

கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிடுவதுதான் இங்கே மிகப்பெரிய சவால். கரோனா வைரஸ் என்பதும் அப்படிப்பட்ட கண்ணில் படாத கொடூர அரக்கன் தான்.
ஒரு ஆக்டோபஸ் போல், தன் கரங்களை நாடு விட்டு நாடு தாண்டி நீட்டி, மிரட்டிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அந்தக் கரோனாவின் கரங்கள் நம்மை நெருங்கவிடாமல், அரண் அமைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றன உதவும் குணங்கள்; காக்கும் கரங்கள்.
நாகை மாவட்டம் சீர்காழி, அழகிய ஊர். கோயிலும் ஊரும் கொள்ளை அழகு. பலதரப்பட்ட மனிதர்கள் வாழும் இந்த ஊரில், கரோனா வைரஸை அண்டவிடாமல் பாதுகாக்கும் உபகரணங்கள வழங்கி வருகிறது ‘நிலம் அறக்கட்டளை’ அமைப்பு.
ஒவ்வொரு ஊரிலும் மொத்தமாக நாம் கொட்டுகிற குப்பைக் கழிவுகளை அகற்றினால்தான் அங்கே சுகாதாரம் பவுடர் போட்டுக் கொண்டு வலம் வரும். அப்பேர்ப்பட்ட உன்னதப் பணியைச் செய்துவரும் சுகாதாரப் பணியாளர்களை, அவர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், ‘ஜஸ்ட் லைக் தட்’ விருட்டெனக் கடந்துவிடுபவர்கள்தான் இங்கே அதிகம்.
இப்படியாக, சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவதற்குத்தான் முதல், முழு பாதுகாப்பு மிக மிக அவசியம் என்பதை உணர்ந்த ‘நிலம் அறக்கட்டளை’ அமைப்பின் நிறுவனர் கிள்ளை ரவிந்திரன், நாகை மாவட்டம் சீர்காழி பகுதியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு, சானிட்டைஸர், முகக்கவசம், கிளவுஸ் ஆகியவற்றை வழங்கியிருக்கிறார்.
’’வேலையை சேவையாகவும் சேவையையே வேலையாகவும் கொண்டிருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் வணங்கத்தக்கவர்கள் மட்டும் அல்ல. பாதுகாக்கப்பட வேண்டியவர்களும் கூட! அதனால்தான், முகக்கவசம், கிளவுஸ், சானிட்டைஸர் வழங்கும் எங்களின் பணியை, இவர்களிடம் இருந்தே தொடங்கினோம். அவர்கள் நலமுடன் இருந்தால்தானே, நகரம் சுத்தமாகும்’’ என்கிற கிள்ளை ரவிந்திரன், சீர்காழி மட்டுமில்லாமல், நோய் தீர்க்கும் மருத்துவர் என்று சிவபெருமானைச் சொல்லி வணங்குகிற வைத்தீஸ்வரன் கோவில் பகுதியின் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இதேபோல் கிளவுஸ், முகக்கவசம், சானிட்டைஸர்களை வழங்கியிருக்கிறார்.
அடுத்தகட்டமாக, ’சுத்தமும் வேண்டும்; சோறும் வேண்டுமே...’ என யோசித்தார் கிள்ளை ரவிந்திரன்.
சீர்காழி பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், தெருவில் சுற்றித் திரியும் மன, உடல், உறவுகள் பாதிக்கப்பட்டவர்கள் என்பவர்களை தேடித்தேடி சென்றது ‘நிலம் அறக்கட்டளை’ அமைப்பு. மாற்றுத்திறனாளிகள் இருக்கும் வீடுகள் ஒவ்வொன்றுக்கும் சென்று, பத்து நாட்களுக்குத் தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு வகைகள், காய்கறிகள், முகக்கவசம், சானிட்டைஸர், கிளவுஸ் முதலானவற்றை வழங்கியிருக்கிறார்கள்.
’உடலுக்கு கவசமும் உயிர் வளர்க்க உணவும் அவசியம்’ என்பதை கரோனா உணர்த்தியிருக்கிறது. பொருட்களைப் பெற்றுக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் பயனாளிகளும் ‘நிலம் அறக்கட்டளை’ அமைப்பினருக்கு, நா தழுதழுக்க நன்றியைத் தெரிவிக்கிறார்கள். ‘இந்த கரோனா வந்து எங்களையெல்லாம் முடக்கிப் போட்ருச்சு. வேலை வெட்டிக்குப் போகமுடியல. இந்த சமயத்துல, எங்க குடும்பத்தோட பசியாத்தறதுக்கு அரிசி பருப்புன்னு தந்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலீங்க’’ என்று நெகிழ்ந்து சொல்கிறார்கள் சீர்காழி பகுதி மக்கள்.
‘’கரோனா பரவாம இருக்கணும்னு ஊரடங்கு போட்டிருக்கு அரசாங்கம். அதனால, இன்னும் பல பகுதிகளுக்குப் போய், மக்களுக்கு வேகமாக உதவிகளைச் செய்யமுடியல. மாவட்ட ஆட்சித்தலைவர்கிட்டயும் காவல்துறைகிட்டயும் முறைப்படி அனுமதி வாங்கி, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட பல ஏரியாக்களுக்குச் சென்று, கஷ்டப்படுகிற மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க முடிவு செஞ்சிருக்கோம்’’ என்று மனிதநேயத்துடன் சொல்கிறார் கிள்ளை ரவிந்திரன்.
முகக்கவசம், கையுறை, சானிட்டைஸர்... இவற்றுடன் பரிவுடனும் நேசத்துடனும் மனிதர்களுக்கு உதவுகிற மனிதர்களும் கவசமென இருக்க... கரோனாவாவது வைரஸாவது?!
- அகத்தில் முகம் பார்ப்போம்
எழுத்தாக்கம் : வி.ராம்ஜி