பொது மருத்துவரிடம் கேள்விகளை அடுக்கினேன்.

“இன்றைய தேதிக்குத் தமிழ்நாட்டில் கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் நிலைமை சீரடைந்துவிட்டதாகவும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார்கள் என்றும் சீன அரசாங்கம் சொல்லி வருகிறது. அதில் உண்மையில்லை. அங்கு கரோனா தொற்று சமநிலைக்கு வந்துள்ளது. அவ்வளவே. அது இனி கீழ்நிலைக்கு இறங்கி ஜீரோ நிலைக்கு வர வேண்டும்.

அதுவும் சீனாவின் எல்லா நகரங்களிலும் அந்த நிலை ஏற்பட வேண்டும். அப்போதுதான் கரோனா தொற்று இல்லாத தேசமாக சீனாவை உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும். நம் நாட்டில் கரோனா தொற்றுக்குள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை ஏறுநிலையில் உள்ளது. அது கீழிறங்கி சமநிலைக்கு வர வேண்டும். பிறகு படிப்படியாகக் கீழிறங்கி கடைசியாக ஒரே ஒருவருக்குத்தான் கரோனா தொற்று இருக்கிறது எனும் நிலை உருவாக வேண்டும்.

அதன் பிறகு 28 நாட்களுக்குக் கரோனா வைரஸ் அறிகுறியுடன் ஒருவர்கூட இல்லை என்ற நிலை வர வேண்டும். பிறகு நாம் உலக சுகாதார மையத்திற்குத் தெரிவித்தால் அவர்கள் இந்தியாவைக் கரோனா இல்லாத நாடாக அறிவிப்பார்கள். பிறகுதான் நாம் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்திலும் ஈடுபட முடியும். மக்களும் வெளிநகரங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ செல்ல முடியும். இயல்பாக நடமாட முடியும்” என்றார் அந்த மருத்துவர்.

அத்துடன் அவர் முன்வைத்த வேண்டுகோள், மருத்துவர்களின் மீதான பார்வையை அரசு இன்னமும் விசாலமாக்க வேண்டும் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்தது.

“கடும் பணிச்சுமை, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலை என்று பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள். மற்ற துறையினரும் ஆபத்துகளுக்கு மத்தியில் பணியாற்றுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், பெரும்பாலான பணிகளில் எளிதில் மாற்றுப் பணியாளர்களைப் பயன்படுத்த முடியும்.

ஆனால், குறுகிய காலத்தில் ஒரு மருத்துவரை உருவாக்கி, அவரைக் களத்தில் இறக்கிவிட முடியாது. ஒரு மருத்துவ நிபுணர் உருவாக படிப்பு, பயிற்சி என 10 வருடங்கள் தேவைப்படும். களத்தில் குறைந்தது 2 வருடங்களாவது அவர்கள் பணியாற்றினால்தான் கள நிலவரம் தெரிந்து கரோனா போன்ற தொற்று வியாதிகளை ஒழிக்கும் களத்தில் இறங்க முடியும். எனவே, மருத்துவர்களின் அரிய சேவையை அரசு மனதில் கொள்ள வேண்டும். அவர்கள் கேட்கும் வசதிகளைச் செய்துகொடுத்தால், மக்களின் உயிரைக் காக்கும் பணியில் முழு மூச்சுடன் அவர்களால் ஈடுபட முடியும்” என்றார்.

கரோனா வைரஸ் பரவல், நம் பலம் என்ன, பலவீனம் என்ன, நாம் செய்தவை, செய்யத் தவறியவை என்று பல விஷயங்களைப் பட்டவர்த்தனமாக்கிவிட்டது.

இதுபோன்ற சுகாதார நெருக்கடி காலத்தில் மருத்துவர்களின் மகத்துவத்தை உணர்ந்து மருத்துவத் துறையை மேம்படுத்துவதுதான் அரசின் பிரதான லட்சியமாக இருக்க வேண்டும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x