Published : 12 Apr 2020 06:39 PM
Last Updated : 12 Apr 2020 06:39 PM

கரோனா களத்தில் கருணை முகங்கள் - 5  ;  சொந்தங்களையும் சோகங்களையும் தள்ளிவைத்து... அயராது பணி செய்யும் மருத்துவர்கள்! 

பிரதிநிதித்துவ படம்

ஏழை பணக்கார வித்தியாசமெல்லாம் இல்லாமல், படிக்காதவர் படித்தவர் என்கிற பாகுபாடெல்லாம் இல்லாமல், சீனாவில் பிறந்து, ஒட்டுமொத்த நாடுகளையும் நாட்டு மக்களையும் குறிபார்த்து, பாய்ந்து, பரவிக் கொண்டிருக்கிறது கரோனா வைரஸ். வீட்டிலேயே பதுங்கிக் கிடக்கிறார்கள் மக்கள். ஆனால், காவல்துறையினர், துப்புரவாள அன்பர்கள், மருத்துவத் துறையினர் முதலானோர் வழக்கம் போல், பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரோனா வைரஸ் தொற்றை ஒடுக்குவதற்கு நேரம் பார்க்காமல்,காலம் பார்க்காமல், கண்ணும் கருத்துமாக உழைத்து வருகிறார்கள் மருத்துவர்கள். அதனால்தான், எல்லோரும் கைதட்டி அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தோம். தன் குடும்பம் பற்றிய சிந்தனைகளில்லாமல், நாடு குறித்த கவலையுடனும் பொறுப்புடனும் பணியாற்றிக் கொண்டிருக்கிற இவர்களுக்கு அக்கறையுடனும் அன்புடனும் மீண்டும் மீண்டும் நன்றி சொல்லுவோம்.

கரோனா களத்தில் கருணை கொண்ட முகங்களை எல்லா ஊர்களிலும் பார்த்து வருகிறோம். அவரவரும் தங்களால் இயன்ற சேவைகளையும் உதவிகளையும் செய்து வருகிறார்கள். மருத்துவர்களின் பணி,ஈடு இணையே இல்லாத கருணைச் சேவை. இந்த தருணத்தில், அரசாங்கமும் மருத்துவர்களின்பால், கருணை முகம் காட்டினால், அவர்களின் சேவை இன்னும் முழு அர்ப்பணிப்புடனும் வேகத்துடனும் இருக்கும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கடந்த 2019ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில், மருத்துவர்கள் போராட்டம் நடைபெற்றது நினைவிருக்கிறதுதானே. இதில் ஈடுபட்ட 120 மருத்துவர்களுக்கு டிரான்ஸ்பர் வழங்கப்பட்டது. எந்த மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்களோ, அங்கிருந்து மூன்று மாவட்டங்களைத் தாண்டி, சுமார் 500 கி.மீ. கடந்து டிரான்ஸ்பர் செய்யப்படுவார்கள். 120 மருத்துவர்களை இப்படியாகத்தான் பணியிடமாற்றம் செய்தார்கள்.

இவர்களில் டாக்டர் எஸ்.இளவரசனும் ஒருவர். திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் கடந்த 2013ம் ஆண்டில் இருந்து 2019ம் ஆண்டு வரை பணியாற்றினார். இவரின் மனைவியும் டாக்டர். பெயர் டாக்டர் ஜெயப்ரியா. இவரும் அதே மருத்துவமனையில் பணிபுரிந்தார். இவர்களுக்கு ஆறு வயதிலும் மூன்று வயதிலுமாக இரண்டு குழந்தைகள். போராட்டத்தில் ஈடுபட்டதால், டாக்டர் இளவரசன் ஸ்ரீரங்கத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி குன்னூரில் பணியில் சேர்ந்தார். இத்தனை வருடங்களாகப் பணியாற்றிய இடம், ஊர், இரண்டு குழந்தைகள், 500 கி.மீட்டரைக் கடந்து வேலை இவை எல்லாமே ஒருவித மன அழுத்தத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.

‘’எனக்கு மட்டுமில்லை. என்னைப் போல், 120 மருத்துவர்கள். இந்த டிரான்ஸ்பரை அனுபவித்தார்கள். இவர்கள் எல்லோருமே ஒருவித டிப்ரஷனுக்கு ஆளாகி வருகிறார்கள். மூன்று நான்கு மாவட்டங்களைக் கடந்துதான் வேலை. இவர்களில் சிலர், 150 முதல் 200 கிலோமீட்டர் வரை பயணம் செய்து வேலை பார்க்கவேண்டிய சூழலும் இருக்கிறது.

இந்தநிலையில்தான், இப்போது கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி, உலுக்கிக் கொண்டிருக்கிறது. இதன் அச்சுறுத்தலுக்கெல்லாம் கலங்காமல், பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் தனிப்பட்ட முறையில், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான மன அழுத்தத்தையும் கவலையையும் கொடுத்துக் கொண்டிருக்க, என்ன செய்வது என்றே தெரியாமல், தவித்துக் கலங்கியபடியே, பணியில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்கிறார் டாக்டர் இளவரசன்.

‘’பொதுவாகவே, ஒரு ஊரின் அரசு மருத்துவருக்கும் அந்தப் பகுதி மக்களுக்கும் நெருங்கிய பந்தம் ஒன்று ஏற்பட்டுவிடும். பிணைப்பு ஒன்று உருவாகிவிடும். இதுமாதிரியான இக்கட்டான சூழல்களில், மருத்துவர் சொல்வதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, அவர்கள் சொல்வதை தட்டாமல் செய்வார்கள், ஏரியா மக்கள். தன் உடலில் என்னென்ன பிரச்சினைகள் என்பதெல்லாம் அந்த ஊரில் பலவருடங்களாக இருக்கும் மருத்துவர்களுக்கு முழுமையாகத் தெரியும் என்பதில் மக்கள் உறுதியாக இருப்பார்கள். ஆனால், ஏதோவொரு காரணத்தால், மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்படும் போது, மக்களும் ஒருவித மன அழுத்தத்திற்கும் ஏக்கத்திற்கும் ஆளாகிறார்கள். அரசாங்கம் இதையெல்லாம் கருத்தில்கொண்டு, முடிவு எடுக்கவேண்டும்’’ என்கிறார் திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில்வேலன்.

டாக்டர் இளவரசனுக்கு ஸ்ரீரங்கம் அருகில்தான் வீடு. முன்பு, கணவன் மனைவி இருவரும் மாறி மாறி குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். போதாக்குறைக்கு, பணியாட்களும் இருந்தார்கள். கரோனா வைரஸ் பரவுவதன் எதிரொலியாக, வேலையாட்களின் வருகை நின்றுவிட்டது. டாக்டர் மனைவி, பணிக்குச் சென்று நோயாளிகளையும் பார்த்துக்கொள்ளவேண்டும்; இரண்டு குழந்தைகளையும் கவனிக்க வேண்டும். டாக்டர் கணவரான இளவரசனுக்கோ, குன்னூரில் வேலை. இருவரில் ஒருவர் விடுப்பு எடுத்தாகவேண்டிய நிலை. வெளியூரில் குழந்தைகளைவிட்டுப் பிரிந்திருக்கும் இளவரசன், விடுப்பு எடுத்துக் கொண்டு, தற்போது ‘தாயுமானவனாக’ இருந்து குழந்தைகளைப் பார்த்து வருகிறார்.

‘’ஆமாம். ஸ்ரீரங்கம் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மனைவி, வீட்டுக்கு வந்தாலும் அவர் தனிமையில்தான் இருக்கிறார். அதனால் இரண்டு குழந்தைகளும் தனிமையில்தான் இருக்கிறார்கள். இப்போது நான் வந்து பார்த்துக்கொண்டிருப்பதால், மனைவிக்கு சற்றே நிம்மதி.ஆனால், என்னைப்போல மிகுந்த டிப்ரஷனுக்கு ஆளாகியிருக்கும் மருத்துவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் தமிழக அரசும் தமிழக முதல்வரும் கொஞ்சம் கனிவுடனும் கருணையுடனும் யோசித்துப் பார்க்கவேண்டும்’’ என்று வேதனையுடன் சொல்லும் டாக்டர் இளவரசனுக்கு, மருத்துவத்துறை வட்டாரத்தில் நல்லபெயர் உண்டு என்கிறார்கள் சக மருத்துவர்கள்.

கடந்த 2019ம் ஆண்டில், டெல்லியில் இருந்து மருத்துவமனைக்குத் தரப்படும், தேசிய தரச்சான்றிதழை, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பெறுவதற்கு பெரு முயற்சிகள் மேற்கொண்டார் இவர். ஒருங்கிணைப்பாளராக இருந்து, நான்கைந்து மாதங்கள் இதற்காகப் பணியாற்றி, அனுப்பி வைத்து, ஸ்ரீரங்கம் மருத்துவமனைக்கு தரச்சான்றிதழ் கிடைக்கக் காரணமாகவும் இருந்தார். திருச்சியின் முதல் மருத்துவமனை எனும் சான்றிதழ் கிடைத்தது. ஆனால் இதிலொரு சோகம்... இந்தச் சான்றிதழ் கொடுக்கப்படும் போது, டாக்டர் இளவரசன் டிரான்ஸ்பரில் குன்னூரில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

‘’இது மட்டுமில்லாமல், மகப்பேறு மருத்துவமனைக்கு ‘லட்சயா’ எனும் தேசிய அளவிலான விருது வழங்கப்படும். மணப்பாறை மகப்பேறு மருத்துவமனைக்கு, இந்த விருது கிடைப்பதற்கான அத்தனை ஆய்வுகளும் சமர்ப்பித்தேன். விருதும் கிடைத்தது’’ என்று பெருமிதத்துடன் சொல்கிறார் இவர்.

இப்படியான டிரான்ஸ்பரில் உள்ள 120 டாக்டர்களும் இப்படி பல அனுபவங்கள் கொண்ட மருத்துவர்கள்தான். அந்தந்தப் பகுதி மக்களுடன் இரண்டறக் கலந்து பணியாற்றியவர்கள்தான். தற்போது, இந்த மாற்றத்தால், இவர்களும் இவர்களின் குடும்பத்தாரும் மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்துக்கும் ஆளாகித் தவித்து வருகிறார்கள். ஆனாலும் உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கரோனா வைரஸை எதிர்த்து, கரோனா பீதியோ கவலையோ இல்லாமல், அயராமல் பணியாற்றி வருகிறார்கள்.

திண்டுக்கல்லில் உள்ள பெண் மருத்துவர் ஒருவரின் தந்தையும், சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும் இப்படியான மன உளைச்சலில், வேதனையில் உயிரிழந்த சோகமும் நிகழ்ந்திருக்கிறது என்று தெரிவிக்கிறார்.

‘’ஒரு ஊரில் என்னென்ன வியாதிகள் அடிக்கடி வரும், எந்தப் பகுதி மக்களுக்கு எப்படியான நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதெல்லாம் இத்தனை வருடங்களாக அந்தந்த ஊரில் பணியாற்றி வரும் எங்களுக்கு அத்துப்படி. மருத்துவமனைக்கு உட்பட்ட ஏரியாவில் எதெல்லாம் விபத்துப் பகுதி, என்னென்ன மருந்து உபகரணங்கள் தேவை என்று தெரிந்து வைத்துக் கொண்டு, அவற்றை ஸ்டாக் வைத்துக் கொள்வதும் மருத்துவத்தின் மிக முக்கியப் பணி. மற்ற துறையைப் போல், மருத்துவத் துறையை அணுகக் கூடாது.

120 பேரின் டிரான்ஸ்பர் செல்லாது என்றும் அவர்கள் அனைவரையும் முன்பு பார்த்த இடங்களிலேயே பணியமர்த்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் கடந்த பிப்ரவரி 28ம் தேதி தீர்ப்பளித்தார். ஆனால் இத்தனை மாதங்களாகியும் தமிழக அரசு, கோர்ட் உத்தரவை அமல்படுத்தாமலேயே இருக்கிறது என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இப்போதைய இக்கட்டான சூழ்நிலையில், அரசு உடனடி நடவடிக்கை எடுத்தால், மருத்துவர்களும் இன்னும் உத்வேகத்துடன் செயலாற்றுவார்கள்’’ என்கிறார் மருத்துவர் இளவரசன்.

சீனியர் மருத்துவரான இளவரசன், இப்போது குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு, ஸ்ரீரங்கத்தில். இந்தநிலையில், நேற்று 11.04.2020 அன்று ஸ்ரீரங்கம் மருத்துவமனை பரபரப்பானது. பிரசவத்துக்கு வந்த பெண்ணையும் பிறக்கப் போகிற குழந்தையையும் காக்கவேண்டியதில் பெரும் சிக்கல். என்ன செய்வது என்று யோசித்த வேளையில், டியூட்டி டாக்டருக்கு சட்டென்று மனதில் தோன்றிய பெயர்... டாக்டர் இளவரசன். அந்த இரவு நேரத்தில் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்த இளவரசனுக்கு தகவல் வர, உடனே மருத்துவமனை சென்று சிகிச்சையில் ஈடுபட்டார். இப்போது தாயும் சேயும் நலம். திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருவருக்கும் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘’சிறையில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு, கரோனா வைரஸ் தாக்காமல் இருக்க, பெயில் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் சிறையில் இருந்து வீட்டுக்கு வந்து, பாதுகாப்பாக இருக்கிறார்கள். நாங்கள் முன்பு வேலை பார்த்த மருத்துவமனைக்கே பணிக்கு அனுப்பச் சொல்லி, கோர்ட் உத்தரவு பிறப்பித்தும் கூட, இன்னும் பாராமுகமாகவே இருக்கிறது இந்த அரசாங்கம்.

டிரான்ஸ்பர் செய்யப்பட்ட 120 மருத்துவர்களையும் பழைய இடத்துக்கே அனுப்பி வைத்து, மன உளைச்சலோ மன அழுத்தமோ கவலையோ ஏதுமில்லாமல், மருத்துவப் பணி செய்ய ஆணை பிறப்பிக்கவேண்டும்’’ என்பது டாக்டர் இளவரசனைப் போன்றவர்களின் வேண்டுகோள் மட்டும் அல்ல... சமூக ஆர்வலர்களின் கோரிக்கையும் கூட!

மருத்துவர்களின் சேவைகளை மனதார ஏற்று, கைதட்டி வரவேற்று நன்றி பாராட்டினார்கள் மக்கள். கருணையோடு தமிழக அரசு, மருத்துவர்களின் கோரிக்கைகளையும் சீர்தூக்கிப் பார்த்து, நடவடிக்கை மேற்கொண்டால், ஒட்டுமொத்த மருத்துவர்களும் கைத்தட்டலாலும் முழு அர்ப்பணிப்பாலும் தமிழக அரசுக்கு நன்றி செலுத்துவார்கள்.

இது... கருணையை வழங்கிக் கொண்டிருக்கும் தருணம். மருத்துவச் சேவையில் ஈடுபட்டு வரும் அவர்களின் மனதில் உள்ள சிறியதொரு காயத்துக்கு, மருந்து போடட்டும் அரசு. மகிழ்ந்து பணி செய்வார்கள் மருத்துவர்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x