

வைரஸ் தொற்று ஏற்பட்டால் என்னவாகும்? இதுவரை வரலாற்றில் நம்மைக் குசலம் விசாரித்த வைரஸ்கள் பல வகையான பாதிப்புகளைப் பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளன. ஒரு வேளை வைரஸ் தொற்றால் பார்வை பறிபோனால் என்னவாகும்? அந்த வைரஸ் பரவலின் வேகம் கணக்கிட முடியாத அளவுக்கு இருந்தால்?
நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் பார்வையிழந்து கடைசியில் நாட்டின் மருத்துவத்துறை அமைச்சருக்கே பார்வை போய்விட்டால்? இப்படிப் பல விபரீதமான கேள்விகளைக் கொண்டதுதான் 2008-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த ‘ப்ளைண்ட்னஸ்’ திரைப்படம்.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஜோசே சரமாகோவால் எழுதப்பட்ட ‘ப்ளைண்ட்ஸ்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் இயக்குநர் ஃபெர்னாண்டோ மிரேலிஸ். ‘360’, ‘டூ போப்’ போன்ற புகழ்பெற்ற படங்களின் இயக்குநரும் இவர்தான்.
இருளின் வெளிச்சம்
பெயர் குறிப்பிடாத ஊரில் கதை ஆரம்பமாகும். வீட்டிற்கு தன் காரில் திரும்பும் ஒருவர் தன் கண்களில் ஏதோ மாற்றம் நிகழ்வதை உணர்வார். சற்று நேரத்தில் அவரின் பார்வைத் திறன் பறிபோய்விடும். அவரின் கண்களுக்கு பளீரென்ற வெள்ளை நிறத்தைத் தவிர வேறு எதுதும் தெரியாது. அவருக்கு உதவ ஒருவர் முன்வருவார். பாதிக்கப்பட்டவரை அவரின் வீட்டில் விட்டுவிட்டு அவரது காரைத் திருடிச் சென்றுவிடுவார் உதவ வந்தவர்.
தன் மனைவி வந்ததும் கண் மருத்துவரைக் காணச் செல்வார் பார்வை இழந்தவர். அவரைப் பரிசோதிக்கும் மருத்துவர் அவரது கண்களில் எந்தக் குறையும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவார். மேற்சிகிச்சைக்கு சில பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார். அன்று இரவு வீட்டுக்குச் செல்லும் மருத்துவர் அடுத்த நாள் கண் விழிக்கும்போது தன் பார்வையை இழந்திருப்பார்.
முதலில் பார்வை போனவரிடம் இருந்து காரைத் திருடிச் சென்றவர், அவரைக் கைது செய்த போலீஸ், கண் மருத்துவமனையில் இருந்தவர்கள், பின்பு அவர்கள் வெளியில் சென்று புழங்கிய இடத்திலிருந்தவர்கள் என்று அடுத்தடுத்துப் பலருக்குப் பார்வை பறிபோகும். முதற்கட்டமாக வைரஸ் தொற்றால் பார்வை இழந்தவர்களை அரசாங்கம் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் அடைக்கும்.
பார்வை பறிபோன கண் மருத்துவரின் மனைவி தனக்கும் பார்வை பறிபோய்விட்டதாகப் பொய் சொல்லி அவரும் அந்த மருத்துவமனைக்குள் வந்துவிடுவார். அவர் அந்த வைரஸால் பாதிக்கப்படமாட்டார். இவர்கள் மருத்துவமனையில் அடைக்கப்பட்ட சில நாட்களில் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்ல... வைரஸ் மொத்த ஊரையும் கபளீகரம் செய்துவிடும்.
இதற்கிடையில் முதலில் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் தனிமை மருத்துவமனையில் பல சிக்கல்கள் ஏற்படும். மூன்று வார்டுகளாகப் பிரிக்கப்பட்ட அந்த மருத்துவமனையில் மூன்றாவது வார்டில் இருக்கும் ஒருவன் தன்னை அந்த வார்டின் ராஜா என்று அறிவித்துக்கொண்டு அராஜகம் செய்யத் தொடங்குவான். மற்ற இரண்டு வார்டுகளின் உணவைக் கொள்ளையடித்து அவர்களை தன் இச்சைக்கு இணங்க வைக்க முயல்வான். மற்ற இரண்டு வார்டு ஆட்களும் இந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவந்தார்களா, வைரஸ் தொற்றுக்கு ஒரு முடிவு கண்டுபிடிக்கப்பட்டதா என்பதே மீதிக் கதை.
சமூகக் கட்டமைப்பின் நிச்சயமின்மையின் மீது எழுப்பப்பட்ட கேள்வியே இந்தத் திரைப்படம். அனைவரும் பார்வை பறிபோன பரிதாபகரமான சூழலில் இருந்தாலும் அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில் வலியவனின் கொடுமைகள் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை இத்திரைப்படத்தில் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருப்பார்கள். மருத்துவரின் மனைவிக்கு மட்டும் எப்படி பார்வை பறிபோகவில்லை? வைரஸ் தோன்றியதற்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்குப் படத்தில் சரியான பதில் இல்லை என்று விமர்சகர்கள் குற்றம் சாட்டினாலும் ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
‘ப்ளைண்ட்னஸ்’ உருவாக்கிய சர்ச்சைகள்
இத்திரைப்படத்தில் பார்வைக் குறைபாடு உள்ளவர்களை மோசமாகச் சித்தரித்ததற்காகப் பார்வையற்றவர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனங்களைத் தெரிவித்தார்கள். உதாரணத்திற்கு ஊரே பார்வையற்றவர்களால் நிரம்பியவுடன் பலர் ஆடை அணிவதைத் தவிர்த்துவிடுவார்கள். இது மனிதனின் ஆழ்மன இச்சை சம்பந்தப்பட்ட விஷயம் என்று இத்திரைப்படத்தின் மூலக் கதையை எழுதிய ஜோசே சரமாகோ தன் கருத்தைப் பதிவு செய்தார். இதுபோக இத்திரைப்படத்தில் மூன்றாம் வார்டில் இருக்கும் தீயவர்கள் மற்ற வார்டில் இருக்கும் பெண்களை உணவுக்குக் கைமாறாகக் கூட்டு வன்புணர்வு செய்வார்கள். இத்திரைப்படத்தின் வெள்ளோட்டக் காட்சியில் பல பெண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தக் காட்சிகளை வெட்டிச் சுருக்கிவிட்டார் இயக்குநர்.
இந்தச் சமூகத்தில் நாம் வகுத்துக் கொண்டு வாழும் சட்ட திட்டங்களின் நீட்சி எதுவரை? நாளை இந்த அமைப்பு சீர்குலைந்தால் என்னவாகும் என்று விளக்கும் இத்திரைப்படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.
க.விக்னேஷ்வரன்