Published : 20 Mar 2020 05:01 PM
Last Updated : 20 Mar 2020 05:01 PM

சிட்டுக்குருவிக்கு ஏன் தட்டுப்பாடு?- இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்

உலக சிட்டுக்குருவிகள் நாள் ஆண்டுதோறும் மார்ச் 20-ம் தேதி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி, அதன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010-ல் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான உயிரியல் பல்வகைமை (biodiversity) மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறவும் இந்நாள் பயன்படுகிறது.

மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில்நுட்பப் புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்குத் தள்ளப்பட்டுள்ளது. குருவிகளில் இந்த அழிவை 1990களிலேயே முதன்முதலாக அறிவியலாளர்கள் அவதானித்தார்கள். இவற்றுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன.

குருவிகள் குறைந்தது ஏன்?
எரிவாயுக்களில் இருந்து வெளியேறும், மெத்தைல் நைட்ரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.

முன்பெல்லாம் கிராமங்களிலும் வீடுகளிலும் தென்னங்கீற்றால் பந்தல் அமைத்திருந்தனர். அதில் சிட்டுக்குருவிகள் வீடு கட்டி வாழ்ந்து வந்தன. ஆனால் இன்று வீடுகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளாலும் , கான்கிரீட் கட்டிடங்களாகவும் மாறிவிட்டதால் குருவிகள் கூடு கட்ட முடியாமல் போனது.

ஒரு காலத்தில் தானியங்களை வீட்டின் முற்றத்தில் காயப்போடுவார்கள். அப்பொழுது அங்கு வரும் சிட்டுக் குருவிகள் தானியங்களை உணவாக உண்ண வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தற்போது நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை. இதனாலும் சிட்டுக் குருவிகள் குறைந்து வருகின்றன.

மேலும், வீடுகளில் உணவு உண்ட பின் கழுவும் தட்டுகளில் இருந்த பருப்புகள், உணவைக் கூட சிட்டுக்குருவிகள் உண்டு வாழ்ந்தன. இன்று வீடுகளுக்குள் கழுவும் முறை வந்தவுடன் அனைத்தும் பாதாள சாக்கடையில் சென்று சேருவதால் அதற்கும் வழி இல்லை.

சரி! வீடுகளில் தான் உணவு தானியங்கள் இல்லை என்று விவசாய நிலங்கள், வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் சென்று பார்க்கும் சிட்டுக்குருவிகளுக்கு ஏமாற்றமே மிச்சம். பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் மீண்டும் திரும்புகின்றன உணவைத் தேடி...

உலகில் ஒவ்வொரு உயிரினமும் மிக முக்கியம். எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமானால், இப்போது மிக வேகமாக உலகெங்கிலும் பரவி வரும் கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர். எந்த ஒரு புதிய மருந்தானாலும் அதை எலிகளைக் கொண்டு சோதனை செய்வது வழக்கம். அது கூட ஒரு குறிப்பிட்ட வகை எலியைக் கொண்டே சோதனை நடைபெறுமாம். அத்தகைய குறிப்பிட்ட வகை எலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே பல்லுயிர்ப் பெருக்கத்தில் ஒவ்வொரு உயிரினமும் மிகவும் அவசியம்.

குருவிகளைக் காக்கும் வழி
குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிட்டுக் குருவிகளை காக்கும் பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும், தோட்டம் அமைக்க வேண்டும்.

பயிர்கள், தாவரங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது. குருவிகள் குடிக்க கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். வீட்டு முன், மொட்டை மாடியில் தானியங்களைத் தூவ வேண்டும். மண் பானையில் வைக்கோல் வைத்தால், குருவிகள் கூடு கட்டப் பயன்படும். ஆகவே வீடுகளில் சிட்டுக் குருவிகள் வந்து போக கூடுகளை அமைப்போம். சிட்டுக்குருவிகள் இனம் அழியாமல் காப்போம்!

- கு.கண்ணபிரான், ஆசிரியர், கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர், உடுமலை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x