Published : 13 Apr 2020 07:53 PM
Last Updated : 13 Apr 2020 07:53 PM

அதுவொரு அழகிய வானொலி காலம் - 2: பொங்கும் பூம்புனல்... எங்கும் நினைவுகள்!

தகவல் தொடர்பு இல்லாமல் ஒரு தினசரி பத்திரிகைக்குக் கூட வழியில்லாமல் இருந்த குக்கிராமத்தில் பிறந்த எனக்கு இலங்கை வானொலி நிகழ்ச்சிகள்தான் காதுகள் வழியே ஒரு சொர்க்கத்தை அறிமுகப்படுத்தி இருந்தது. திரைப்பாடல் மட்டுமல்லாமல் திரைக்கலைஞர்களின் பேட்டிகள், நாடகங்கள் போன்றவற்றையும் அறிமுகப்படுத்தியது. இலங்கை வானொலிக்காகப் பேசிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இளையராஜா, வைரமுத்து பேட்டிகள் இன்றும் நினைவில் உள்ளன.கே .எஸ்.ராஜா எடுத்த வைரமுத்து பேட்டியும் நினைவில் வருகிறது.

இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை .காலையில் இடம்பெறும் 'பொங்கும் பூம்புனல்' அதன் ஆரம்ப இசை நரம்புகளில் புது குளுக்கோஸ் ஏற்றும். இதில் இடம்பெறும் பிறந்த நாள் வாழ்த்தும் பாடல்களும் அருமையாக இருக்கும்.

இப்படித் தொடங்கும் நிகழ்ச்சிகள் இரவில் கடைசி நிகழ்ச்சியான 'இரவின் மடியில்' வரை பல ருசியான சுவை நுகர் கனிகளை நமக்குக் காது வழியாக கடத்திக் கொண்டே இருக்கும். இலங்கை வானொலி என்றாலே அதில் குரல் தரும் அறிவிப்பாளர்களைத் தவிர்த்துவிட்டு நாம் பேச முடியாது. ஏனென்றால் அந்த அளவுக்கு அவர்கள் காதுகளின் வழியே நம் இதயங்களில் அமர்ந்திருந்தார்கள். பிடிக்காத குரல் என்று எதுவுமே இருக்காது. வகைவகையாக விதம்விதமான குரல்கள், ஒவ்வொன்றும் மாணிக்கப் பரல்கள்.

நிகழ்ச்சி அறிவிப்பாளர்களை எடுத்துக்கொண்டால் நடராஜ சிவம், ராஜேஸ்வரி சண்முகம், கோகிலா சிவராஜா, புவனலோசினி துரைராஜசிங்கம், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், மயில்வாகனம் சர்வானந்தா, கே.எஸ்.ராஜா, பி.எச்.அப்துல் ஹமீத், சில்வஸ்டர் எம்.பாலசுப்பிரமணியம், சந்திரமோகன், அனுசுஜா ஆனந்த ரூபன்,ஜி.பால் ஆண்டனி ,ஜெயகிருஷ்ணா, எஸ்.எஸ்.நாதன், ஜோக்கிம் பெர்னாண்டோ, விசாலாட்சி ஹமீத் ,ஜோசப் ராஜேந்திரன் என்று வளர்ந்து ,செய்தியை வாசிக்கும் நடேச சர்மா வரை அனைவரும் மனதில் ஒட்டி இருந்தார்கள்.

அவர்களில் சூப்பர் ஸ்டார்களாக சிலர் வானொலி ரசிகர் மனங்களையும் ஆக்கிரமித்து இருந்தார்கள். அவர்கள் ராஜேஸ்வரி சண்முகம், நடராஜ சிவம் ,புவன லோஷினி துரைராஜசிங்கம் ,கே.எஸ்.ராஜா,பி எச்.அப்துல் ஹமீத் போன்றவர்கள். இவர்கள் தங்களுக்கு என்று பெரிய ரசிகர் வட்டத்தை சம்பாதித்து இருந்தார்கள்.

இலங்கை வானொலியில் காலையில் ஒளிபரப்பாகும் 'பொங்கும் பூம்புனல்' நிகழ்ச்சி தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் காலை வணக்கம் நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் முன்னோடி என்று சொல்லலாம். அது அப்போது அனைத்து தமிழக வீடுகளிலும் ஒலித்து காலையில் ஒரு சுபசகுனமாக உணரப்பட்டது.

'பொதிகைத் தென்றல்' ஒரு நிகழ்ச்சி. அதை ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்தான் தொகுத்து அளிப்பார். திரைப்பாடல்கள் எந்த அளவுக்கு இலக்கியத் தரமாக உள்ளன என்ற கோணத்தில் அதைக் கொடுப்பார்.யாரும் எதிர்பார்க்காத கோணங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்ததெல்லாம் தகவல்களை எடுத்துக்கொண்டு வழங்குவார். எங்கிருந்தோ தோண்டி சுரங்கத்திலிருந்து எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பது போல் அவரது தகவல்கள் இருக்கும். சங்க இலக்கிய வரிகள் திரைப்பாடலில் எங்கெல்லாம் இடம்பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டி நயம் பாராட்டி உரைப்பார்.

'செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' என்ற வரிகள்

'செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது,' என்று இருப்பதை சுட்டிக் காட்டுவார். 'ஞாயும் ஞாயும் யார் ஆகியரோ?' என்ற சங்க வரி தான் 'யாரோ நீயும் நானும் யாரோ?' என்ற பாடலாக வந்து இருப்பதைச் சொல்வார்.

'தம்மின் மெலியாரை நோக்கித்

தமதுடைமை

அம்மா பெரிதென் றகமகிழ்க'

-என்ற குமரகுருபரரின் சிந்தனைதான் ' உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு' என்று வந்து இருப்பதைச் சொல்வார். இந்த சிந்தனையின் ஓடு பாதையில் பயணித்தால் 'காலுக்குச் செருப்பு இல்லையே என்று கவலைப்பட்டேன் காலில்லாதவனைக் காணும் வரை' என்று கவிஞன் ஷா - அதியோ, கலீல் கிப்ரானோ கூறியதாகப் படித்ததும் நினைவுக்கு வரும்.

'நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை' என்ற கம்பராமாயண சிந்தனைதான் 'நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை' என்று மறு வடிவம் எடுத்துள்ளதைக் கூறுவார்.

பாடல்களை ஒப்பிட்டுப் பேசும்போது 'ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி; மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி; முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி; முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி' என்று வர்ணிக்கும் 'அபூர்வ ராகங்கள்' பாடலோடு ' ஒருபுறம் உன்னைக் கண்டால் கோபுரக் கலசம்; மறுபுறம் பார்க்கும்போது மேனகை தோற்றம்; நடையினில் அன்னம் கண்டேன்; இடையினில் மின்னல் கண்டேன்' என்று 'மாலை சூடவா' படப் பாடலானதை ஒப்பிட்டுச் செல்வார். இதுபோல் சொல்லிக்கொண்டே செல்லலாம்.

இது எத்தனை பாமர மக்களுக்குப் புரியும்? என்று நினைக்காமல் திரைப் பாடல்களின் மூலம் இலக்கிய சிந்தனைக்கு வழிவகுத்தார் அவர். அந்தப் பள்ளிப் பருவத்தில் எனக்கு ஓர் இலக்கிய அனுபவமாக அந்த நிகழ்ச்சி இருக்கும். வெறும் பாடலை மட்டும் ஒலிபரப்பாமல் இப்படிப்பட்ட ஆராய்ச்சி நோக்கில் இந்த நிகழ்ச்சியை அமைத்து அமர்க்களப்படுத்துவார் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம். 2014-ல் மறைந்த அவருக்குத் திருமணம் ஆகவில்லை. தனியாக இருந்து கடைசி வரை தானே சமைத்துச் சாப்பிட்டு மறைந்தார்.

அருள்செல்வன்.

தொடர்புக்கு: arulselvanrk@gmail.com

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x