Published : 02 Apr 2020 04:24 PM
Last Updated : 02 Apr 2020 04:24 PM

வைரஸ் படங்கள் 5: கேரியர்ஸ்- உலகின் விளிம்புக்கு ஒரு பயணம்

மனிதனை அவனது சமூகக் கட்டமைப்பிலிருந்து பிரித்துவிட்டால், ஏனைய உயிரினங்களைப் போல் இயற்கை அவனுக்கு அளித்திருக்கும் அடிப்படைக் கடமைகள் இரண்டே இரண்டுதான். உயிர் பிழைத்திருத்தல் மற்றும் இனப் பெருக்கம். இதில் உயிர் பிழைத்திருப்பது என்பது அதிமுக்கியமானது.

மனிதன் என்னதான் சமூக முன்னேற்றம் அடைந்துவிட்டாலும் அவனின் உயிருக்கு ஆபத்து வரும்போது அவனுக்குள் ஒளிந்திருக்கும் மிருகம் வெளிப்பட்டே தீரும். அது எந்த ஒரு பாதகச் செயலையும் செய்யத் தவறாது என்பதைக் கற்பனையுடன் கலந்து சொன்ன திரைப்படம்தான் 2009-ம் ஆண்டு வெளிவந்த ‘கேரியர்ஸ்’ திரைப்படம்.

ஹாலிவுட்டின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர்களான ‘பாஸ்டர் சகோதரர்கள்’ எனப்படும் டேவிட் பாஸ்டர் மற்றும் அலெக்ஸ் பாஸ்டர் என்ற இரட்டை சகோதரர்கள் இயக்கிய இத்திரைப்படம் வழக்கமான அறிவியல் சமாச்சாரங்கள் கொண்ட வைரஸ் திரைப்படமாக இல்லாமல் விறுவிறுப்பான கதை சொல்லல் மூலம் ரசிகர்களை ஈர்த்தது. கிட்டத்தட்ட ஸோம்பி வகைப் படங்களின் திரைக்கதையை ஒத்திருந்தாலும், கவனமான கதை சொல்லலின் மூலம் வைரஸ் பரவலுக்குப் பிறகு உலக அழிவின் ஆரம்பக்கட்டத்திலிருந்து தப்பித்து ஓடும் நான்கு பேரின் கதையாக ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றது ‘கேரியர்ஸ்’.

விளிம்பை நோக்கிப் பயணம்
மர்மமான வைரஸ் ஒன்று பரவி, உலகின் பெரும்பாலான மக்கள் இறந்துவிட, தங்களின் சிறு வயது முதல் தங்களுக்குப் பரிச்சயமான கடற்கரைக்குச் சென்று, நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பாகத் தப்பித்துக் கொள்ளலாம் என்று ப்ரையன் மற்றும் டேனி என்ற இரு சகோதரர்கள் முடிவெடுப்பார்கள். அந்தப் பயணத்தில் அவர்களுடன் ப்ரையனின் காதலி பாபியும், டேனியின் தோழி கேட் என்ற பெண்ணும் இணைவார்கள்.

நீண்ட நெடிய தரைவழிப் பயணத்தில் உயிர் பிழைத்திருக்க தங்களுக்குள் மூன்று விதிகளை உருவாக்கிக் கொள்வார்கள். “வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை எக்காரணம் கொண்டும் நெருங்கவிடக் கூடாது”, “பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களைக் கொள்ளையடிப்பதற்கு முன்பு அவர்களின் பொருட்களைக் கிருமி நாசினி வைத்து சுத்தம் செய்துவிட வேண்டும்”, “வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தவர்களுக்குச் சமம். அவர்களுக்கு உதவ நினைப்பது வீண்”.

இந்த மூன்று விதிகளைக் கடைப்பிடித்தே அவர்களின் பயணத்தின் பெரும்பாதியைக் கடந்திருப்பார்கள் அந்த நால்வரும். பயணத்தின் ஒரு புள்ளியில் ஃப்ராங் என்ற நபர் இவர்கள் வழியில் குறுக்கிடுவார். அவரது சிறுவயது மகள் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பாள். அருகில் உள்ள ஒரு ஊரில் இருக்கும் மருத்துவ மையத்தில் இந்த வைரஸுக்கான மாற்று மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஃப்ராங் கூறுவார். தவிர்க்க முடியாத காரணங்களால் அவரையும் அவரது மகளையும் அழைத்துக் கொண்டு அந்த நால்வரும் பயணிப்பார்கள். அந்த மருத்துவ மையத்தை அவர்கள் சென்றடையும் போது பெரும் ஏமாற்றமே மிஞ்சும்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் மூலம் இந்த நால்வரில் ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்படும். அவர்கள் உருவாக்கிய விதிகள் அவர்களுக்கு எதிராகத் திரும்பும். இந்த இக்கட்டான நிலையில் அவர்கள் என்ன முடிவெடுத்தார்கள், வைரஸ் தொற்றிலிருந்து தப்பினார்களா, கடற்கரையைச் சென்று சேர்ந்தார்களா, இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

வைரஸ் பரவலை மையமாக வைத்துக்கொள்ளாமல்... ஒருவேளை நாசகார வைரஸ் ஒன்று உலகம் முழுக்கப் பரவிவிட்டால் அதற்குப் பிறகு என்னவாகும்? என்ற பெரிய கேள்விக்கான சிறிய பதில்தான் இத்திரைப்படம். உயிர் பிழைத்திருத்தல் என்று வந்துவிட்டால் எந்தக் கொடூரத்தையும் செய்ய மனம் தயாராகிவிடும். ஆனால், மனசாட்சி என்ற ஒன்று இருந்து கொண்டு உறுத்தும் என்பதே நிஜம். அதைத்தான் ப்ரையன் மற்றும் டேனி கதாபாத்திரங்களின் வாயிலாக உணர்த்தியிருப்பார்கள் பாஸ்டர் சகோதரர்கள்.

பாதகமான செயல்களைச் செய்யத் தயாராக இருப்பவனாக ப்ரையனும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு, பின்பு அதன் மூலம் கிடைக்கும் பலன்களை அனுபவிக்கும் கதாபாத்திரமாக டேனி கதாபாத்திரமும் வடிவமைக்கப்பட்டிருக்கும். இவர்களின் முடிவுகளையும் படு நேர்த்தியாக வடிவமைத்து தங்கள் திறமையை நிரூபித்திருப்பார்கள் பாஸ்டர் சகோதரர்கள்.

‘அடுத்து என்ன?’என்ற கேள்விதான் மனித இனத்தைத் தொடர்ந்து முன்னோக்கி நகர்த்திய வண்ணம் உள்ளது. அந்த வகையில் எதிர்காலத்தின் நிலைமை என்ன? என்ற மில்லியன் டாலர் கேள்வியின் ஒரு அங்கம்தான் இத்திரைப்படம்.

-க.விக்னேஷ்வரன்

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x