Last Updated : 09 Apr, 2020 02:41 PM

 

Published : 09 Apr 2020 02:41 PM
Last Updated : 09 Apr 2020 02:41 PM

கரோனா களத்தில் கருணை முகங்கள்- 4: ஊரடங்கும் புரியாது; உணவும் கிடையாது- வாடிய உயிர்களை மீட்டு மறுவாழ்வுக்கு ஏற்பாடு

கரோனா எனும் புதுவித நோய்த்தொற்று சீனாவில் பரவிய அதே வேகத்தில் அது தொடர்பான செய்திகளும், எச்சரிக்கைத் தகவல்களும் உலகம் முழுவதும் பரவின. தொழில்நுட்ப உபயத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நாடு தொடங்கி கடைசித் தகவல் வரை நாம் அனைவரும் தெளிவு பெற்றிருக்கிறோம்.

ஆனால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலைகள் ஆள் அரவமின்றி ஆனது ஏன்? எங்கெங்கும் காணக் கிடைத்த மக்கள் எங்கே சென்றார்கள்? கடைகள் ஏன் மூடப்பட்டிருக்கின்றன? அட, அன்றாடம் அன்னதானம் அளித்த கோயில் கதவுகள் கூட தாழிடப்பட்டிருக்கின்றனவே என்று குழப்பத்தில் இருந்தவர்களை மீட்டு தங்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு, பிணி நீக்க மருத்துவம், பொழுதுபோக்க விளையாட்டுகள் எல்லாவற்றிற்கும் மேலாக ஊரடங்குக்கிற்குப் பின்னர் மறுவாழ்வு என சேவை செய்து வருகின்றனர் மதுரையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர்.

மதுரையில் ஆதரவற்றோர், சாலையோரங்களில் தனித்து விடப்பட்டிருந்த முதியவர்கள், உடல் சவால் கொண்டவர்கள், மிக முக்கியமாக புற உலக சிந்தனையற்று திரிந்த மன நோயாளிகளை மீட்டு காவல்துறை, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் 5 முகாம்களில் தங்க வைத்துள்ளனர் இந்தத் தன்னார்வலர்கள்.

ஒன்றல்ல இரண்டல்ல பல கருணை முகங்கள்...

"இந்தப் பணியில் இணைந்துள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒன்றிரண்டு அல்ல. அத்தனையையும் நீங்கள் பட்டியலிட வேண்டாம் எங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. இது மனிதம். இந்த மனிதம் பற்றிய தகவலை மட்டும் கொண்டு சேருங்கள்" என்று பெருமிதத்துடன் சொன்னார் களப் பணியாற்றி வரும் பெண் ஒருவர்.

5 முகாம்களில் தங்கவைப்பு:

களப்பணியாளர் மேலும் கூறியதாவது:

கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உடனேயே சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோர், மனநலம் குன்றியோர், மாற்றுத் திறனாளிகளை மீட்க வேண்டும் என்று மதுரை காவல்துறை முடிவு செய்தது. மாநகரக் காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் அத்தகைய ஆதரவற்றோரை மீட்கும் பணி தொடங்கியது. இதனை மதுரை அண்ணாநகர் துணை ஆணையர் லில்லி கிரேஸ் ஒருங்கிணைத்தார். நகரின் பல இடங்களுக்கும் நாங்கள் சென்றோம். இந்தத் தகவல் வெளியானதுமே நகரின் பல என்ஜிஓக்கள் ஒவ்வொன்றாக இணைந்தன.

நாங்கள் சென்ற இடங்களில் எல்லாமே எங்களிடம் அந்த மக்கள் எதற்காக எங்களை அழைக்கிறீர்கள்? ஏன் ஊர் இப்படி இருக்கிறது என்று ஆச்சர்யத்துடன் கேட்டனர். நம் விரல் நுனியில் எப்போதும் தேய்த்துக் கொண்டிருக்கும் ஆப்களால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட தருணம் அது.

வயதானவர்கள் சிலர் ஏற்கெனவே ஆதரவின்றிதான் இருக்கிறோம். தினம் தினம் செத்துப் பிழைப்பதற்கு நீங்கள் சொல்லும் நோயால் போய்ச் சேரலாம் என்று பரிதாபமாகக் கூறினர்.

இன்னும் சில மனநலம் குன்றியவர்களுக்கு எதைச் சொல்லியும் புரியவைக்க இயலவில்லை. சிலரைக் கொஞ்சம் கட்டாயப்படுத்தியே சாலைகளில் இருந்து அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.

யாரும் அற்றவர்களை நோய்த் தீண்டிவிடக் கூடாது என்பதும் அவர்கள் நோயைச் சுமந்து செல்லும் கேரியர்கள் ஆகிவிடக் கூடாது என்பதே எங்களின் இலக்கு.

நாங்கள் மீட்ட 200க்கும் மேற்பட்ட நபர்களை எல்லாம் 5 முகாம்களில் தங்க வைத்துள்ளோம். எனது மேற்பார்வையின் கீழ் 3 முகாம்கள் உள்ளன. பழங்காநத்தம், ஆர்விப்பட்டி, திருப்பரங்குன்றம் என மொத்தம் 5 இடங்களில் தங்கவைத்துள்ளோம். பழங்காநத்தம் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். மொத்தம் 35 பேர் உள்ளனர். அவர்கள் எல்லோரும் தலைமுடி திருத்தாமல், குளிக்காமல் பல காலம் இருந்தனர்.

முகாமுக்குக் கொண்டு செல்வதற்கு முன்னதாகவே அவர்களுக்கு முடி திருத்தி, குளிக்கவைத்து, புதிய உடை அணிவித்து, காய்ச்சல், சளி தொந்தரவு இருக்கிறதா என மருத்துவப் பரிசோதனை செய்து முகாமுக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவப் பரிசோதனையில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் குழு உதவியது. மனநலம் பாதிக்கப்பட்டோர் மட்டுமல்ல மற்ற நபர்களையும் இதேபோல் தூய்மைப்படுத்தி, மருத்துவப் பரிசோதனை செய்தே அழைத்துச் சென்றோம்.

மேலும் அவர் மீட்புப் பணியை விவரித்தார்.

மறுவாழ்வுக்கும் ஏற்பாடு

மீட்புப் பணிகள் பற்றி பேசிய அக்களப் பணியாளர், "இப்போது முகாம்களில் இருக்கும் முதியவர்கள் பலரும் தாங்கள் தங்களின் குடும்பத்தினரோடு மீண்டும் இணைய விரும்புவதாகக் கூறினர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சிலரது உறவுகளை தன்னார்வலர்கள் மூலம் தொடர்பு கொண்டோம். சிலர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றனர். இன்னும் சிலர் மவுனத்தைப் பதிலாகத் தந்து சென்றனர். மதுரையில் உள்ள முதியோர் ஆதரவற்றோர் இல்லங்களைத் தொடர்பு கொண்டுள்ளோம். கரோனா பீதி அடங்கிய பின்னர் அவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளோம்.

நடுத்தர வயதில் உள்ள சிலர், எங்களுக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுத்தால் கவுரவமாகப் பிழைத்துக்கொள்வோம் என உறுதியளித்துள்ளனர். அவரவர் தகுதிக்கு ஏற்ப வேலை வாங்கித்தரவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

சிலருக்கு போதை மறுவாழ்வு மைய சிகிச்சை தேவைப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிப்பதையும் பரிசீலித்து வருகிறோம்.

மனநலம் குன்றியர்களைப் பல்வேறு இல்லங்களில் சேர்க்க மாவட்ட நிர்வாக உதவியுடன் பேசி வருகிறோன். இந்த ஊரடங்கு முடிந்தபின்னர் மதுரை சாலைகளில் ஆதரவற்றோர் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளையும் ஏற்படுத்தி வருகிறோம்" என்றார்.

உணவு, யோகா, பொழுதுபோக்கு:

முகாம்களில் தங்கவைத்துள்ள நபர்களுக்கு மதுரை மாநகராட்சி சார்பில் மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்துதான் மூன்று வேளை உணவும், சுத்தமான தண்ணீரும் கிடைப்பதாக முகாம்களில் இருக்கும் பலரும் நெகிழ்கின்றனர். ஒவ்வொரு முகாமில் பாதுகாப்புக்காக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுதவிர அவர்கள் அன்றாடம் தங்களைத் தாங்களே சுத்தமாக வைத்துக் கொள்ள அனைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் தான் ஒவ்வொருவரும் அந்தக் கூடத்தில் இருப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பகல் நேரத்தில் தாயம், கேரம், செஸ் போன்ற உள்ளரங்க விளையாட்டுகளை விளையாடுகின்றனர். செய்தித்தாள் வாசிக்கின்றனர். ஒருவருக்கு ஒருவர் மனம்விட்டுப் பேசி மகிழ்கின்றனர் எனக் கூறுகிறார் அங்கிருக்கும் காவலர்.

காவல்துறையின் கனிவு

சாலையோரங்களில் இருப்போரை மீட்பது என்பது சட்டத்துக்கு உட்பட்டே நடத்தப்பட வேண்டிய பணி. அந்தப் பணிக்கு காவல்துறையே வித்திட்டபோது தன்னார்வலர்களுக்குப் பணி எளிதாகிவிட்டது என்று விவரித்தார் மதுரை அண்ணாநகர் காவல் ஆணையர் லில்லி கிரேஸ்.

"ஊரடங்கு உத்தரவு வந்தவுடன் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் இந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்தோம். மின்னல் வேகத்தில் அவர்கள் நம்முடன் இணைந்தனர். இப்போது நகர் முழுவதும் 5 முகாம்களில் ஆதரவற்றோர், மனநலம் குன்றியோரைத் தங்க வைத்துள்ளோம். இவர்கள் அனைவரும் புதிய மனிதர்களாக மாறி வருகிறார்கள்.

ஊரடங்கு காலத்தில் நாய், குரங்கு போன்ற விலங்குகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் பகுதியில் பசியால் சில குரங்குகள் இறந்ததாகத் தகவல் வந்தது. இதனையடுத்து காவல் ஆணையர் அனுமதியுடன் பல வியாபாரிகளுடன் பேசி அவர்களிடமிருந்து குரங்குகளுக்கு பழங்களைக் கொடுத்து வருகிறோம். மனிதர்கள் அவற்றிற்கு உணவு கொடுத்துப் பழக்கி இந்தத் தலைமுறை குரங்குகளுக்கு இயல்பாக இரைதேடும் பழக்கமே இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது" என்று கூறினார்.

மதுரை ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்னும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அடுத்த 20 நாட்கள் வரை மதுரை நகரில் சுற்றித்திரியும் தெரு நாய்களுக்கு பால், தயிர் சாதம் விநியோகிக்கும் களப்பணியில் இறங்கியுள்ளன. இதற்கான அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இவற்றைக் கொண்டு செல்லும் தன்னார்வலர்களுக்கு ஸ்பெஷல் பாஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா களத்தில் நாங்கள் கருணையோடு செயல்படுவதை வெளிப்படையாக மக்கள் அறியச் செய்ய நாங்கள் விரும்புவதற்கான காரணம் கரோனா காலத்திற்குப் பின்னரும் கூட மக்களுக்கு சக மனிதர்கள் மீதும் மற்ற ஜீவராசிகள் மீதும் கருணை நிலைக்க வேண்டும் என்பதற்காகவே என்று அந்த களப்பணியாளர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x