Last Updated : 02 Apr, 2020 07:12 PM

 

Published : 02 Apr 2020 07:12 PM
Last Updated : 02 Apr 2020 07:12 PM

சென்னையில் இருக்கிறார் ஈபிஎஸ்; தேனியில் என்ன செய்கிறார் ஓபிஎஸ்?

கரோனா பாதிப்பு குறித்தும், நிவாரணம் குறித்தும் தினமும் ஓர் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவ்வப்போது ஆய்வுக்கூட்டங்களும் நடத்திக் கொண்டிருக்கிறார். திறப்பு விழாவில் பட்டன் அழுத்துவது, ரிப்பன் வெட்டுவது போன்ற வேலைகளைக் கூட முதல்வருடன் சேர்ந்தே செய்யும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இப்போது என்ன செய்கிறார் என்ற குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

சட்டப்பேரவை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி முதல்வருடன் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ், மறுநாள் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்திய கரோனா தடுப்பு குறித்த காணொலிக் காட்சி வாயிலான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார். 28-ம் தேதியன்று சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில், தூய்மைப் பணிகள் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்.

அதன் பிறகு ஞாயிறன்று அவரது சொந்த ஊரான தேனிக்குத் திரும்பிவிட்டார். இப்போது வரையில் ஓபிஎஸ், தேனியில் உள்ள தனது வீட்டில் தான் இருக்கிறார். கட்சியினர் மற்றும் பொதுமக்களுடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் தேனி மாவட்ட அதிமுகவினர் .

கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, அரசு மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் பற்றி உடனுக்குடன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்து வந்த சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இப்போது அதிகம் ஆஜராவதில்லை. அவர் எப்போதும் மீடியா வெளிச்சத்திலேயே இருந்தது சிலருக்கு உறுத்தலாக இருந்தது. இதையடுத்தே, கரோனா பாதிப்பு குறித்த அறிவிப்புகளை சுகாதாரத்துறை செயலரும், முதல்வரும் அறிவிக்க ஆரம்பித்தார்கள் என்று சொல்பவர்கள், இதே நிலைமை தனக்கும் வந்துவிடுமோ என்ற எச்சரிக்கையோடுதான் தன்னுடைய வட்டத்தை தேனிக்குள் சுருக்கிக் கொண்டுவிட்டார் துணை முதல்வர் என்கிறார்கள்.

சென்னையில் முதல்வர் ஆய்வுக்கூட்டம் நடத்தினால், இங்கே தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் ஓபிஎஸ் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். நேற்று சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் ஈபிஎஸ் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, இன்று காலையில் ஓபிஎஸ் தனது மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி.யுடன் சென்று தேனி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்தார். அங்குள்ள உணவை அவர்கள் சாப்பிட்டுப் பார்த்தார்கள்.

முன்னதாக, தேனி உழவர் சந்தையில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 150 ரூபாய்க்கு அனைத்து காய்கனிகளும் அடங்கிய தொகுப்பைத் தயாரித்து வழங்கப்படும் பணியை நேரில் ஆய்வு செய்தார் ஓபிஎஸ். பிறகு, தேனி புதிய பேருந்து நிலையம் சென்றவர் அங்கே, வீடு தேடிவரும் மளிகைப் பொருட்கள் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

அதிமுக அமைச்சர்கள் அனைவரும் வழக்கமாக முழுக்கை சட்டையை முழங்கைக்கு மேலே மடித்து விட்டிருப்பது வழக்கம். அந்த வழக்கத்துக்கு மாறாக ஓபிஎஸ் நேற்று முழுக்கை சட்டையை மடிக்காமல் அப்படியே விட்டிருந்தார். கூடவே, உள்ளங்கையில் மஞ்சளும் பூசியிருந்தார். இவை எல்லாம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்கிறார்கள் கட்சியினர்.

அதேநேரத்தில், நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றவர்கள் குறித்த அக்கறை அவரிடமோ அதிகாரிகளிடமோ இருந்ததாகத் தெரியவில்லை. அவரது இன்றைய நிகழ்ச்சிகளில் எல்லாம் கட்சிக்காரர்கள் முண்டியடித்தார்கள். கூடவே, பத்திரிகையாளர்களும் அதிக அளவில் கூடினார்கள். இதற்கு மேலும் கூட்டம் கூடினால் பிரச்சினையாகிவிடும் என்று கருதிய ஓபிஎஸ், இன்று நடைபெறுவதாக அறிவித்திருந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை ரத்து செய்தார். அதற்குப் பதிலாக செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து அவரது அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், மளிகைப் பொருட்களை வீடுதோறும் விநியோகம் செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது குறித்தும், விநியோகத்துக்கு வாகனங்கள் தயார் நிலையில் இருப்பது குறித்தும் விரிவாகக் கூறியிருக்கும் ஓபிஎஸ், இவ்வாறு வீட்டில் இருந்தே மளிகைப் பொருட்களை வாங்கும் பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்குக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகளுக்கு 1 பவுன், அரை பவுன், கால் பவுன் தங்கக் காசு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x