Published : 12 Apr 2020 07:31 PM
Last Updated : 12 Apr 2020 07:31 PM

கரோனா: செவிலியர்கள் நடத்தும் சுகாதார யுத்தம்!

பிரதிநிதித்துவப் படம்.

கரோனா தொற்றுக்கு எதிரான மருத்துவப் போரில் முன்வரிசையில் நிற்பவர்கள் செவிலியர்கள். ஆனால், உலகம் முழுவதும் 60 லட்சம் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது என கடந்த 7-ம் தேதி உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் என்ன நிலைமை?

தொற்றை எதிர்த்து நிற்கும் போராளிகள்

நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிப்பது முதல் அவர்கள் நலமடைந்து வீடு திரும்புவது வரை பல்வேறு விதமான பணிகளைச் செய்பவர்கள் செவிலியர்கள்தான். ஊசி செலுத்துவது, மாத்திரைகளைக் கொடுப்பது, வென்டிலேட்டர் ஆப்ரேட் செய்வது போன்ற வேலைகளும் செவிலியர்களுடையது தான்.

"அரசின் உத்தரவின்படி, அரசு மருத்துவமனைகளில் அனைத்து செவிலியர்களுக்கும் ஒரு வாரம் சுழற்சி முறையில் கரோனா சிகிச்சை வார்டில் பணி செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் மூன்று பணி நேரங்கள் உள்ளன. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி, மதியம் 1 மணியில் இருந்து இரவு 7 மணி, இரவு 7 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணி (12 மணிநேரம்). இடைவேளை கிடையாது. எங்கள் மீது யார் கவனம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் நாங்கள் 24 மணிநேரமும் பணி செய்வோம். மருத்துவர்கள் அந்த வார்டில் சில மணிநேரம் இருப்பார்கள். ஆனால், நாங்கள் தான் 24 மணிநேரமும் அதே வார்டில் நின்று பணி செய்கிறோம்.

உலக நாடுகளில் கரோனாவுக்குப் பயந்து சில செவிலியர்கள் கரோனா வார்டுகளில் பணிபுரியத் தயங்குவதாகச் செய்திகள் வெளியாகின்றன. தமிழகத்தில் அப்படி ஒரு செய்தியையும் நான் பார்க்கவில்லை. 'என்னை ஏன் கரோனா வார்டுக்கு போட்டீர்கள்?' என தமிழ்நாட்டில் யாருமே கேட்பதில்லை" என்கிறார் தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளரும், தமிழக அரசு செவிலியர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான வளர்மதி.

25 ஆண்டுகள் இத்துறையில் பணி அனுபவமுள்ள மணிகண்டன், நெல்லை அரசு மருத்துவமனையின் செவிலியர் கண்காணிப்பாளர். தமிழகத்தில் முதல் முறையாக டிப்ளமோ நர்சிங் படித்த ஆண்கள் பிரிவைச் சேர்ந்த மணிகண்டன் கரோனாவுக்கு எதிரான சிகிச்சைப் போராட்டத்தைப் பகிர்ந்துகொண்டார்.

"பிபிஇ போட்டால் வேர்த்துவிடும். நாங்கள் தியேட்டர் உடையை உள்ளே அணிந்துகொண்டு அதற்கு மேல் பிபிஇ உடையை அணிந்துகொள்கிறோம். ஏசி இருந்தாலும் வேர்க்கும். ஒரு பிபிஇ-யின் விலையை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட ரூ.1,000 வருகிறது. அதனால், அதிக அளவில் அதனைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு, பணி நேரம் முழுவதும் ஒரு உடையை அணிந்திருக்க வேண்டும். ஏனென்றால், ஒன்றைக் கழற்றிவிட்டால் , மீண்டும் அதனைப் பயன்படுத்த முடியாது. வேறொரு பிபிஇ தான் பயன்படுத்த வேண்டும். அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் நர்சிங் படித்தேன். ஆனால், பணியில் சேர்ந்த பிறகு அதன் மீதான ஆர்வம் அதிகரித்துவிட்டது. நர்சிங் என்பது என் மனைவி போன்று. அதன் மீதான காதல் அதிகமாகியுள்ளது" என்று கரோனா கரோனா யுத்தத்துக்கு இடையே சிரிக்கிறார் மணிகண்டன்.

கட்டுப்பாடுகளும், கடமை உணர்வும்

கரோனா பாசிட்டிவ் உள்ள நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டில் பணிபுரியும் செவிலியர்கள், ஒரு வார பணிக்குப் பிறகு 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆக மொத்தம் 21 நாட்கள். தனிமைப்படுத்தலுக்காக மருத்துவமனைகள், செவிலியர் விடுதிகள் போன்றவற்றில் தங்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து, உணவு வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 'நெகட்டிவ்', கரோனா சந்தேகம் உள்ள நோயாளிகள் உள்ள வார்டில் பணிபுரிபவர்கள் 7 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

21 நாட்கள் வீட்டுக்குச் செல்ல முடியாது என்பதால், கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயுள்ளவர்கள், புற்றுநோய் உள்ள செவிலியர்களுக்கு கரோனா வார்டில் பணி செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என வளர்மதி தெரிவிக்கிறார்.

இருப்பினும், சூழ்நிலை காரணமாக கரோனா வார்டில் பணிபுரிய முடியாத செவிலியர்களுக்கு வருத்தமும் இருக்கிறது.

நெல்லை அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் *ராகிணிக்கு (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) வயது 30. 11 மாதக் குழந்தை உள்ளது. கணவர் நெல்லை இஎஸ்ஐ மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிகிறார். குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ராகிணிியை கரோனா வார்டில் பணியமர்த்தவில்லை. அதில் அவருக்கு வருத்தம் இருக்கிறது.

"எல்லோரும் கரோனா வார்டில் பணி செய்யும் போது நான் மட்டும் அங்கு பணியாற்றாதது குற்ற உணர்வைத் தருகிறது" என நம்மிடம் தெரித்தார் ராகிணி.

அதே மருத்துவமனையில் பணிபுரியும் *சங்கீதா, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். 9 வயது மகனையும், வயது முதிர்ந்த தன் தந்தையையும் அவர்தான் கவனித்துக்கொள்ள வேண்டும். அதனால், அவர் கரோனா வார்டில் பணியமர்த்தப்படவில்லை. எனினும், "வருங்காலத்தில் கரோனா வார்டில் பணியமர்த்தினால் பணி செய்யத் தயாராக இருக்கிறேன்" என்கிறார்.

"அட்மிஷன் போடுதல், அந்தப் பதிவை நிர்வகித்தல், நோயாளிகளுக்கு உணவளித்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும். லேப் பரிசோதகர்கள் குறித்த நேரத்தில் இல்லையென்றால் நாங்கள் நோயாளிகளைத் தாமதிக்க வைக்காமல் பரிசோதனைக்காக ரத்த மாதிரிகளை எடுப்போம். சமீபத்தில், நெல்லை அரசு மருத்துவமனையில், கரோனா பாசிட்டிவ் நோயாளிகள் 10 பேருக்கு, ஆண் செவிலியர் கண்ணன் என்பவர் தான் சர்க்கரை அளவைச் சோதிப்பதற்கு ரத்த மாதிரியை சற்றும் தயங்காமல் எடுத்தார். அதற்கு அங்கிருந்த நோயாளி ஒருவர் அன்புடன் பிஸ்கட் கொடுத்துள்ளார். ரத்த மாதிரியை எடுப்பது எங்களின் வேலை இல்லை என்றாலும், நோயாளிகளின் நலனுக்காக இதனைச் செய்கிறோம். ஆண் செவிலியர் ஒருவர் தன் மனைவிக்குப் பிரசவ நேரம் என்பதால், முன்கூட்டியே கரோனா வார்டில் பணி செய்ய அனுமதிக்குமாறு விரும்பி அந்த வேலையைக் கேட்கிறார்" என்றார், மணிகண்டன்.

மன அழுத்தமும், கூட்டுப் பிரார்த்தனையும்

செவிலியர்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பிறகு ஒரு வாரம் கழித்து அவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுவதாக செவிலியர்கள் தெரிவிக்கின்றனர்.

பணிச்சுமை மன அழுத்தம் தவிர்த்து, குடும்பத்தை விட்டுப் பிரிந்திருப்பதும் செவிலியர்களுக்கு மனச் சோர்வை ஏற்படுத்துகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றுபவர் தாரகேஸ்வரி. 28 ஆண்டுகளுக்கு மேல் செவிலியராகப் பணிபுரியும் தாரகீஸ்வரி,
"என் அப்பா ஓர் இதய நோயாளி. என் சிறுவயதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது, மருத்துவர்களுக்கும் மேல் செவிலியர்கள் தன்னை அன்புடன் கவனித்துக்கொள்வார்கள் என சொல்லிக்கொண்டே இருப்பார். அதனாலேயே செவிலியராக ஆசைப்பட்டு வந்தேன்.

எனக்கு 9-ம் வகுப்பு படிக்கும் பையன் இருக்கிறான். அவன் ஆரம்பத்தில் எனக்கும் கரோனா வந்துவிடுமோ என பயந்தான். அவனை தேற்றித்தான் கரோனா வார்டில் பணி செய்கிறேன். கரோனா நோயாளிகள் மனதளவில் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பர். இறந்துவிடுவோமோ என்று பயப்படுவர். அதனால், அவர்களுக்கு ஒன்றும் ஆகாது என்ற தைரியத்தை நாங்கள் தான் கொடுப்போம். இந்த டிரஸ்ஸை போட்டுவிட்டால் நாங்கள் எங்கள் வீட்டை மறந்துவிடுவோம். சில நேரங்களில் சாப்பிடக்கூட மாட்டோம். ஆரம்பத்தில் பயமாகத்தான் இருந்தது. இப்போது அப்படியில்லை.

ஹெச்.ஐ.வி முதல் எல்லா நோயாளிகளையும் நாங்கள் இப்படித்தானே பார்த்துக்கொண்டிருக்கிறோம். நோயாளிகளாக பார்க்கக் கூடாது, நம் உறவினர்களாக பார்க்க வேண்டும் என, எனக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். அது அப்படியே எனக்கு பசு மரத்தாணி போல பதிந்துவிட்டது. நாங்கள் கஷ்டப்பட்டு பார்த்த நோயாளிகளுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது எனப் பதறிவிடுவோம். வீட்டுக்கு வந்தாலும் அதே நினைப்பில் தான் இருப்போம். எல்லா நோயாளிகளைப் போல் இவர்களும் எங்களுக்கு ஒன்றுதான், ஒதுக்குவதற்கு இதில் ஒன்றுமில்லை" என்கிறார் கோவை தாரகீஸ்வரி.

கிட்டத்தட்ட கரோனா நோயாளிகள் 100 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் காளியம்மாளிடம் பேசினோம்.

"மிகவும் முடியாத நோயாளிகளை கழிவறைக்கு அழைத்துச் செல்வது கூட செவிலியர்களின் வேலைதான். மருத்துவக் கழிவுகளை நாங்கள் கையாள வேண்டியிருக்கும். எங்களுக்கு சின்னதாக இருமல் வந்தாலே கரோனாவாக இருக்குமோ என்ற பயம் இருக்கிறது. கரோனா வார்டில் பணி முடித்துவிட்டு மீண்டும் குளிக்க வேண்டும். எங்களை மீண்டும் தூய்மைப்படுத்திக் கொள்ள 1 மணிநேரம் ஆகும். சாதாரணக் காய்ச்சல் வந்தாலும் பயமாக இருக்கும். அரசு மருத்துவமனைகளைப் பொறுத்தவரை யார் எந்த நோயுடன் வருவார்கள் என்றே தெரியாது. எய்ட்ஸ், டெங்கு கூட அவர்களுக்கு இருக்கலாம். எது என்று தெரியாமல்தான் முதலில் நாங்கள் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கிறோம். இப்போது என்றில்லை, எப்போதும் தொற்றின் தாக்கத்துக்கு ஆளாகும் வாய்ப்பு செவிலியர்களுக்கு அதிகம்.

எனக்கு 10-வது படிக்கும் மகன் இருக்கிறான். தினமும் நான் பணிக்குச் செல்லும்போது அழுவான். அவனை என் பெரிய மகன் தேற்றுவான்.
இரவுப் பணியில் ஆண்களாக இருந்தால் டியூட்டியை முடித்துவிட்டுப் பின்னர் தூங்க முடியும். பெண்களாக இருந்தால் அப்படியில்லை. மீண்டும் வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும்" என பெண் செவிலியர்களின் நிலைமை குறித்து விளக்கினார் சென்னை காளியம்மாள்.

மன அழுத்தத்தை எதிர்கொள்வது எல்லா செவிலியர்களுக்கும் சாத்தியமல்ல. குறிப்பாக இளம் வயது செவிலியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாகக் கூறும் மணிகண்டன், நெல்லை அரசு மருத்துவமனையில் அப்படி பாதிக்கப்பட்ட இளம் செவிலியரின் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

"தொலைவில் இருந்து மருத்துவமனைக்கு வருவதால் 30 வயது மதிக்கத்தக்க பெண் செவிலியர் ஒருவரை செவிலியர் விடுதியில் சேர்த்து பணிக்கு வர வைத்தோம். இதனால், அவருக்கு 'அட்ஜஸ்ட்மென்ட் டிஸார்டர்' வந்துவிட்டது. கரோனா குறித்தே எல்லாவற்றையும் பார்ப்பதால் மன அழுத்தம் வந்துவிட்டது. 'எல்லோருக்கும் கரோனா வந்துவிடும், நாமெல்லாம் செத்துவிடுவோம்' என பயத்தில் சொல்லிக்கொண்டே இருப்பார். அவருக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு, விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பியிருக்கிறோம்.

எல்லா செவிலியர்களுக்கும் மனநல மருத்துவரின் எண்ணை அளித்திருக்கிறோம். அவர்களுக்கு மனநல ஆலோசனை தேவைப்பட்டால் உடனடியாக வழங்குகிறோம். தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, ஒவ்வொரு செவிலியருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படும். அந்தப் பரிசோதனை முடிவுகள் வரும் தினத்தில், கூட்டாகப் பிரார்த்தனை செய்வோம். அப்போது, தங்களை அறியாமலேயே பல செவிலியர்கள் கண்ணீர் வடிப்பார்கள். உள்ளுக்குள் பயம் இருந்தாலும் எடுத்த வேலையைச் செய்யும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. எல்லா பாதுகாப்பையும் தாண்டி, எங்களுக்குத் தொற்று வந்தால் சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்" என நெருக்கடி நிலையிலும் தைரியமாகப் பேசுகிறார் நெல்லை மணிகண்டன்.

வெளிநாடுகளில் கரோனா நோயாளிகள் பெரிதளவில் ஏங்குவது அன்புக்கும், அரவணைப்புக்கும்தான். இயல்பாகவே இந்திய, குறிப்பாக தமிழக செவிலியர்களுக்கு இத்தகைய பண்பு இருப்பதாக செவிலியர்கள் பலரும் பெருமிதம் கொள்கின்றனர்.

பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கின்றனவா?

கரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர்களுக்கு முழு உடல் கவசமும், மற்ற வார்டுகளில் பணிபுரிபவர்களுக்கு மூன்றடுக்கு முகக்கவசமும் வழங்கப்பட்டுள்ளன. பணி நேரம் முழுவதும் ஒரே முழு கவச உடையை அணிந்திருக்குமாறு செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"பிபிஇ அணிந்திருப்பது சிரமம் தான். அதிலும், இரவில் 12 மணிநேரம் பணி செய்யும் செவிலியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். அதற்காக பணிநேரத்தை மாற்ற முடியாது. தண்ணீர் குடிப்பது கூட சிரமம் தான். கழிவறையைப் பயன்படுத்த முடியாதது சங்கடம்தான். வேறு வழியில்லை. வார்டுக்குள் செல்லும் போதே சாப்பிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். உள்ளே சென்றால் தண்ணீர் அருந்த வேண்டாம் என்று கூறியுள்ளோம்" என்கிறார் வளர்மதி.

கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசம் வழங்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சமீபத்தில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தமிழக அரசிடம் 37 ஆயிரத்து 648 முழு உடல் கவசங்களும் (பிபிஇ), ஒரு லட்சத்து 17 ஆயிரம் என் - 95 முகக்கவசங்களும், 7 லட்சத்து 75 ஆயிரத்து 106 மூன்று மடிப்பு முகக்கவசங்களும் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிபிஇ பாதுகாப்பு கவசங்கள் தற்போதைக்கு போதிய அளவில் இருப்பதாகக் கூறும் செவிலியர்கள், ஒரே இடத்தில் அதிக அளவிலான கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் சூழல் ஏற்பட்டால் தற்போதைய நிலையில் பிபிஇ கவசங்கள், எண்-95 முகக்கவசங்களை கொள்முதல் செய்வது சிரமம் என்கின்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் கவலை

சுமார் 750 கோடி மக்கள் வாழும் நம் உலகிற்கு, 2 கோடியே 80 லட்சம் செவிலியர்கள்தான் இருக்கின்றனர் என்கிறது WHO புள்ளிவிவரம். உலக அளவில் 90% செவிலியர்கள் பெண்களாக உள்ளனர். இந்திய செவிலியர்களில் 88% பெண்களே.

2018 புள்ளிவிவரங்களின் படி, இந்தியா முழுவதும் 10 லட்சத்து 56 ஆயிரம் செவிலியர்களும், 7 லட்சத்து 72 ஆயிரத்து 575 துணை செவிலியர்களும் உள்ளனர். இந்திய சுகாதாரத்துறையின் மொத்தப் பணியாளர்களில் இது 47%. மீதம் 23.3% மருத்துவர்கள், 5.5% பல் மருத்துவர்களும், 24.1% மருந்தாளுநர்கள். இந்திய சுகாதாரத்துறையின் முதுகெலும்பு, இந்த செவிலியர்களே.

குறைவான செவிலியர்கள் இருக்கும் பகுதிகளிலேயே, கரோனா தொற்றின் பரவல், மருத்துவ உலகில் ஏற்படும் பிழைகள், இறப்புகள் ஆகியவை
அதிகம் நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

பொருளாதார வளம் குறைந்த ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, மத்தியக் கிழக்கு நாடுகள், தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் செவிலியர்களுக்கான போதாமை அதிகம் நிலவுகிறது. பணக்கார நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாடுகளுக்குத் தேவையான அதிகபட்ச செவிலியர்களுக்கு மற்ற நாடுகளில் இருந்து வரும் செவிலியர்களைத்தான் நம்பியிருக்கிறது.

வெவ்வேறு நாடுகளில் நிலவும் இந்த செவிலியர் பரவலாக்கத்தின் படி, உலகம் முழுவதும் உள்ள செவிலியர்களில் 80% பேர், உலக மக்கள்தொகையின் 50 சதவீத மக்களுக்குத்தான் பணியாற்றும் வகையில் குவிந்துள்ளனர். மீதமுள்ள 20% செவியலர்களே, மீதமுள்ள 50% உலக மக்கள் தொகைக்கு பணியாற்றுகின்றனர்.

உலக நாடுகள் செவிலியர்களுக்கான கல்வி, வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பரிந்துரைக்கும் உலக சுகாதார நிறுவனம், 2030-ம் ஆண்டுக்குள் 57 லட்சம் செவிலியர்கள் போதாமை நிலவும் என எச்சரிக்கிறது.

ஆனால், இன்னொருபுறம் சிகிச்சை அளிக்கும் செவிலியர்கள் தொற்றுக்கு ஆளாகி இறப்பது அதிகரித்துள்ளது. இதனால், செவிலியர்களுக்கான பற்றாக்குறை நிலவும் இச்சூழலில், உலக நாடுகள் பலவற்றிலும் இந்த அச்சத்தால் பெரும்பாலான செவிலியர்கள் பணிக்குச் செல்ல மறுப்பதாக உலக சுகாதார மையம் குறிப்பிட்டுள்ளது. அவர்களின் அச்சத்திற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இத்தாலியில் இதுவரை 23 செவிலியர்கள் கரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 100 பேருக்கு மேல் இறந்திருப்பார்கள் எனக் கருதப்படுகிறது.

இதுவரை இத்தாலியில் 9% சுகாதாரப் பணியாளர்களும், ஸ்பெயினில் 14% சுகாதாரப் பணியாளர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள் மீதான தாக்குதலும் உலகம் முழுவதிலும் அதிகரித்திருக்கிறது. இத்தகைய தாக்குதலால் இந்தியாவில் பாதிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களில் பெரும்பாலானோர் செவிலியர்களாகவே உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5 செவிலியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

JAMA எனப்படும் ஆய்வு இதழில் வெளியான ஆய்வுக்கட்டுரையில், சீனாவில் 1,257 செவிலியர்கள், மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் ஆகிய உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகிறது.

தனிப்பட்ட பாதுகாப்பு உடைகளுக்கான (பிபிஇ) பற்றாக்குறை, தொற்றின் மீதான அச்சம், தாக்குதல்கள் ஆகியவற்றைக் கடந்தும், கரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதில் செவிலியர்களின் பங்கு அளப்பரியது.

உதாரணத்திற்கு, சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் கரோனாவுக்கு எதிரான போரில், 28 ஆயிரம் செவிலியர்கள் பணியாற்றியுள்ளனர். இது தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய 5,500 செவிலியர்களை உள்ளடக்கியதாகும். இவர்கள் அங்கு பாதிக்கப்பட்ட 44 ஆயிரம் நோயாளிகள் குணமடைந்ததற்குக் காரணமாவார்கள்.

தொடரும் புறக்கணிப்புகள்; விரட்டும் அவமானங்கள்

கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்களை, அவர்களது அக்கம்பக்கத்தினரும், வீட்டு உரிமையாளர்களும் விரட்டியடிக்கும் அவலம் பல நாடுகளில் செய்தியாகியுள்ளது.

கரோனா வார்டுகளில் பணிபுரியும் செவிலியர்கள் புறக்கணிக்கப்படும் சம்பவங்களும் தமிழகத்தில் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கின்றன.

"ஆரம்பத்தில் திருநெல்வேலியில் கரோனா சிகிச்சைப் பிரிவில் வேலை செய்யும் செவிலியரை வீட்டுக்கு வர வேண்டாம் என வீட்டுச் சொந்தக்காரர் கூறியதாகப் புகார் எழுந்தது. நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு இப்போது புகார்கள் வருவதில்லை" என்கிறார் வளர்மதி.

செவிலியர் பற்றாக்குறை நிலவும் இந்நேரத்தில், "செவிலியர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் செய்து தருவது உலக நாடுகளின் கடமை" என அறிவுறுத்தியுள்ளார் உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியாயேசஸ்.

ஆனால், இந்தியாவின் பெரும்பாலான செவிலியர்கள் இன்றும் குறைந்தபட்ச ஊதியத்திற்காகப் போராடி வருகின்றனர். அதிக பணிச்சுமைக்கு ஆளாகும் செவிலியர்கள், அதற்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை எனப் போராடுகின்றனர். தமிழ்நாடு, கேரளா போன்ற சுகாதாரத்தில் முன்மாதிரியாக விளங்கும் மாநிலங்களும் இத்தகைய போராட்டங்களுக்கு விதிவிலக்கல்ல.

தமிழகத்தில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரி அடிக்கடி ஒப்பந்த செவிலியர்கள் போராடுவர்கள். அப்போது, அவர்கள் போராடும் இடங்களில் தண்ணீர், கழிவறை வசதி கூட செய்துகொடுக்கப்பட மாட்டாது என்ற செய்திகள் வெளியாகியிருக்கின்றன. "பொது சுகாதாரத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் போராடுவது சட்ட விரோதமாக கருதப்படும்"என சென்னை உயர் நீதிமன்றம், செவிலியர் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளது.

ஊதிய உயர்வுக்காகப் பல போராட்டங்களை நடத்திய செவிலியர்கள்தான், இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரம், காலம் பார்க்காமல் கடமையாற்றி வருகின்றனர்.

நிரந்த செவிலியர்களுக்கு பணி அனுபவத்தைப் பொறுத்து ரூ, 32 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகின்றது. அதே சமயத்தில், ஒப்பந்த செவிலியர்களுக்கு பல போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் எல்லா பிடித்தமும் போக ரூ.14 ஆயிரம் வழங்கப்படுகின்றது. தங்கள் பணியை நிரந்தரமாக்க வேண்டும் என்பதுதான் ஒப்பந்த செவிலியர்களின் முதன்மையான கோரிக்கை. ஏனென்றால், இந்த இக்கட்டான சூழலில், நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணி செய்பவர்கள் ஒப்பந்த செவிலியர்கள் தான்.

தமிழகத்தில் செவிலியர்களின் முக்கியக் கோரிக்கைகள் குறித்து கூறிய காளியம்மாள், "ஒப்பந்த செவிலியர்களுடன் சேர்த்து மொத்தமாக, கிட்டத்தட்ட 25 ஆயிரம் அரசு செவிலியர்கள் தமிழகத்தில் இருக்கிறோம். சுமார் 7,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர். 2,000 பேரை நிரந்தரம் செய்திருக்கின்றனர். நிரந்தரம் செய்யாத செவிலியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். நிறைய அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் வரவிருப்பதால் அதற்கேற்றாற்போல் அவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். பலருக்கு பணி உயர்வு வர வேண்டியுள்ளது.

30 ஆண்டுகளாக புரமோஷன் இல்லாமல் இருப்பவர்கள் உள்ளனர். பலர் புரமோஷன் இல்லாமலேயே பணி ஓய்வும் பெற்று விடுகின்றனர். செவிலியர் கண்காணிப்பாளர், கிரேடு 1, கிரேடு 2 ஆகிய 3 நிலைகள் செவிலியர் பணியில் உள்ளனர். உயர் பொறுப்புகள் தமிழகத்தில் மொத்தமே 876 தான் உள்ளன. கிரேடு 2-வை பொறுத்தவரையில் 86 பதவிகள்தான் உள்ளன. கரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்பட்டிருக்கிறது. இரவு நேரங்களில் பணிபுரியும் செவிலியர்களுக்கு மற்ற மாநிலங்களில் தருவது போன்று 2,000 ரூபாய் அலவன்ஸ் தர வேண்டும்" என்றார்.

கரோனா நெருக்கடி முடிந்த பிறகாவது, தமிழக அரசு இந்தக்கோரிக்கைகளை பரிசீலிக்கும் என நம்பிக் காத்துக்கிடக்கின்றனர் செவிலியர்கள்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x