Published : 24 Mar 2020 02:28 PM
Last Updated : 24 Mar 2020 02:28 PM

இன்று உலக காசநோய் தினம்: கரோனாவிடமிருந்து தற்காத்துக் கொள்ள தயார் நிலையில் தூத்துக்குடி காசநோய் சிகிச்சைப் பிரிவு

கோவில்பட்டி

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நெஞ்சக நோய், சுவாசக்கோளாறு, இதய நோய், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களை எளிதில் தொற்றும் ஆபத்து இருக்கும் நிலையில் தூத்துக்குடி மாவட்ட காசநோய் சிகிச்சைப் பிரிவு தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளும் தயார் நிலையில் இருப்பதாகக் கூறுகிறார் காசநோய் பிரிவு துணை இயக்குநர் கே.சுந்தரலிங்கம்.

தமிழகத்தில் ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை காசநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2025-ம் ஆண்டு காச நோய் இல்லாத இந்தியா என்ற இலக்கை நோக்கி மத்திய காச நோய் தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

உலக காசநோய் தினம் இன்று (மார்ச் 24-ம் தேதி) கடைபிடிக்கப்படுகிறது. காசநோயை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் கட்டுப்படுத்தலாம். கவனிக்காமல்விட்டால், புற்றுநோயாக மாறும் அபாயம் உள்ளது.

தொடர்ந்து 2 வாரம் இருமல், பசியின்மை, மாலை நேர காய்ச்சல், சளியில் ரத்தம் வருதல் ஆகியவை தான் காசநோய்க்கான அறிகுறி. இந்த நோய் 80 சதவீதம் எச்ஐவி உள்ளவர்களை எளிதில் தாக்கிவிடும். நகம், முடி தவிர மற்ற எல்லா இடங்களில் இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

காச நோய் என்பது மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே உள்ளது என்று கூறப்படுகிறது. ஆசிய கண்டம், தென் ஆப்பரிக்கா நாடுகளில் இந்த நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் 1962-ம் ஆண்டு மத்திய அரசு தேசிய காசநோய் தடுப்பு திட்டம் கொண்டு வந்தது.

இதில் எக்ஸ்ரே பரிசோதனை செய்து நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். ஆனால், அன்றைக்கு கிராமப்புறங்களில் உள்ள காச நோயாளிகளைக் கண்டறிவதில் ஏற்பட்ட சிக்கலால், அந்த முயற்சி முழுமையடையவில்லை.

அதன் பின்னர் 1992-ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. காசநோய் உள்ளவர்கள் என சந்தேகப்படுபவர்களை சிகிச்சைக்கு அழைத்து வந்து பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளிப்பது. வாரத்துக்கு 3 நாட்கள் காசநோயாளிகள் என கண்டறியப்பட்டவர்கள், மருத்துவக் குழுவினர் முன்னிலையில் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி காசநோய் பிரிவு துணை இயக்குநர்மருத்துவர் கே.சுந்தரலிங்கம் கூறும்போது, இந்தியாவில் 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் தேசிய காசநோய் அகற்றும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத்திட்டத்தில் காசநோயை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது. 2025-ல் காசநோய் இல்லாத இந்தியா என்ற ஸ்லோகத்தை கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும், இந்தத் திட்டத்தில் காசநோய் யாருக்கு எளிதில் வரும் என்பதைக் கண்டறிவதுதான். இதில், சர்க்கரை நோய், மதுபானம், புகைப்பழக்கம் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், ஹெச்,ஐ.வி. உள்ளவர்கள் என இவர்களுக்கு காசநோய் பரிசோதனை செய்வது.

இதில், அவர்களுக்கு காச நோய் கண்டறியப்பட்டால், சளி மாதிரி எடுத்து நாங்கள் கொடுக்கும் மாத்திரையால் நோய் கட்டுப்படுமா என்பதை பார்க்கிறோம். கட்டுப்படவில்லையென்றால் மாற்று மருந்தை அளிக்கிறோம்.

காச நோய், கரோனா வைரஸ் போன்று தொடுவதால் பரவாது. ஏற்கெனவே காசநோய் சிகிச்சைப் பிரிவில் வந்து செல்பவர்களுக்கு கிருமி நாசினிகள் வழங்கப்படுவது வழக்கம். காசநோயாளிகளும் பெரும்பாலும் முகக் கவசங்களுடன் தான் இருப்பர்.

அதனால், வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கை எல்லாமே பின்பற்றப்படுகிறது. கரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் தயார் நிலையில்தான் காசநோய் சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளது.

இதனைத் தடுக்க உடல் சுகாதாரம், சுற்றுப்புற சுகாதாரத்தை பேண வேண்டும். பசி குறைந்தால், சளியில் ரத்த வந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உலக தரம் வாய்ந்த மருந்துகள் இங்கே கிடைக்கிறது. மாத்திரை எடுக்க தொடங்கிய 2 வாரத்தில் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம்.

காசநோயாளிகளுக்கு மாத்திரையை போன்ற முக்கியம் புரசத்து உணவும் மிக முக்கியம். முட்டை, மீன், பேரிச்சம்பழம், பால், தானியங்கள், நிலக்கடலை உள்ளிட்டவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சத்தான உணவு எடுத்துக்கொள்ள காச நோயாளிகளுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ரூ.500 வழங்குகிறது. மேலும், உழவர் பாதுகாப்பு அட்டை வைத்துள்ள காச நோயாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1000 கிடைக்கிறது.

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு 80 ஆயிரம் காச நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் இதன் எண்ணிக்கை 17 லட்சமாக பதிவாகி உள்ளது. தேசிய காச நோய் அகற்றும் திட்டத்தை தீவிரப்படுத்தினால் ஓராண்டுக்குள் கண்டிப்பாக காச நோயை கட்டுப்படுத்தி விடலாம், என்றார் அவர்.

புரதச்சத்து உணவு வழங்கல்

கோவில்பட்டி வட்டத்தில் காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தினமும் புரதசத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் காசி விஸ்வநாதன் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காச நோயாளிகளுக்கு இலவச சத்துணவு திட்ட ஒருங்கிணைப்பாளர் விநாயகா ரமேஷின் ஏற்பாட்டில் புரதச்சத்து உணவுகள் வழங்கி வருகிறது. காச நோயாளிகளுக்கு புரதசத்து முக்கியமானது. இது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.

ஒரு நபருக்கு ஒரு முட்டை, அவித்த தானியங்களான கொண்டைக்கடலை, பாசிப்பயிறு உள்ளிட்டவைகள் கொடுக்கிறோம். ஞாயிற்றுக்கிழமைகளை தவிர, தினமும் காலை 8 மணி முதல் மதியம் 1 வரை வழங்கிறோம்.

இந்த புரதசத்து உணவுகள் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. ஏராளமானோர் காச நோயில் இருந்து முழுமையாக விடுபட்டுள்ளனர், என்றார்.

1996 முதல் கடைபிடிப்பு

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ராபர்ட் காட்ச் என்பவர் 1882-ம் மார்ச் 24-ல் காச நோயை கண்டுபிடித்தார். 100 ஆண்டுகளுக்கு பின் 1982-ல் மார்ச் 24-ஐ உலக காச நோய் தினமாக கடைபிடிக்க வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின. 1996-ம் ஆண்டு தான் உலக சுகாதார அமைப்பு, ஆண்டுதோறும் மார்ச் 24-ம் தேதி உலக காச நோய் தினம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x