

எழுபதுகளில் தன் பால்யத்தைக் கழித்தவர்களின் வாழ்க்கையில் இலங்கை வானொலியின் நினைவில் மூழ்கிக் குளித்து எழாமல் கடந்து போக முடியாது.
தொலைக்காட்சி ஊடகம் தொடங்கப்படாத காலம் அது. வேறு எந்த கேளிக்கை மாசும் மனதில் படியாத வசந்த காலம் அது. அப்போது தமிழக ரசிக மனங்களில் முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தது இலங்கை வானொலி ஒன்றுதான் .குறிப்பாக என்னைப்போன்று தென்தமிழ்நாட்டில் இருந்தவர்களுக்குத் துல்லியமாகக் கேட்டது இலங்கை வானொலி மட்டும்தான். பொழுது விடிந்தது முதல் பகல் கடந்து, இரவு தூங்கப் போகும் வரை, அதாவது சுப்ரபாதமாகவும் இரவு தூங்கப்போகும்போது கேட்கும் தாலாட்டாகவும் இருந்தது இலங்கை வானொலிதான். அவர்களது வாழ்க்கையோடு ஒன்றிணைந்து கலந்து வாழ்வின் ஓர் அங்கமாக இருந்தது இலங்கை வானொலி என்பதை மறுக்கவே முடியாது.
ஆல் இண்டிய ரேடியோ சென்னை நிலையம் இரைச்சலுடன் கரகரவென ஒலிப்பது போல இருக்கும் . எங்களுக்குப் பக்கம் என்பதால் திருச்சி சற்று கூடுதல் ஒலியுடன் கேட்கும். அவ்வளவுதான். விவசாய நிகழ்ச்சிகள், செய்திகள், சில நாடகங்கள் தவிர முழுக்க முழுக்க கர்நாடக இசை ஆக்கிரமிப்புகள்தான் ஆல் இண்டிய ரேடியோவில் ஒலிக்கும். எனவே, தமிழக மக்கள் இலங்கை வானொலி ஒலித்த அந்தக்காலத்தில் ஆல் இண்டிய ரேடியோவைச் சற்றுத் தள்ளி ஏன் புறக்கணித்தே வைத்திருந்தார்கள். அதை ஒரு தீண்டத்தகாததாகவே கருதி வைத்திருந்தார்கள்.
மாநிலச்செய்திகள் கேட்ட பிறகு கூட உடனே, " சிலோனுக்கு ஸ்டேஷனை மாற்று" என்று தவிப்பார்கள். அந்த அளவுக்கு மக்களை ஈர்த்துக்கொண்டு கிறக்கத்தில் வைத்திருந்தது இலங்கை வானொலி .எங்கள் ஊர் வேதாரண்யம் பக்கம் இருந்ததால் ஃப்யூஸ் போன பேட்டரியை வானொலிப் பெட்டியில் போட்டால் கூட இலங்கை நிலையம் எடுக்கும். புதுப்பேட்டரி போட்டால்தான் சென்னை கொஞ்சம் எடுக்கும்.ப்பதுங்கிப் பதுங்கி ஏறி இறங்கி ஒலிக்கும். அந்த அளவுக்கு ட்ரான்ஸ் மீட்டர்கள் 'வலு'வாக இருந்தன.
இலங்கை வானொலி ஆசியாவிலேயே முதலில் ஆரம்பிக்கப்பட்ட பெருமைக்குரிய ஒன்று .பிபிசி தொடங்கப்பட்ட மூன்றாண்டுகளில் 1922-லேயே தன் சோதனை ஒளிபரப்பை அது தொடங்கிவிட்டது. இலங்கை வானொலியின் முக்கியமான அங்கம்தான் 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' தமிழ்ச் சேவை. சட்டக் கட்டுப்பாடுகளுக்கு விலக்கு பெற்று புதிய மாற்றங்களுடன் 1966 -ல் சில நெகிழ்வுத் தன்மையுடன் மறுமலர்ச்சி பெற்று ஒலிக்கத் தொடங்கியது. 1950-ல் செப்டம்பர் 30-ல் இமயமலை ஏறிய ஹில்லாரியும் டென்சிங்கும் கூட முதலில் கேட்டது இலங்கை வானொலியைத்தான்.
1952-ல் அகில இந்திய வானொலி நிலையம் திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்று இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை தடை விதித்தது. தமிழ் திரைப்படவுலகம் தன் வியாபாரத்தை விரிவு செய்ய விளம்பரம் செய்யும் ஊடகமாக இலங்கை வானொலியை நம்பியிருந்தது. அதன்படி இலங்கை வானொலியும் அந்த விளம்பரச் சேவையைப் பிரமாதமாகச் செய்தது; கல்லாவும் கட்டியது. இங்கே இதைப் பார்த்து தவித்துப் போனார்கள். பிறகு இந்திய வானொலி விவித் பாரதி 1957, அக்டோபர் 2-ல் ஆரம்பிக்கப்பட்டது
வானலைகளில் தனக்கு ஒரு ரசிகப் பேரரசை, வெறித்தனமான சாம்ராஜ்யத்தை இலங்கை வானொலி நிலையம் கைப்பற்றியிருந்ததற்கு அவர்களின் ஒப்பற்ற பணியும், ஈடுபாடும் நிகழ்ச்சியில் வழங்கிய புதுமைகளும், அறிவிப்பாளர்கள் ஒவ்வொருவரது தனித்துவமும் காரணங்கள் என்று சொல்லலாம்.
இலங்கை வானொலியில் தமிழ், ஆங்கிலம் ,சிங்களம் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இசைத்தட்டுகள் இருந்தனவாம். அதுமட்டுமல்ல 1920களில் முப்பதுகளில் இருந்த இசைத்தட்டுகள் கூட அவர்களது சேமிப்பில் இருந்தன. மிகக் குறைந்த அளவில் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு அதுவும் மேல்தட்டு மக்களுக்காக கர்நாடக சங்கீதம் என்று போய்க்கொண்டிருந்தால் அகில இந்திய வானொலியால் மக்கள் செல்வாக்கு பெற முடியவில்லை. பெரும்பான்மை பாமர மக்களின் இலக்கியம் என்பது திரைப்படப் பாடல்கள்தான் என்ற புரிதலோடு இலங்கை வானொலி செயல்பட்டதால் அனைத்து மக்களின் இதயம் கவர்ந்த ஒன்றாக அது இருந்தது.
அருள்செல்வன்.
தொடர்புக்கு: arulselvanrk@gmail.com