

“எது சரியாகத் தொடங்கப்பட்டதோ அது தவறாகவே முடியும். எது தவறாகத் தொடங்கப்பட்டதோ அது மோசமாக முடியும்” - இது மர்ப்பி விதி. இதை அடிநாதமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் 1995-ம் ஆண்டு வெளிவந்த ‘12 மங்க்கீஸ்’.
உலகப் புகழ் பெற்ற நகைச்சுவைக் குழுவான ‘மாண்டி பைத்தான்’-ன் ‘மாண்டி பைத்தான் அண்ட் தி ஹோலி க்ரெய்ல்’ மற்றும் ‘டைம் பேண்டிட்ஸ்’ போன்ற படங்களை இயக்கிய டெர்ரி கில்லியம் இயக்கிய ‘12 மங்க்கீஸ்’ திரைப்படம் வைரஸ் தொற்றை மற்றும் காலப் பயணத்தை (Time Travel) கலந்து எடுக்கப்பட்ட விறுவிறுப்பான அறிவியல் புனைவுத் திரைப்படம்.
ஹாலிவுட்டின் ஆக்ஷன் ஹீரோக்கள் ப்ரூஸ் வில்ஸ் மற்றும் ப்ராட் பிட் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நடிப்புத் திறமையை வெளிக்காட்டிய திரைப்படம் ‘12 மங்க்கீஸ்’. ‘லா ஜெட்டி’ என்ற 28 நிமிடங்கள் ஓடக்கூடிய பிரெஞ்சுக் குறும்படத்தைத் தழுவியே ‘12 மங்க்கீஸ்’ திரைப்படம் உருவானது.
வைரஸைத் தேடிக் காலப் பயணம்
1996-ம் ஆண்டு கொடிய வைரஸ் ஒன்று பரவி 5 பில்லியன் மக்களைக் கொன்று விடுகிறது. இந்த நாசக்கார செயலைச் செய்தது 12 மங்க்கீஸ் என்ற குழு என்று கண்டறியப்படுகிறது. உயிர் பிழைத்த, எஞ்சிய மக்கள் பூமிக்கு அடியில் பாதாளத்தில் வாழ ஆரம்பிக்கிறார்கள். பூமியின் மேற்பரப்பில் விலங்குகள் சுதந்திரமாகத் திரிய ஆரம்பிக்கும்.
இப்படியே 39 வருடங்கள் ஓடிவிடும். 2035-ம் ஆண்டு பூமிக்கு அடியில் வாழும் மக்கள் காலப் பயணத்தைப் பயன்படுத்தி 1996-ம் ஆண்டு வைரஸ் பரவுவதற்கு முன்பே அந்த வைரஸின் மூல வடிவைக் கைப்பற்றிக் கொண்டு வந்தால் மருந்து கண்டுபிடித்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் திட்டம் போடுவார்கள். காலப் பயணத்தின் பாதிப்பைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சரியான ஆளைத் தேட ஆரம்பிப்பார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் நபர் பாதாள உலகின் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜேம்ஸ் கோல்.
1996-ம் ஆண்டுக்குக் காலப் பயணத்தில் அனுப்பப்படுவார் ஜேம்ஸ் கோல். ஆனால், தவறுதலாக 1990-ம் ஆண்டுக்குச் சென்றுவிடுவார். அங்கே போலீஸால் கைது செய்யப்பட்டு மனநல மருத்துவத்தில் அனுமதிக்கப்படுவார். தான் எதிர்காலத்திலிருந்து வந்திருப்பதையும் இன்னும் ஆறு வருடத்தில் உலகம் அழியப் போகிறது என்றும் அவர் சொல்வதை யாரும் கேட்கத் தயாராக இருக்க மாட்டார்கள். இதுபோக ஜேம்ஸை சிறு வயதிலிருந்து பாடாய்ப் படுத்தும் ஒரு கெட்ட கனவு வேறு அவரை வதைத்து எடுக்கும். அவரிடம் கரிசனையாக நடந்துகொள்ளும் ஒரே நபராக மனநல மருத்துவர் கேத்ரின் மட்டும் இருப்பார்.
மனநலக் காப்பகத்தில் ஜேம்ஸுக்கு ஜெஃப்ரி என்பவர் நண்பர் ஆவார். மனநிலைப் பிறழ்வு கொண்ட ஜெஃப்ரியின் உதவியால் அந்தக் காப்பகத்திலிருந்து தப்பிப்பார் ஜேம்ஸ். மீண்டும் காலப் பயணம் மூலம் 2035-ம் ஆண்டுக்கு இழுக்கப்படும் ஜேம்ஸ் விஞ்ஞானிகளிடம் பல தகவல்களைப் பெற்றுவிட்டு மீண்டும் காலப் பயணம் மேற்கொள்வார். இந்த முறை அவருக்கும் கேத்ரினுக்குமிடையே காதல் மலரும். ஜேம்ஸ் வைரஸைக் கைப்பற்றினாரா? கேத்ரினுடன் வாழ்வில் இணைந்தாரா? தன்னை வதைக்கும் கனவுக்கு விடை கண்டாரா என்பதைப் பல திருப்பங்களுடன் கடைசி நிமிடம் வரை பரபரப்பாகச் சொல்லி இருப்பார்கள் ‘12 மங்க்கீஸ்’ படத்தின் திரைக்கதை எழுத்தாளர்கள் டேவிட் பீப்பள்ஸ், ஜேனட் பீப்பள்ஸ் மற்றும் இயக்குநர் டெர்ரி கில்லியம்.
இந்தத் திரைப்படத்தில் முக்கிய கவனம் ஈர்த்தவர் ப்ராட் பிட் தான். மனநலக் காப்பகத்தில் மனநலம் சரியில்லாத ஜெஃப்ரி கதாபாத்திரத்தில் தன் நடிப்புத் திறமையை அட்டகாசமாக வெளிப்படுத்தியிருப்பார். வித்தியாசமான உடல் மொழி, வேடிக்கையான வசன உச்சரிப்பு என்று அவர் நடிப்புக்கு ஆஸ்கர் பரிந்துரையும் கோல்டன் குளோப் விருதும் கிடைத்தது.
தொலைக்காட்சியில்...
‘12 மங்க்கீஸ்’ படத்தைத் தழுவி அதே பெயரில் 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நான்கு பகுதிகளாகத் தொலைக்காட்சி தொடர் வெளியாகி பெரும் வெற்றி அடைந்தது.
வைரஸ் படங்கள் என்றாலே புரியாத அறிவியல் விஷயங்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை விறுவிறுப்பான ஆக்ஷன் கலந்த காலப் பயணத்தை வைத்தும் கதை சொல்லலாம் என்று நிரூபித்த ‘12 மங்க்கீஸ்’ திரைப்படம் பார்க்க வேண்டிய ஒன்று.
க.விக்னேஷ்வரன்