வைரஸ் படங்கள் 10: வைரல்- ஒட்டுண்ணியாகும் புழுக்கள்

வைரஸ் படங்கள் 10: வைரல்- ஒட்டுண்ணியாகும் புழுக்கள்
Updated on
2 min read

வைரஸ் படங்களுக்கும், ஸோம்பி வகைப் படங்களுக்கும் நூலிழை அளவே வித்தியாசங்கள் இருக்கும். திரைக்கதை சற்று சறுக்கினாலும் இது வைரஸ் படமா அல்லது ஸோம்பி படமா என்ற குழப்பம் ரசிகர்களுக்கு வந்துவிடும். ஆனால் இன்று நாம் பார்க்கப் போகும் படம் வைரஸ் மற்றும் ஸோம்பி இந்த இரண்டு ஜானர்களையும் கலந்து படைக்கப்பட்ட விறுவிறுப்பான திரைப்படம்.

‘பாரநார்மல் ஆக்டிவிட்டி’ படத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் பாகத்தை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஹென்றி ஜூஸ்ட் மற்றும் ஏரியல் ஷுல்மன் மீண்டும் இணைந்து 2016-ம் ஆண்டு ‘வைரல்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்கள். இத்திரைப்படத்தின் திரைக்கதையை ‘ஹேப்பி டெத் டே’, ‘ஸ்கவுட்ஸ் கைட் டூ ஸோம்பி அப்பாகிலிப்ஸ்’, ‘ப்ளட் அண்ட் சாக்லேட்’ போன்ற கற்பனை படங்களுக்குப் பெயர் போன கிறிஸ்டோபர் லேண்டன்… பார்பரா மார்ஷல் என்ற பெண் திரைக்கதை எழுத்தாளருடன் இணைந்து எழுதினார்.

நோய்த் தொற்று கண்ணுக்குத் தெரியாத வைரஸாக மட்டுமே இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒட்டுண்ணி வகைப் புழுக்கள் மனித உடல்களுக்கிடையே பரவி மனிதனின் உடலை தன் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்க ஆரம்பித்தால் என்னவாகும் என்ற கோணத்தில் சொல்லப்பட்டதே ‘வைரல்’ படத்தின் திரைக்கதை.

மூளை தேடும் புழுக்கள்
தன் பெற்றோர்களின் உறவில் உரசல்கள் ஏற்பட்டவுடன் , தந்தையுடன் கலிஃபோர்னியாவுக்கு மாற்றலாகி வருவார்கள் சகோதரிகளான எம்மா மற்றும் ஸ்டேசி. இவர்கள் கலிஃபோர்னியாவுக்கு வந்த சில நாட்களில் அந்த ப் பகுதியில் மர்மமான ‘வார்ம் ஃப்ளூ’ என்ற காய்ச்சல் பரவ ஆரம்பிக்கும். ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த புழுவின் மூலமாகப் பரவும் இந்த நோயால் தாக்கப்பட்டால்... அந்த புழு மூளைக்குச் சென்று மூளையைக் கட்டுப்படுத்திப் பாதிக்கப்பட்டவர்களை ஆக்ரோஷமாக மாற்றிவிடும்.

அருகில் இருப்பவரைத் தாக்கி அவர்கள் உடம்பிற்குள்ளும் புழுக்கள் பரவிவிடும். நிலைமையின் தீவிரத்தை உணரும் இவர்களின் தந்தை, தன் மனைவியை அழைத்து வரச் செல்லுவார். வீட்டில் தனித்து விடப்படுவார்கள் இரு சகோதரிகளும். இந்நிலையில் இவர்கள் வசிக்கும் பகுதி ராணுவப் பயன்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுத் தனிமைப்படுத்தப்படும்.

நிலைமையின் தீவிரம் அறியாமல் தன் காதலனுடன் பார்ட்டிக்குச் செல்ல முடிவெடுப்பாள் எம்மாவின் அக்கா ஸ்டேசி. தன் எதிர்வீட்டில் வாழும், தன் விருப்பத்துக்குரிய எவான் என்ற இளைஞனும் அந்த பார்ட்டிக்கு வருகிறான் என்பதை அறியும் எம்மாவும் பார்ட்டிக்குச் செல்லுவாள். அங்கே ஸ்டேசி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாவாள்.

ராணுவத்திடம் தன் அக்காவை ஒப்படைக்க விரும்பாத எம்மா...தன் சகோதரியை தன் வீட்டிலேயே அடைத்து வைத்து அவளைக் குணப்படுத்த முடிவெடுப்பாள். இதற்கு எவானும் உதவி செய்வான். இந்நிலையில் அந்த ஊரில் பாதிக்கப்படாதவர்களை வெளியேற்றிவிட்டு, அந்த ஊரை வெடிகுண்டு மூலம் அழித்துவிட ராணுவம் முடிவெடுக்கும். ராணுவத்திடம் தன் சகோதரியை ஒப்படைக்க மறுக்கும் எம்மா தன் சகோதரியைக் காப்பாற்றினாளா?, தன் தந்தை- தாயை மீண்டும் சந்தித்தாளா?, பரவும் புழுக்கள் என்னவாயின என்பதைக் கற்பனை கலந்த திரைக்கதையில் சொல்லியிருப்பார்கள்.

பல நூறு ஸோம்பி படங்கள் நிரம்பி வழியும் ஹாலிவுட் திரைப்பட வெளியில் இதுபோன்ற கலவையான திரைக்கதை மூலம் எப்படி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதை நேர்த்தியாகச் சொல்லியிருப்பார்கள் ‘வைரல்’ திரைப்படத்தின் எழுத்தாளர்கள். குறைவான கதாபாத்திரங்கள், எளிமையான கதைச் சூழல்களை வைத்து மனித உறவுகளின் ஊடாக நோய்த் தொற்று கலந்த ஸோம்பி என்ற கற்பனை வெளியில் எப்படிக் கதை சொல்லுவது என்பதைக் கச்சிதமாகச் சொல்லியிருக்கும் இத்திரைப்படம் தவற விடக்கூடாத ஒன்று.
க.விக்னேஷ்வரன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in