Published : 03 Aug 2015 09:16 AM
Last Updated : 03 Aug 2015 09:16 AM

மைதிலி சரண் குப்த் 10

இந்தி கவிஞர், இலக்கியவாதி

விடுதலைப் போராட்ட வீரரும் இந்தி இலக்கியத்தில் தனி முத்திரை பதித்தவருமான மைதிலி சரண் குப்த் (Mythili Sharan Gupt) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி அருகே சிர்கான் என்ற ஊரில் (1886) பிறந்தார். தந்தை ஒரு வணிகர், கவிஞர். அரசுப் பள்ளியிலும், ஜான்சியில் உள்ள மெக்டானல் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார்.

# விளையாட்டு மீதான ஆர்வத்தால் படிப்பில் கவனம் செல்லவில்லை. அப்பாவின் ஏற்பாட்டால் வீட்டிலேயே கல்வி கற்றார். சமஸ்கிருதம், ஆங்கிலம், வங்கமொழிகளைக் கற்றார். சகோதரர் எழுத்தாளர் என்பதால் இவருக்கும் இலக்கியத்தில் ஆர்வம் பிறந்தது. 12 வயதிலேயே கவிதை எழுதினார். நெகிழ்ந்துபோன அப்பா, ‘என்னைவிட ஆயிரம் மடங்கு சிறந்த கவிஞனாக மாறுவாய்’ என்று ஆசிர்வதித்தார்.

# பல இதழ்களில் கவிதைகள் எழுதி பிரபலமானார். இந்தி இலக்கிய உலகின் சிறந்த படைப்பாளியான மஹாவீர் பிரசாத் திவேதியின் தொடர்பால் இவரது இந்தி மொழி ஞானம் விரிவடைந்தது. அவரைத் தன் குருவாக ஏற்றார்.

# ‘ரங் மே பங்’ இவரது முதல் முக்கிய படைப்பு. அனைவருக்கும் எளிதாக புரியும் நடையைப் பின்பற்றினார். 1916-ல் ‘சாகேத்’ காவியம் படைத்தார். இது இவரது படைப்புகளிலேயே சிறந்ததாக கருதப்படுகிறது. பல புத்தகங்களை வெளியிட்டார்.

# சமூகப் பிரச்சினைகள் குறித்தும் எழுதினார். மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகளை எதிர்த்தார். ‘பாரத் பாரதி’ என்ற காவியத்தில் இந்தியாவின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்து சித்தரித்தார். இது ஆராய்ச்சி நூலாகக் கருதப்பட்டது.

# ராமாயணம், மகாபாரதம், புத்தமதக் கதைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இவரது காவியங்கள் படைக்கப்பட்டன. ஜெயத்ரத் வத், கிஸான், விகட் பட், வைதாலிக், குணால், விஸ்வராஜ்ய, ஜஹுஷ், காபா - கர்பலா ஆகியவை இந்தி இலக்கியத்தின் தன்னிகரற்ற படைப்புகளாக கருதப்படுகின்றன.

# உமர் கயாமின் ‘ரூபயாத்’ கவிதைகள் மற்றும் ‘ஸ்வப்ன வாசவதத்தா’ என்ற சமஸ்கிருத நாடகத்தை இந்தியில் மொழிபெயர்த்தார். தன் அரசியல் கருத்துகளைக் கவிதை வடிவில் வெளியிட்டார். நாடகங்களும் எழுதியுள்ளார்.

# மகாத்மா காந்தி, வினோபா பாவே போன்ற தலைவர்களால் ஈர்க்கப்பட்டார். விடுதலைப் போராட்டத்திலும் இணைந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.

# மகாத்மா காந்தி இவருக்கு ‘ராஷ்டிர கவி’ என்று புகழாரம் சூட்டினார். இவரது ‘சாகேத்’ கவிதை நூலுக்கு ‘மங்கள் பிரசாத்’ விருதை இந்தி சாகித்ய சம்மேளனம் 1936-ல் வழங்கியது. நாடு சுதந்திரம் அடைந்ததும் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டி.லிட். பட்டம் வழங்கி சிறப்பித்தன. ஹிந்துஸ்தானி அகாடமி விருது, பத்மபூஷண் விருதும் பெற்றவர்.

# இந்தி இலக்கிய அன்னையின் ‘செல்லப்பிள்ளை’ என்று போற்றப்படும் மைதிலி சரண் குப்த் வாழ்நாள் கடைசி வரை எழுதிக்கொண்டே இருந்தார். 78 வயதில் (1964) மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x