

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த வரும் ஊரடங்கு நாட்களில் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப் பற்றி 'இந்து தமிழ்' திசை இணையதளம் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறோம்.
“இப்புவியின் மீதான மனிதனின் ஏகோபித்தமான சர்வாதிகாரத்துக்கு ஒரே எதிரி வைரஸ்”-புகழ்பெற்ற நுண்ணுயிர் விஞ்ஞானி ஜோஷ்வா லுடெர்பெர்க்கின் இந்த வார்த்தைகள்தான் எவ்வளவு ஆழமானவை..!?.
தன்னுடைய அறிவு மமதையால் இயற்கையைச் சூறையாடும் மனித இனம் தன்னை விடப் பல மில்லியன் அளவு சிறிய வைரஸைக் கண்டு அஞ்சுவதுதான் இயற்கையின் முரண். ஆனால் அதே மனிதன் அந்த வைரஸை ஆயுதமாக மாற்ற யத்தனித்தால் என்னவாகும் என்பதைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் படம்தான் 1995-ம் ஆண்டு வெளிவந்த ‘அவுட்பிரேக்’.
‘ஏர்ஃபோர்ஸ் ஒன்’, ‘ட்ராய்’ போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய வுல்ஃப்கேங்க் பீட்டர்சன் இயக்கிய இத்திரைப்படம், எழுத்தாளர் ரிச்சர்ட் ப்ரஸ்டன் எழுதிய ‘தி ஹாட் ஸோன்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. டஸ்டின் ஹோஃப்மேன், மோர்கன் ஃப்ரீமேன், கெவின் ஸ்பேசி, க்யூபா குட்டிங் ஜூனியர் போன்ற நடிப்புலக ஜாம்பவான்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம் இன்றளவும் வைரஸ் திரைப்படங்களுக்கு ஒரு முன்னோடி.
ஆயுதமாகும் வைரஸ்
1967-ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் தோன்றும் ‘மொட்டாபா’ எனும் வைரஸை வெளியுலகுக்குத் தெரியாமல் அமெரிக்க அரசாங்கம் முடக்கிவிடுகிறது. 28 வருடங்கள் கழித்து மீண்டும் மொட்டாபா பரவ ஆரம்பிக்கிறது. இந்த முறை அது தன் எல்லையை அமெரிக்கா வரை விரித்துவிடும். ஆரம்பத்திலேயே இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று களத்தில் இறங்கும் நல்லுள்ளம் கொண்ட ராணுவ மருத்துவர் சாம் டேனியல்ஸ் இதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க முனைவார்.
ஆனால், இதை ஓர் ஆயுதமாக்க நினைக்கும் ராணுவ உயரதிகாரிகள் டேனியல்ஸின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவார்கள். அதற்குள் வைரஸ் தொற்று கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு ஊரை முழுக்க கபளீகரம் செய்ய ஆரம்பித்துவிடும். 28 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வைரஸ் பரவிய ஆப்பிரிக்கா கிராமத்தையே வெளியுலகத்துக்குத் தெரியாமல் குண்டு போட்டு அமெரிக்க அரசாங்கம் அழித்திருக்கும். தங்கள் சொந்த மண்ணிலும் அதையே செய்ய முடிவெடுப்பார்கள்.
2,600 பேர் கொண்ட ஊரைக் குண்டு போட்டு அழிக்க முடிவெடுப்பார்கள் ராணுவ அதிகாரிகள். இந்நிலையில் உடல் தொடுகையின் மூலம் பரவி வந்த வைரஸ் மேம்பட்டு காற்றின் மூலம் பரவ ஆரம்பிக்கும். இவை அனைத்துக்கும் இடையில் ராணுவ மருத்துவர் சாம் டேனியல் வைரஸ் தொற்றுக்கான மருந்தைக் கண்டுபிடித்தாரா, மக்களைக் காப்பாற்றினாரா என்பதே படத்தின் கதை.
பயோ வார் என்ற சொல் பொதுவெளியில் அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லாத 1995-ம் ஆண்டே அதைப் பற்றிய நேர்மையான பதிவாக வெளிவந்தது ‘அவுட்பிரேக்’ திரைப்படம். வெறும் வைரஸ் தொற்றை மட்டும் சொல்லும் வறட்சியான திரைக்கதையாக இல்லாமல் ஆக்ஷன், சென்டிமென்ட் என்று அனைத்தும் கலந்து ஓர் சுவாரசியமான திரைக்கதையாக இத்திரைப்படத்தை வடிவமைத்திருப்பார்கள் இத்திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர்கள் லாரண்ஸ் ட்வோரட் மற்றும் ராபர்ட் ராய் பூல்.
அவர்களின் எழுத்துகளை அருமையான காட்சி மொழியாக மாற்றி தன் திறமையை நிரூபித்திருப்பார் இயக்குநர் வுல்ஃப்கேங்க். சன்னமாக ஆரம்பிக்கும் தொற்று எப்படி பூதாகரமாக மாறுகிறது என்பதைத் தெளிவான காட்சிப் படுத்துதல் மூலம் பதிவு செய்திருப்பார். வைரஸ் தொற்று என்பது எவ்வளவு ஆபத்தானது என்பது இத்திரைப்படம் பார்த்து முடிக்கும்போது புரியும். ஒரு சிறு தீண்டல் அல்லது ஒரு முறை உள்ளிழுக்கும் மூச்சுக் காற்று போதும் நம்மை வைரஸுக்கு பலிகொடுக்க. அதனால் சமூக விலகலைக் கடைப்பிடிப்போம். வீட்டில் தனித்திருப்போம், மேலும் நல்ல சினிமாக்களைப் பார்ப்போம்.
-க.விக்னேஷ்வரன்