

கோவிட்- 19 வைரஸ் தொற்று காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் அனைவருக்கும் நேர்ந்துள்ளது. நாலு சுவருக்குள் அடைபட்டுக் கிடப்பது என்பது பெருங்கொடுமைதான். இந்த அவதியான நேரங்களை எப்படிக் கழிப்பது? மனித இனத்தின் பிரதானப் பொழுதுபோக்கு சினிமாதான் இதற்குச் சிறந்த பதிலாக இருக்க முடியும்.
சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமூகத்துக்குப் பல விஷயங்களைப் போதிக்கும் தளமாகவும் இருக்கிறது. அதனால் அடுத்த 18 நாட்களும் உலக அரங்கில் வெளிவந்த வைரஸ் தொற்று பற்றிய தரமான உலக சினிமாவைப் பற்றி 'இந்து தமிழ்' திசை இணையதளம் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறோம்.
'93 டேஸ்' (93 days)
2014-ம் ஆண்டு நைஜீரியாவில் ஏற்பட்ட எபோலா நோய்த் தொற்றை அடிப்படையாகக்கொண்டு உண்மைக்கு வெகு அருகில் 2016-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட படம்தான் '93 டேஸ்' . நைஜீரியாவில் உண்மைச் சம்பவங்கள் நடந்த இடத்திலேயே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும். பொதுவாக உண்மைச் சம்பவங்களை உண்மைத் தன்மையுடன் படமாக எடுக்கும் போது அதில் ஆவணப் படச் சாயல் ஏற்பட்டு திரைக்கதை ஆமை வேகத்தில் நகர்ந்து நம் பொறுமையைச் சோதிக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் உண்மையையும் சுவாரசியக் காட்சி மொழியாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்திருப்பார் இயக்குநர் ஸ்டீவ் குகாஸ்.
வளர்ந்து வரும் நைஜீரிய இயக்குநர் இவர். நோய்த் தொற்றை மையமாக வைத்து திரைக்கதை நகர்ந்தாலும், படம் நெடுகிலும் மனித உறவுகள், இயற்கையின் முன்பு மனிதன் எவ்வளவு பலவீனமானவன், அரசியல் சீர்கேடுகள், மூட நம்பிக்கைகள் என்று பல விஷயங்களை நோக்கிக் கேள்விகள் எழுப்பப்படுவதே இந்தப் படத்தின் சிறப்பு.
கதைச் சுருக்கம்:
நைஜீரியாவில் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரம் லாகோஸ். தன்னுள் அடர்த்தியான 21 மில்லியன் மக்கள் தொகையை அடக்கியுள்ள லாகோஸ் நகரம் பல நாடுகளை ஆப்பிரிக்காவுடன் இணைக்கும் மையப்புள்ளி என்பதும் அந்நகரத்தின் தனிச்சிறப்பு. அந்த ஊருக்கு வரும் அரசின் முக்கிய அதிகாரி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. மருத்துவானையில் அனுமதிக்கப்படும் அவருக்கு ஆரம்பத்தில் மலேரியா இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனாலும் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் திறமையான பெண் மருத்துவரான அடடேவோ என்பவருக்கு ஒரு சிறு சந்தேகம் எழும்.
ஆப்பிரிக்காவின் பல பகுதிகளை எபோலா தன் நாச கரங்களால் வளைத்து இருந்தாலும் நைஜீரியா தப்பிப் பிழைத்திருந்தது. ஆனால் இனிமேல் நிலைமை அப்படியே தொடாரது என்பதை அவர் உணர்வார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அரசு அதிகாரியைத் தொடர்ந்து பரிசோதிக்க விரும்புவார். இதை ஒப்புக்கொள்ளாத அதிகாரி தன்னுடைய பதவி அதிகாரத்தைக் காட்டி மருத்துவமனை ஊழியர்களிடமும், மருத்துவர்களையும் மிரட்டுவார்.
ஆனால் அதையெல்லாம் கண்டிப்பு கலந்த கரிசனையோடு புறம் தள்ளிவிட்டுச் சிகிச்சையைத் தொடர்வார் அடடேவோ. அவருக்கு எபோலா உள்ளது என்பதை உறுதிப்படுத்தவே பல அரசியல் தடைகளைக் கடக்க வேண்டியிருக்கும். ஆனால் அதற்குள் அரசு அதிகாரி இறந்துவிடுவார். அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஊழியர்கள் என்று அனைவரும் எபோலா தொற்றுக்கு உள்ளாவார்கள். அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலம் சமூகத்தில் இந்த நோய் பரவாமல் இருப்பதைத் தடுக்க முடியும் என்பதை உணர்ந்து சிறப்புத் தனிமை மருத்துவமனையில் தஞ்சம் அடைவார்கள். அவர்கள் உயிர் பிழைப்பார்களா, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தினார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
இந்தியாவுக்கும் நைஜீரியாவுக்கும் பெரும் வித்தியாசங்கள் இல்லை என்பதை இந்தப் படம் பார்க்கும் போது உணர முடியும். ஒரு நோய்த் தொற்று ஏற்பட்டால் அது அரசாங்க அதிகாரிகளால் எப்படிப் பார்க்கப் படுகிறது அரசியல்வாதிகளால் எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதை நேர்மையாகப் பதிவு செய்ததே இத்திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.
இன்று நைஜீரிய மக்கள் நிம்மதியாக தங்கள் அன்றாட வாழ்க்கையைக் கடப்பதன் பின்னணியில் எபோலாவைக் கட்டுப்படுத்த தன் உயிரைத் தியாகம் செய்த மருத்துவர் அடடேவோ வழியில் சேவையாற்றும் பல மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவூட்டும் இத்திரைப்படம் உலக மருத்துவர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஒன்று.
- க.விக்னேஷ்வரன்.